பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
கொரோனா லாக்டவுன் காரணமாக நாம் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளோம். இந்தச் சூழலில் நாம் என்னென்ன செய்யலாம் எனும் ஆலோசனைகள் நமக்கு நாலா திசைகளிலும் இருந்தும் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.
அவை அனைத்தையுமே செயல்படுத்துவது நடைமுறையில் சாத்தியமில்லை. ஏனெனில் ஒவ்வொரு மனிதனுமே தனித்துவமானவன். நமக்கென விருப்பு வெறுப்புகள் இருக்கவே செய்யும்.
ஆனால் மனிதர்களுக்குப் பொதுவான, மனிதனது நாகரிக வாழ்வுக்கு முக்கியமான, ஆனால் தற்போது நாம் செய்வதற்கு மறந்த சிற்சில பழக்கங்கள் நமது மரபணுவில் நிச்சயம் பதிந்திருக்கும்.

அவற்றை அனைவராலுமே மகிழ்வுடன் செய்ய இயலும். அவற்றுள் முதன்மையானது புத்தக வாசிப்பு!
ஆம்! இருபது ஆண்டுகளுக்கு முன்பு மக்களில் பெரும்பான்மையோருக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருந்தது. நூலகங்கள் நண்பர்கள் சந்தித்துக்கொள்ளும் இடமாக இருந்தன.
நண்பர்களுக்குள் நள்ளிரவு வரை இலக்கியங்கள் குறித்த விவாதங்கள் நீண்ட ஆச்சர்யமான நாள்களும் ஒருகாலத்தில் இருந்தன!
ஆனால், இப்போது குறைவான மனிதர்களிடமே புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருப்பது சற்று வேதனை அளிக்கக்கூடியதுதான். அதிலும் ஸ்மார்ட்போனின் வருகைக்குப் பின் வாசிக்கும் பழக்கம் மட்டுப்பட்டுக்கொண்டே போவது நிதர்சனம்.
அறிவு வளர்ந்து முதிர முதிர வாய் தன் வேலையைக் குறைத்துக் கொள்ளுமாம். அந்த வகையில் அறிவை முதிரச் செய்வன புத்தகங்கள்.
அறிவையும், அனுபவத்தையும் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதில் புத்தகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன!
புத்தகங்கள் வெறும் காகிதக் குவியல்கள் அல்ல, அவை அக உலகின் ஜன்னல்கள்! அறிவின் வாயில்கள்!
ஒரு வாசிப்பு அனுபவம்:
“ராணிகாமிக்ஸ் கதையில் ஆரம்பித்தது பசுமையாய் நினைவில் இருக்கிறது. மாயாவியின் முகத்தை இறுதிவரை பார்க்க முடியாமல் இருப்பதே பெரும் சுவாரஸ்யம். அடுத்ததாய் அறிமுகமானவை ராஜேஸ்குமாரின் க்ரைம் நாவல்கள். அவை விவேக்கை ஆதர்ஷ கதாநாயகனாய் வரித்துக்கொண்ட தருணங்கள். இவ்வளவு சுலபமாய் அறிவியலை அறிந்துகொள்ள முடியுமா என பெரும் வியப்பு உண்டாக்கிய நாள்கள் அவை.

அதன் பிறகு வந்தவை நூலகங்களே கதியாய்க் கிடந்த மகிழ்வான நாள்கள்.
சுஜாதா, பாலகுமாரன், சாண்டில்யன் நாவல்கள் கிடைத்துவிட்டால் பெரும் பொருட்குவியல் கிடைத்ததாய் மகிழ்ச்சி மேலிடும். அறிவியல் பற்றிய பார்வையையும், வாசிப்பு அனுபவத்தையும் புரட்டிப் போட்ட சுஜாதா எழுத்துகள், புதுமுகச் சிந்தனையின் வாசலாக பாலகுமாரன் எழுத்துகள், வரலாற்றின் வாயில்களை வித்தியாசமாய் திறந்த சாண்டில்யன் எழுத்துகள் என ஆரம்ப கால வாசிப்பு அனுபவம் இனிமையானது.
பல நாழிகைகள், நடுசாமம் வரை விழித்திருந்து சாண்டில்யனின் வருணனைகளைப் பருகிய சுவாரஸ்ய தருணங்கள். உடையார் படித்துவிட்டு உடைந்து போனது, ஏன் எதற்கு எப்படி படித்துவிட்டு அறிவுப் பசியில் அலைந்தது, பொன்னியின் செல்வனைப் படித்து வந்தியத் தேவனாய் வசித்தது நினைவலைகளில் வந்து வந்து போகின்றது.
தான் தூக்கிலிடுவதற்கு முந்தைய நிமிடம்வரை புத்தகம் வாசித்துக்கொண்டிருந்தார் பகத்சிங்!
கூகுள் நிறுவனத்தை உருவாக்கிய லாரி பேஜ் மற்றும் செர்ஜி ப்ரின் ஆகிய இருவரும் தீவிர புத்தக வாசிப்பாளர்களே! புத்தக வாசிப்பு தெளிவான சிந்தனையுடன், வாழ்வில் பெரும் வெற்றியைத் தரும் என்பதை கூகுள் நிறுவனர்கள் தமது வெற்றி மூலமாக நிரூபித்து வரும் தற்கால உதாரணமாகத் திகழ்கின்றனர்.
புத்தக வாசிப்பின் மூலமே புதிய சிந்தனையைப் பெற முடியும் என்று இவர்கள் நம்பினர்.
எல்லாவற்றுக்கும் இணையத்தையே,
குறிப்பாக கூகுளையே நம்புவோர்க்கு,
புத்தக வாசிப்புதான் புதிய சிந்தனையைத் தரும் என்பதை இவர்கள் தங்களின் வெற்றி மூலமே நிரூபித்துள்ளனர்!
அடுத்து இவர்கள் என்ன கண்டுபிடிக்கப் போகிறார்கள் என உலகமே இந்தப் புத்தகக் காதலர்களுக்காக தற்போது காத்துக்கொண்டிருக்கிறது.
இணைய அறிவே வேண்டாமா? என்றால் அவசியம் வேண்டும்! உணவாக அல்ல! ஊறுகாயாக!
இணையம் மூலம் நாம் அறிவது தகவல்கள் மட்டுமே. சுய சிந்தனையே கண்டுபிடிப்புகளின் தாயாகும். அதற்கு அடித்தளமிடுபவை புத்தகங்களே!
நாம் சில நாள்களுக்கு முன் இணையம் மூலம் தேடிப் பெற்ற தகவல் தற்போது நமக்கு நினைவில் இருக்காது. ஆனால், எப்போதோ சிறு வயதில் படித்தவை நமது நினைவில் இருக்கும். ஏனெனில் இணையம் தகவல். புத்தகம் அறிவு.

ஆனால், வாசிப்பில் நாம் முக்கியமாக நினைவுகூறத்தக்க ஒரு அம்சம் என்னவெனில் ஒரு புத்தகம் குறித்த எதிர்மறை கருத்துகளை அறிந்த பின்பு அப்புத்தகத்தினை வாசிப்பதில் எவ்விதப் பயனும் ஏற்படாது என்பதே. எனவே, வாசிப்பு என்பது எப்போதும் நேர்மறை தன்மையுடையதாக, நடுநிலையுடையதாக இருப்பது சிறந்தது.
மேலும், ஒரு புத்தகம் மனிதர்களால் புரிந்துகொள்ள முடியாமல் போவது வாசிப்பின் மிகப்பெரிய சவால். ஒரு புத்தகம் புரிந்து கொள்ளப்படாமல் போவதற்குப் எழுத்தாளன் மற்றும் வாசகன் ஆகிய இருவருக்குமே சமமான பொறுப்புண்டு.
புத்தகங்கள் உலகை உங்கள் பக்கம் திருப்ப வல்லவை! எனவே அன்பு நண்பர்களே, நேரமில்லை என்று சாக்கு கூறுவதை உதறிவிட்டு புத்தகவாசிப்பின் பக்கம் உங்களின் கவனத்தைத் திருப்புங்கள்.
புத்திசாலி எப்போதும் சூழ்நிலைகளை தனக்குச் சாதகமாக மாற்றிக்கொள்வான்.
தேவையே கண்டுபிடிப்புகளின் தாய் என்பதால், வேறு வழியே இல்லை எனும் நெருக்கடியான சூழலில்தான் அரும்பெரும் கண்டுபிடிப்புகள் உருவாகின. தற்போதும் அத்தகைய கண்டுபிடிப்புகள் நிகழ வாய்ப்புண்டு. அதற்கான சூழ்நிலை தற்போது உங்கள் கைகளில் இருக்கிறது.

எனவே நீங்கள் வாசிப்பது மட்டுமல்லாது,
உங்கள் குழந்தைகளையும் வாசிக்க ஊக்குவியுங்கள். புத்தகங்களைக் குழந்தைகளுக்கு பரிசாகக் கொடுங்கள்.
குழந்தைகளுக்கு உங்களின் மிகச்சிறந்த வழிகாட்டலாக இது அமையும்.
அடுத்தவர் அறிவைக் கடன் வாங்கிக்கொண்டே இருக்காமல், சுயமாகச் சிந்திப்போம். புதிய புதிய கண்டுபிடிப்புகளை நமது குழந்தைகள் உருவாக்கத் தூண்டுவோம்.
வாசிப்போம்! வானமளவு யோசிப்போம்!
–அகன் சரவணன்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.