“அம்மா உணவகங்களால் கடந்த ஆறு ஆண்டுகளில் 468 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நஷ்டத்தில் இயக்குவதைவிட அம்மா உணவகங்களை மூடிவிடலாம்!”

நான்கு மாதத்துக்கு முன்பு வரை இப்படியான குரல்கள்தான் அம்மா உணவகங்களுக்கு எதிராக முளைத்தன. அம்மா உணவகங்களை மீட்டெடுக்க, அறக்கட்டளை அமைத்து நிதி திரட்டவும் ஒருங்கிணைந்த உணவுக் கூடம் அமைக்கவும் முடிவெடுக்கப்பட்டது.

அம்மா உணவகம் திட்டத்தை தொடங்கி வைத்த ஜெயலலிதா

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து அம்மா உணவகங்களுக்கு புத்துணர்ச்சியூட்ட 100 கோடி ரூபாய் சிறப்பு நிதியை ஒதுக்கினார். பெரும்பாலானோரால் தோல்வியடைந்த திட்டம் என்று கூறப்பட்ட அம்மா உணவகங்கள்தான், இன்று கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சென்னை மாநகரமே இறுகிப் போயிருக்கும் சூழலில், நாள் ஒன்றுக்கு நான்கரை லட்சம் பேருக்கு பசியாற்றுகிறது.

Also Read: `இப்படியொரு தொற்றுநோயை நாம் இதுவரை சந்திக்கவில்லை!’ – முதல்வர் எடப்பாடி பழனிசாமி #corona

நகர்ப்புற, கிராமப்புற ஏழைகள் பசியோடு உறங்கச் செல்லக் கூடாது என்பதற்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் 2013-ல் கொண்டுவரப்பட்ட மகத்தான திட்டம்தான் அம்மா உணவகம். இத்திட்டத்தின் கீழ் மூன்று வேளையும் மலிவு விலையில் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. மாநகராட்சிகள், நகராட்சி நிர்வாகங்களால் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் அம்மா உணவகங்கள் நிர்வகிக்கப்படுகின்றன. இத்திட்டம் வெறும் அரசியல் ஸ்டண்ட்தான் எனப் பலரும் விமர்சித்த வேளையில், பொதுமக்களிடம் பெருவரவேற்பை அம்மா உணவகங்கள் பெற்றன. அம்மா உணவகங்களைக் காப்பியடித்து ஆந்திராவில் அண்ணா என்.டி.ஆர். உணவகங்கள் முளைத்தன. ஒடிசா, கர்நாடகாவிலும் இதேபோன்ற உணவகங்கள் உருவாகின.

அம்மா உணவகம்

சென்னையிலுள்ள 200 வார்டுகளில், வார்டுக்கு இரண்டு வீதம் 400 அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன. இதுபோக, சென்ட்ரல் ராஜீவ்காந்தி, ஸ்டான்லி, ராயப்பேட்டை, கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட ஏழு அரசு மருத்துவமனைகளில் இயங்குவதையும் சேர்த்து மொத்தம் 407 அம்மா உணவகங்கள் சென்னையில் இயங்குகின்றன. மாநகராட்சிகள், நகராட்சிகள், அனைத்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன. மொத்தமாக தமிழகத்தில் சுமார் 700 உணவகங்களில் நாள்தோறும் சுமார் 12 லட்சம் பேர் பசியாறுகின்றனர். சென்னையில் சராசரியாக ஒன்றரை லட்சம் பேர் உணவருந்தி வந்த நிலையில், இன்று இந்த எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்ந்திருக்கிறது.

144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கும் இச்சூழலில், சென்னையில் சாமானிய மக்களுக்கு அம்மா உணவகங்கள் பெரிதும் கைகொடுத்துள்ளன. தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பெரியசாமி கூறுகையில், “நான் பாரீஸ் கார்னர்ல சரக்கு ரிக்‌ஷா ஓட்டுறேன். போலீஸ் கெடுபிடியால இப்ப வியாபாரமும் இல்ல, வண்டியையும் எடுக்க முடியல. ஹாஸ்பிடல், காய்கறி மார்க்கெட்ல ஏதாவது சின்ன சின்ன வேலை பார்த்தா தினமும் 50 ரூபாய் கிடைக்கும். ரோட்டுக் கடையெல்லாம் சாத்தியிருக்குறதுனால, பெரிய ஹோட்டல்ல பார்சல் வாங்கி சாப்பிட முடியாது. அம்மா உணவகம் மட்டும் இல்லைனா, நான் மூணு வேளையும் பட்டினிதான்” என்றார்.

சமூக விலகலைக் கடைப்பிடிக்கும் அம்மா உணவகம்

ரயில் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால், சொந்த ஊருக்குச் செல்ல முடியாத வெளிமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் மீட்கப்பட்டு பல்வேறு சமூகநலக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உணவு அம்மா உணவகத்தில் இருந்துதான் இலவசமாக செல்கிறது. அதேபோன்று, தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது.

Also Read: `கொரோனா ஒரு பக்கம் பயமுறுத்தினா, பசி எங்க குழந்தைகளை வாட்டுது!’ – மோரை கிராமத்தின் அவலம்

சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் ரஞ்சிதம் கூறுகையில், “காலைல 8 மணிக்கெல்லாம் வேலைக்கு வந்துடுறோம். வேலை முடிய சாயந்திரம் 6 மணி கூட ஆகிடும். காய்கறி வாங்கி சமைக்குற அளவுக்கு எங்களுக்கு நேரமில்ல. மத்தியானம் சுடச்சுட கருவேப்பிலை சாதம், சாம்பார், லெமன் சாதமெல்லாம் இலவசமா கொடுக்குறாங்க. சாப்பாடு எல்லாம் ரொம்ப டேஸ்டா சுத்தமாதான் இருக்குது. கடைக்குள்ள எல்லோருமே முகக்கவசம், கையுறை போட்டுதான் வேலை செய்யுறாங்க. நாங்களும் ஒரு மீட்டர் இடைவெளிவிட்டுதான் சாப்பாடு வாங்குறோம்” என்றார்.

அம்மா உணவகத்தை ஆய்வு செய்யும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
அம்மா உணவகத்தை ஆய்வு செய்யும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

அம்மா உணவகங்களின் செயல்பாடு குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷிடம் பேசினோம். “அம்மா உணவகங்கள் இல்லையென்றால் இன்றுள்ள அசாதாரண சூழலை சமாளிப்பது கேள்விக்குறியாகி இருக்கும். சென்னையிலுள்ள 407 உணவகங்களில் ஒருநாளைக்கு நான்கரை லட்சம் பேருக்கு உணவளிக்கிறோம். இந்த எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பிருக்கிறது. சென்னையிலுள்ள அத்தனை வார்டுகளிலும் ஒரு கி.மீ. சுற்றளவில் தலா இரண்டு உணவகங்கள் வீதம் நமக்கு ஒரு கட்டுமானம் இருப்பது பெரிய பலம். தற்போது ஒருநாளைக்கு 40 ஆயிரம் பேருக்கு சமைக்கும் வகையில், நான்கு பொது சமையலகங்கள் தயார் நிலையில் உள்ளன.

வரும் ஏப்ரல் 3-ம் தேதிக்குள் அடுத்த 40 நாள்களுக்குத் தேவையான சமையல் பொருள்கள் அனைத்தையும் அம்மா உணவகங்களில் சேமித்துவைக்க உள்ளோம். காய்கறிகள் மட்டும் தேவைப்படும் அளவுக்கு அவ்வப்போது கொள்முதல் செய்யப்படும். அம்மா உணவகங்கள் மூலமாக தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது. இந்த இக்கட்டான சூழலில், தூய்மைப் பணியாளர்கள் 90 சதவிகிதம் பேர் தினமும் பணியில் தவறாமல் ஈடுபடுவது பெருமைக்குரிய விஷயம். அம்மா உணவகங்கள் வெறும் உணவகம் அல்ல, ஒரு சமூகத்திற்கான கட்டுமானம். ஜெயலலிதா ஒரு தீர்க்கதரிசி என்பதை நிரூபித்துவிட்டார்” என்றார் பெருமையாக.

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்தியா சென் தன்னுடைய An Uncertain Glory – India and its Contradictions என்கிற புத்தகத்தில், அம்மா உணவகத்தின் கட்டமைப்பு, அதன் தேவை, அதன் சிறப்பம்சங்களை சிலாகித்து பத்து பக்கங்களுக்கு மேல் எழுதியுள்ளார். `பொது நிர்வாகத்தில் தமிழகத்தின் நடவடிக்கைகள் நாட்டுக்கே ஒரு முன்னுதாரணம்’ என்று புகழ்ந்துரைத்துள்ளார் அமர்தியா சென். அம்மா உணவகங்கள் காலத்தின் தேவை என்பதை கொரோனா வைரஸ் மூலமாக காலமே நமக்கு உணர்த்திவிட்டது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.