இந்தியாவின் பல மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு வேகமாகப் பரவிவரும் நிலையில், ஆந்திர மாநிலத்தில் அந்த நோயின் பரவல் கட்டுக்குள் இருக்கிறது. அங்கு இதுவரை 21 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்புகளும் இதுவரை ஏற்படவில்லை. மக்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதைத் தடுக்கவும், வீட்டிலேயே முடங்கியிருக்கும் மக்களுக்கும், கொரோனா அறிகுறியுடன் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கும் உதவுவதற்கு அம்மாநிலத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட லட்சக்கணக்கான தன்னார்வ தொண்டர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

ரோஜா

இந்த நிலையில் நடிகையும் ஆந்திர மாநில சட்டமன்ற உறுப்பினருமான ரோஜா, ஆந்திர மாநிலத்திலுள்ள தனது நகரி தொகுதியில் மக்களையும், கொரோனா பரவலைத்தடுக்கப் பணியாற்றும் பணியாளர்களையும் சந்தித்து வருகிறார். மேலும், அவர்களுக்குத் தினமும் இலவசமாக உணவு வழங்குகிறார். இதுகுறித்தும், தற்போதைய ஆந்திர மாநில நிலவரம் குறித்தும் பேசினோம்.

“வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பியவர்கள் வாயிலாகவே கொரோனா பரவல் அதிகம் ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது. அதன்படி சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு பரவ ஆரம்பித்தபோதே, வெளிநாடுகளில் இருந்து ஆந்திரா திரும்பியவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உரிய மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கொரோனா அறிகுறி இருப்பவர்களும், மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து திரும்பியவர்களும் அவர்களின் வீட்டிலேயே வைத்துத் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள்.

ரோஜா

ஆந்திராவில் கிராமங்களில் வாழும் 4,000 மக்களுக்கு ஒரு கிராம தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் அந்தக் கிராமத்திலுள்ள 50 வீடுகளுக்கு ஒரு தன்னார்வ தொண்டர் என்ற பெயரில் லட்சக்கணக்கான அரசுப் பணியாளர்கள் விரைவாக நியமிக்கப்பட்டு வேலை செய்கிறார்கள். இவர்கள் மூலம் ஒவ்வோர் ஊரிலும் 60 குடும்பங்களுக்கு ஒரு பணியாளர் நியமிக்கப்பட்டு பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்கள் மற்றும் மருத்துவ உதவிகள் சரியாகக் கிடைக்க எங்கள் முதல்வர் ஜெகன் சார் அரசு தொய்வின்றி பணியாற்றி வருகிறது. அதையெல்லாம் எனது தொகுதி மக்களுக்குச் சரியாகக் கொண்டு சேர்க்க நானும் வேலை செய்கிறேன்” என்பவர் தனது அறக்கட்டளை மூலம் மக்களுக்கு உணவு வழங்கும் செயல்பாடுகள் குறித்துப் பேசினார்.

Also Read: `டெல்லியிலிருந்து திரும்பிய 5 பேர்; தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா!’ – 74 ஆக அதிகரித்த எண்ணிக்கை #NowAtVikatan

“என்னுடைய நகரி தொகுதியில் ஓய்வின்றி வேலை செய்யும் டாக்டர்கள் உட்பட மருத்துவப் பணியாளர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்குப் பணியாற்றும் ஊழியர்கள் 500 பேருக்குத் தினமும் வீட்டுச் சாப்பாடு தரத்தில் நல்ல உணவைச் சமைத்துக் கொண்டுபோய் கொடுக்கிறோம். உணவகங்கள் மூடப்பட்டிருக்கும் தற்போதைய சூழலில் உணவுத் தட்டுப்பாடின்றி பணியாற்ற உதவதால், அவர்கள் தொடர்ந்து சிரமமின்றி வேலை செய்கிறார்கள். இந்தப் பணிகளையும் செலவுகளையும் எனது ரோஜா சாரிட்டபிள் டிரஸ்ட் மூலமாகச் செய்து வருகிறேன்.

ரோஜா

கடந்த ஆட்சியில் நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தோம். அப்போதே எனது நகரித் தொகுதியிலுள்ள ஏழை மக்களுக்கு மலிவு விலையில் உணவு வழங்க இரண்டு இடங்களில் நடமாடும் உணவகங்களைத் தொடங்கினேன். மிகுந்த வரவேற்பைப் பெற்ற அந்த உணவகங்கள் தற்போது வரை செயல்பட்டாலும், கொரோனா சூழலில் மக்கள் கூட்டத்தைத் தடுக்க உணவகத்தை நடத்தாமல் இருக்கிறோம்.

ரோஜா

ஆனாலும், ஏழை மக்களுக்கும் எனது அறக்கட்டளை சார்பில் தினந்தோறும் உணவு, சமையல் பொருள்கள் மற்றும் மாஸ்க் ஆகியவற்றையும் வழங்கிவருகிறேன். எனது நகரி தொகுதியில் ஒருவருக்குகூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை” என்கிறார்.

தினமும் தொகுதி மக்களைச் சந்திப்பது குறித்துப் பேசுபவர், “மாநிலத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் மூன்று மாதங்களுக்கு ரேஷன் பொருள்கள் இலவசமாக வழங்கப்படும் என்று ஜெகன் சார் அறிவித்தது இந்த இக்கட்டான சூழலைச் சமாளிக்க மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தத் திட்டம் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது.

Also Read: `இப்படியொரு தொற்றுநோயை நாம் இதுவரை சந்திக்கவில்லை!’ – முதல்வர் எடப்பாடி பழனிசாமி #corona

இரண்டு நாள்களாக எனது தொகுதி மக்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்கவும் செல்கிறேன். தவிர, எனது தொகுதியில் நடைபெறும் மக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள், கிருமி நாசினி தெளிப்பது, மக்கள் தங்க வைக்கப்படும் இடங்கள், காய்கறி விற்பனை நடைபெறும் இடங்கள் உட்பட பல்வேறு இடங்களுக்கும் தினமும் நேரில் சென்று பணிகள் சரியாக நடப்பதைக் கவனிக்கிறேன்.

எனது தொகுதியில் நெசவாளர்கள், தினக்கூலி தொழிலாளர்கள்தாம் அதிகம் இருக்கின்றனர். இவர்கள் அன்றாடம் வேலை செய்து அதில் கிடைக்கும் வருமானத்தில்தான் வாழ்வாதாரத்தை நடத்துகிறார்கள். இந்த நிலையில் வேலைக்குச் செல்ல முடியாததால் அவர்கள் சிரமப்படக்கூடாது என்பதற்காக இலவச ரேஷன் பொருள்களுடன், எல்லாக் குடும்பங்களுக்கும் தலா 1,000 ரூபாய் வழங்கப்படுவதாக ஜெகன் சார் அறிவித்தார்.

ரோஜா

இந்த நலத்திட்டங்கள் மக்களுக்கு விரைவாகக் கிடைக்க வேண்டும் என்பதை உறுதிசெய்யத் தினமும் நேரில் சென்று பார்வையிடுகிறேன். இதுபோன்ற இக்கட்டான சூழலில்தானே மக்களுக்கு ஆதரவாக உடன் இருக்க வேண்டும். அதைச் சரியாகச் செய்கிறேன். தினமும் வெளியிடங்களில் அதிகம் பயணித்தாலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நானும் முறையாகக் கடைப்பிடிக்கிறேன்.

வீட்டுக்குள் வந்ததுமே கைகளை நன்றாகக் கழுவிக்கொண்டுதான் என் குழந்தைகளையும் சந்திக்கச் செல்வேன். பரபரப்பான வாழ்க்கை முறையில் பெரும்பாலான குடும்பத்தினர் தினமும் ஒருமுறைகூட குடும்ப உறுப்பினர்களுடன் அமர்ந்து பேசவும் சாப்பிடவும் நேரம் கிடைக்காமல் இருந்தது. அந்த நிலையைச் சரிசெய்துகொள்ள தற்போதைய கொரோனா சூழலைப் பயன்படுத்திக்கொண்டு மக்கள் வீட்டிலேயே இருக்க வலியுறுத்துகிறேன்.

ரோஜா

தினமும் காலையில் தொகுதி மக்களைச் சந்திக்கச் சென்றுவிட்டு, நகரியில் இருக்கும் எனது வீட்டுக்கு மதியம் திரும்பிவிடுவேன். பிறகு, மாலை வரை என் கணவர், குழந்தைகள் உட்பட குடும்பத்தினருடன் நேரம் செலவிடுகிறேன். அந்த நேரத்தில் சமையல் செய்கிறேன். குழந்தைகளுடன் விளையாடுகிறேன். இப்படித் திட்டமிட்டு பணியாற்றுவதால் மக்கள் பணிக்கும் குடும்பத்துக்கும் சரியாக நேரம் செலவிட முடிகிறது” என்று கூறுகிறார் ரோஜா.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.