கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவை தவிர யாரும் வெளியே செல்லக் கூடாது என்று அறிவுறுத்தப்படுவதால், பொதுமக்கள் பலரும் வெளியே செல்வதைத் தவிர்த்துள்ளனர். இந்த நிலையில்தான், பொதுமக்கள் காய்கறிகள் கிடைக்காமல் சிரமப்படுகிறார்கள் என்று அறிந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த இயற்கை விவசாயி மூர்த்தி, சுமார் 1,000 கிலோ காய்கறிகளை டெம்போ வாகனத்தில் எடுத்துச் சென்று, ஏழை, எளிய குடும்பங்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று ஒவ்வொருவருக்கும் தலா 5 கிலோ வீதம் கொடுத்து அசத்தியுள்ளார்.

இயற்கை விவசாயி மூர்த்தி

இயற்கை விவசாயி மூர்த்தி 144 தடை சட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்து பொதுமக்களுக்காகப் பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்து வருகிறார். ஏற்கெனவே, பொதுமக்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்காக, ஆவாரம்பூ சூப், முடக்கத்தான் சூப் என ஏராளமான சூப் வகைகளைப் பொதுமக்களுக்கு இலவசமாகக் கொடுத்து அசத்தினார்.

இதுபற்றி இயற்கை விவசாயி மூர்த்தியிடம் பேசினோம். “நகருக்குள்ள இருந்தாலும், தினசரி கூலி வேலை செஞ்சு பிழைக்கிறவங்கதான் ரொம்ப பேர் இருக்காங்க. காந்தி நகர் பகுதியில பலரும் தினசரி காய்கறி வாங்கக்கூட வழியில்லாம, வெறும் ரசம் மட்டும் வச்சு சாப்பிடுவதாகவும், சிலருக்கு அதுக்கும் வழியில்லைன்னும் கேள்விப்பட்டேன். அவங்களுக்குத் தினமும் என்னால முடிஞ்ச அளவுக்கு சாப்பாடு கொடுக்கலாம்னு முடிவு பண்ணேன். சாப்பாடு கொடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி கொடுக்கலை.

இயற்கை விவசாயி மூர்த்தி

அதற்கப்புறம்தான் காய்கறிகள் வாங்கிக் கொடுக்கலாம்னு முடிவு பண்ணேன். குறிப்பாக, ஏழை, எளிய மக்களின் வீடுகளைக் கேட்டு, அவங்களுக்கு முன்னுரிமை கொடுத்து காய்கறிகளைக் கொடுத்திட்டு வந்தேன். அவங்க ரொம்பவே சந்தோஷப்பட்டாங்க. கஷ்டப்படுறவங்களுக்கு கொடுத்ததில் எனக்கும் ரொம்பவே மகிழ்ச்சி. தொடர்ந்து, அரிசி உள்ளிட்டவை கொடுக்கலாம்னு இருக்கேன்” என்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.