கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதையடுத்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்துவருகின்றன. இந்தியாவில் இதுவரை 1,117 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை 32 மரணங்கள் நிகழ்த்துள்ளன.

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் எங்களுக்கு, முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவில்லை. இரண்டு மாத ஊதியம் நிலுவை உள்ளிட்ட காரணங்களால், பணிக்குத் திரும்பப்போவதில்லை என மாநில அரசுக்கு அதிர்ச்சிகொடுத்துள்ளனர்.
Also Read: `கொரோனாவுக்கு எதிரான போர்!’ – அரசுக்கு வலுசேர்க்கும் ஆட்டோ மொபைல் நிறுவனங்கள்
உத்தரப்பிரதேசத்தைப் பொறுத்தவரை 102 மற்றும் 108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவைகள், மாநில அரசாங்கத்துடன் ஒப்பந்தத்தின் கீழ் ஜி.வி.கே எனும் தனியார் நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டு இயக்கப்படுகின்றன. மாநிலம் முழுவதும் 4,500 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டுவருவதாக, ஆம்புலன்ஸ் பணியாளர்கள் சங்கம் கூறுகிறது. ஓட்டுநர்கள், டெக்னீஷியன்கள் என மொத்தம் 17,000 பேர் பணியாற்றுகின்றனர். தனியார் நிறுவனத்தில் கான்ட்ராக்ட் அடிப்படையில் இவர்கள் பணியாற்றிவருகின்றனர்.

இதுகுறித்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் பேசுகையில், “எங்களுக்கு மாஸ்க், கையுறை, கிருமிநாசினி போன்ற எதுவும் முறையாக வழங்குவதில்லை. இந்த மாஸ்க் தான் கொடுத்திருக்காங்க, ஒரு ஆம்புலன்ஸுக்கு 15 மாஸ்க் கொடுத்திருக்காங்க. 2 மணி நேரத்துக்கு மேல இந்த மாஸ்க்குகளை உங்களால போட்டிருக்க முடியாது. இது தீர்ந்துவிட்டால், அடுத்தது எப்போது தருவார்கள் என்றுகூடத் தெரியவில்லை. கடந்த 2 மாதங்களாக எங்களுக்கு சம்பளம் தரவில்லை.
இந்த மாஸ்ககை போட்டுக்கிட்டு ஆக்ஸிஜன் நிரப்பச் சென்றால், அங்கு எங்களை அனுமதிப்பதே இல்லை. சுகாதாரத் துறையைச் சேர்ந்த அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எங்களது வாகனங்களும் சரியாக சுத்திகரிக்கப்படுவதில்லை” என்று ஆதங்கப்படுகிறார்.

ஆம்புலன்ஸ் பணியாளர்கள் சங்கம் தனியார் நிறுவனத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், “பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் இரண்டு மாத சம்பள நிலுவை உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், இன்று மதியத்திலிருந்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் யாரும் பணிக்குத் திரும்ப மாட்டார்கள். டாக்டர்களுக்கு வழங்குவது போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் எங்களுக்கும் வழங்க வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“சம்பள விவகாரத்தை உத்தரப்பிரதேச அரசின் கவனத்துக்குக் கொண்டுசென்றோம். மாநில அரசால் இதில் எதுவும் செய்யமுடியாது. தனியார் நிறுவனத்துடன் நீங்களே நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்திக்கொள்ளுங்கள் எனத் தெரிவித்துவிட்டதாக” ஆம்புலன்ஸ் பணியாளர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.