கொச்சினிலிருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்ற நாகபட்டினம் மீனவர்கள் மூக்கையூர் துறைமுகத்தில் கரையிறங்க அனுமதி மறுப்பு. இதனால் பாம்பன் துறைமுகத்திற்கு வந்த மீனவர்கள் இன்று காலை கரையிறங்க அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் தனிமைப் படுத்துவதற்காக திருப்புல்லாணி பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

நாகை மீனவர்கள்

ராமேஸ்வரம் வேர்க்கோடு பகுதியைச் சேர்ந்தவர் அருளானந்தம். இவருக்குச் சொந்தமான விசைப்படகில் நாகபட்டினத்தைச் சேர்ந்த ராகவன், நிவாஸ், ராஜா, சுப்பிரமணியன், பிரதீஸ், சக்திவேல், வினித் மற்றும் காரைக்காலைச் சேர்ந்த விஜய் ஆகியோர் கடந்த 12-ம் தேதி கொச்சி துறைமுகத்திலிருந்து ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காகச் சென்றனர்.

கடந்த 30-ம் தேதி கொச்சின் துறைமுகத்திற்குக் கரை திரும்ப இருந்த இவர்கள், அங்கிருந்து சொந்த ஊர் திரும்ப முடியாது என்பதால் தாங்கள் பிடித்து வந்த சுமார் 4 டன் சூரை மீன்களுடன் ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூர் துறைமுகத்திற்கு வந்தனர். ஆனால், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கொரோனா பீதியின் காரணமாக மீன் பிடித்து வந்த மீனவர்களை கரையிறங்க அனுமதிக்கவில்லை. இதனால் மீனவர்கள் 8 பேரும் தங்கள் படகுடன் நேற்று இரவு பாம்பன் துறைமுகத்தை வந்தடைந்தனர்.

ஆழ்கடல் மீன்பிடி படகு (நடுவில்)

ஆனால், பாம்பன் துறைமுகத்திலும் மீனவர்கள் கரை இறங்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் நேற்று இரவு முழுவதும் படகிலே மீனவர்கள் காத்துக்கிடந்தனர். நாகை மீனவர்கள் 8 பேரும் மீனுடன் கடலில் காத்துக்கிடக்கும் தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் வீர ராகவராவ், மீன் துறை அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, மீனவர்கள் மட்டும் கரையிறங்க அனுமதித்தார்.

முகாமிற்கு செல்லும் மீனவர்கள்

இதையடுத்து இன்று பகல் 11 மணியளவில் பாம்பன் துறைமுகத்தில் நாகை மீனவர்கள் 8 பேரும் விசைப்படகிலிருந்து கரையிறங்க அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு வட்டாட்சியர் அப்துல்ஜபார், மீன் துறை அதிகாரிகள் முன்னிலையில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் 14 நாள்கள் தனிமைப்படுத்தலுக்காக மீனவர்கள் 8 பேரும் திருப்புல்லாணி பகுதியில் உள்ள அரசு கட்டடத்தில் தங்க வைக்க அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில் மீனவர்கள் பிடித்து வந்த 4 டன் மீன்களை என்ன செய்வது என்பது குறித்து மீன் துறையினர் ஆலோசித்து வருகின்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.