கொரோனா வைரஸின் தாக்கம் இன்று உலக நாடுகளை வாட்டி வதைத்துக்கொண்டிருக்கிறது. சீனாவில் தொடங்கிய இதன் பாதிப்பு இன்று உலக வரைபடம் முழுவதும் பரவியிருக்கிறது. கொரோனா பாதிப்பால் தொழில்கள், வர்த்தகங்கள் முடங்கியுள்ளன.

இதனால் மிகப்பெரிய அளவில் நீண்ட கால பொருளாதார பாதிப்புகள் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் ஏற்படக்கூடிய பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள பல்வேறு நாடுகளும் இடைக்கால நிவாரணங்களை அறிவித்து வருகின்றன.

கொரோனா வைரஸ் – உலகம்

இந்திய அரசு ஒரு இலட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி மதிப்பிலான பொருளாதார நிவாரணங்களை வழங்கப்போவதாக அறிவித்துள்ளது. மாநில அரசுகள் தங்களுடைய நிதி ஆதாரங்களுக்கு உட்பட்டு பொருளாதார நிவாரணங்களை அறிவித்து வருகின்றன.

இதற்கு மத்தியில் தனிநபர், நிறுவனங்களும் நிவாரணத்திற்கு பங்களிப்பு அளிக்க முன்வர வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் அழைப்புவிடுத்துள்ளன. மாநில முதல்வர் நிவாரண நிதிக்கும் நன்கொடைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தேசிய அளவில் கொரோனா போன்ற பாதிப்புகளை எதிர்கொள்ள பி.எம்.கேர்ஸ் (PM CARES) என்கிற புதிய நிதியை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

பிரதமர் மோடி

இதைப் பற்றிய அறிவிப்பை பிரதமர் மோடி கடந்த சனிக்கிழமை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில், “மக்கள் கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க விருப்பம் தெரிவித்திருந்தனர். அதற்கு மரியாதை அளிக்கும் விதமாக பி.எம்.கேர்ஸ் நிதி உருவாக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவதில் இது மிகப்பெரிய பங்களிப்பு புரியும்” என்று தெரிவித்திருந்தார்.

Also Read: றெக்கை கட்டிய விஜயபாஸ்கர் மீம்ஸ்… ஓரங்கட்டிய எடப்பாடி பழனிசாமி!

பிரதமரின் அறிவிப்பை தொடர்ந்து பிரபலங்கள், பெரு நிறுவனங்கள் பி.எம்.கேர்ஸ் நிதிக்கு முன்வந்து நன்கொடைகள் அளித்தன. நடிகர் அக்‌ஷய் குமார் ரூ.25 கோடி நன்கொடை அளிப்பதாக தன்னுடைய ட்விட்டரில் அறிவித்துள்ளார். அதானி குழுமம் ரூ.100 கோடி நன்கொடை அளிப்பதாக அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து பல நிறுவனங்களும் தங்களுடைய சி.எஸ்.ஆர் நிதியிலிருந்து பி.எம். கேர்ஸ் நிதிக்கு நன்கொடை அளித்துள்ளன. லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களும் தங்களுடைய சி.எஸ்.ஆர் நிதியிலிருந்து பி.எம் கேர்ஸ் நிதிக்குப் பங்களிப்பு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பி.எம். கேர்ஸ்

பி.எம்.கேர்ஸ் நிதிக்கு அளிக்கப்படும் நிறுவனங்களின் நன்கொடைகள் சி.எஸ்.ஆர் நிதியில் செலவிடப்பட்டதாகக் கணக்கில் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் தற்போது புதிய சர்ச்சை எழுந்துள்ளது. ஏற்கெனவே பிரதமரின் தேசிய நிவாரண நிதி நீண்ட காலமாகச் செயல்பட்டு வருகிறபோது புதியதொரு நிதியை பிரதமரின் பெயரில் ஏன் உருவாக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பி வருகின்றன.

பிரதமர் தேசிய நிவாரண நிதி என்றால் என்ன?

1948-ம் ஆண்டு பாகிஸ்தானிலிருந்து இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கு உதவ வேண்டும் என்கிற நோக்கில் பிரதமர் தேசிய நிவாரண நிதி உருவாக்கப்பட்டது. அதற்குப் பிறகு பேரிடர் போன்ற காலங்களில் பிரதமரின் இந்த நிதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது முழுக்கத் தன்னார்வலர்கள் மற்றும் நிறுவனங்களின் பங்களிப்பின் மூலம் மட்டுமே செயல்படுகிற நிதி. இதில் அரசு சார்பில் எந்தப் பங்களிப்பும் கிடையாது. இதற்கு அளிக்கப்படுகிற நன்கொடைகளுக்கு 100% வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் தேசிய நிவாரண நிதியில் ரூ.3,800 கோடி வரை செலவு செய்யப்படாமலே இருப்பதாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.

பிரதமர் தேசிய நிவாரண நிதி

Also Read: `நெல்லையில் 22 பேருக்குக் கொரோனா!’ – மூடப்பட்ட மேலப்பாளையம் சாலைகள்

பி.எம்.கேர்ஸ் நிதி தொடர்பாகப் பல்வேறு தரப்பினரும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. பி.எம்.கேர்ஸ் நிதி பற்றி வேறு எந்தத் தகவலும் தெரியவரவில்லை. வழக்கறிஞர் மனோஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பி.எம்.கேர்ஸ் நிதி தொடர்பாகப் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்.

அதில்,

– எந்தச் சட்டத்தின் கீழ் இது பதிவு செய்யப்பட்டுள்ளது?

– இவ்வளவு அவசரமாகப் புதிய நிதி உருவாக்குவதற்கான தேவை என்ன?

– இதற்கான நன்கொடைகளுக்கு வரிவிலக்குக் கிடைக்குமா?

– வெளிநாடு வாழ் இந்தியர்கள் நன்கொடை அளிக்க முடியுமா? அப்படியென்றால் அதற்கான வழிமுறைகள் எல்லாம் எப்போது செய்து முடிக்கப்பட்டன?

பிரதமர் தேசிய நிவாரண நிதி

வெளிநாட்டு நிதி பெற அனுமதி பெற வேண்டுமென்றால், வருமான வரி விலக்கு பெற வேண்டுமென்றால் அதற்கு முறையாகப் பதிவு செய்யப்பட்டு உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டிருக்க வேண்டும். இவையெல்லாம் எப்போது நடந்தன என்பது போன்ற கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகின்றன.

மேலும் இவ்வளவு நெருக்கடியாக ஒரு காலகட்டத்தில் இவ்வளவு வெளிப்படைத்தன்மையற்ற நிதியை உருவாக்குவதில் எதிர்க்கட்சித் தலைவரை கலந்தாலோசிக்க வேண்டும் என்கிற மரபும் கடைப்பிடிக்கப்படவில்லை என்றும் விமர்சனம் வைக்கப்படுகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.