கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருகின்றனர். ஆனால், 144 தடை உத்தரவை மதிக்காதவர்கள் சாலைகளில் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர். அவர்களுக்கு காவல்துறையினர் வித்தியாசமான முறையில் தண்டனைகளை வழங்கிவருகின்றனர்.

காவலர்களுடன் ஆட்டோ டிரைவர் மூர்த்தி

Also Read: `லத்தி வேண்டாம்; புரிய வையுங்கள்!’ – 144 தடை உத்தரவு பணி குறித்து போலீஸ் டி.சி.

சென்னை புளியந்தோப்பு காவல் நிலையம் அருகில் உள்ள புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் பாதுகாப்பு பணியில் காவலர்கள் நித்தியானந்தம், குமரேசன் ஆகியோர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோ டிரைவர் மூர்த்திக்கும் காவலர்கள் நித்தியானந்தத்துக்கும் குமரேசனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் காவலர்கள் மூர்த்தியை தடியால் தாக்கினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.

வீடியோ குறித்து போலீஸ் உயரதிகாரிகள், சம்பந்தப்பட்ட காவலர்களிடம் விளக்கம் கேட்டனர். இதையடுத்து, காவலர்களால் தாக்கப்பட்டவர் யாரென்று போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் புளியந்தோப்பைச் சேர்ந்த மூர்த்தி என்பது தெரியவந்தது. இவர் ஆட்டோ டிரைவராகவும் கால்பந்து பயிற்சியாளராகவும் உள்ளார். இதைத்தொடர்ந்து மூர்த்தியை, காவலர்கள் நித்தியானந்தம், குமரேசன் ஆகியோர் சந்தித்தனர். அப்போது மூர்த்தியிடம் அவர்கள் மன்னிப்பு கேட்டனர். காவலர்களிடம் மூர்த்தியும் மன்னிப்பு கேட்டார். அதன்பிறகு உதவி கமிஷனர் ஜெய்சிங், புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மூர்த்தியைச் சந்தித்துப் பேசினர்.

மாஸ்க் வழங்கும் உதவி கமிஷனர் ஜெய்சிங்

அப்போது உதவி கமிஷனர் ஜெய்சிங், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மூர்த்திக்கு சில அறிவுரைகளை வழங்கினார். பின்னர் அவருக்கு இலவசமாக மாஸ்க்குகள் வழங்கப்பட்டன.

இந்தச் சம்பவம் குறித்து புளியந்தோப்பு போலீஸார் கூறுகையில், “மக்கள் நெருக்கம் அதிகமான பகுதிகளில் ஒன்று புளியந்தோப்பு. மேலும், இடநெருக்கடி காரணமாக வீடுகளில் இருப்பதைவிட வெளியில்தான் அதிகளவில் மக்கள் இருந்துவருகின்றனர். அவர்களுக்கு கொரோனா தொற்று குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை. அதன்காரணமாக வாகனங்களில் வெளியில் சுற்றிவருகின்றனர். பொதுமக்களுக்கு எங்களால் முடிந்தளவுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறோம்.

சம்பவத்தன்று வாகனங்களில் வெளியில் சுற்றியவர்களிடம் முதலில் போலீஸார் எச்சரித்துள்ளனர். ஆனால், மறுபடியும் அதே நபர்கள் வெளியில் வந்துள்ளனர். அதனால்தான் போலீஸார், லத்தியால் தாக்கியுள்ளனர். இதில் மூர்த்தி என்பவர், காவலர் நித்தியானந்தத்தின் நீண்ட கால நண்பர். இவர்கள் இருவரும் விளையாட்டு கிளப்பில் பயிற்சியாளராக இருந்துள்ளனர். ஆனால் மாஸ்க் அணிந்திருந்ததால் இருவருக்கும் அடையாளம் தெரியவில்லை. போலீஸார், வாகன ஓட்டிகளை அடித்த வீடியோ காட்சி வெளியான பிறகுதான் காவலர் நித்தியானந்தத்துக்கு தன்னுடைய நண்பர் மூர்த்தியை அடித்த தகவல் தெரியவந்தது.

லத்தியால் போலீஸ் தாக்கும் காட்சி

உடனே மூர்த்தியை சந்தித்த காவலர்கள் நித்தியானந்தமும் குமரேசனும் மன்னிப்பு கேட்டு சமாதானமாகிக் கொண்டனர்.

144 தடை உத்தரவால் தங்களுடைய குடும்பத்தை மறந்து பாதுகாப்பு பணியில் காவலர்கள் ஈடுபட்டுவருகின்றனர். எனவே பொதுமக்கள், காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்” என்றனர்.

இதுகுறித்து காவலர் நித்தியானந்தத்திடம் பேசினோம். “புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது எச்சரித்தப்பிறகும் சிலர் தேவையில்லாமல் அந்தப்பகுதியில் வாகனத்தில் சுற்றிக் கொண்டிருந்தனர். முதலில் எச்சரித்து அனுப்பினோம். மூர்த்தி, என்பவர் என்னுடைய நண்பர். அவரைச் சந்தித்து 4 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டதால் அவரை அடையாளம் காணமுடியவில்லை. அவரையும் மற்றவர்களையும் தாக்கியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

தோப்பு கரணம் போடும் காட்சி

இதுகுறித்து மூர்த்தியிடம் கேட்டதற்கு, “நானும் அப்படி பேசியிருக்கக் கூடாது. மக்களுக்காகத்தான் அரசும், மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையினர் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அதை மக்கள் மதித்து நடக்க வேண்டும்” என்றார்.

ஆட்டோ டிரைவர் மூர்த்தியிடம் காவலர்கள் நித்தியானந்தம், குமரேசன் ஆகியோர் சந்தித்து மன்னிப்பு கேட்கும் காட்சி வீடியோவாக எடுக்கப்பட்டுள்ளது. அதில், “வணக்கம் மூர்த்தி என்று காவலர் நித்தியானந்தம் சொல்கிறார். அதற்கு மூர்த்தி, வணக்கம் நித்யா என்று கைகளைக் கூப்பியபடி பேசுகிறார். காவலர் நித்யானந்தம், நீ என் நண்பனாக இருந்தாலும் இன்றைக்கு ஒரு சம்பவம் நடந்துவிட்டது. தயவு செய்து என்னை மன்னித்துக்கொள் என்று சொல்கிறார்.

அடுத்து, காவலர் குமரேசன், மூர்த்தியிடம் மன்னிப்பு கேட்கிறார். பின்னர் மூர்த்தி, பேசுகிறார். அதில், `என் பெயர் மூர்த்தி, நான் கே.பி.பார்க்கிலிருந்து புளியந்தோப்பு நெடுஞ்சாலை வழியாக சென்றுகொண்டிருந்தேன். அப்போது 144 தடை உத்தரவுப்படி போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது எனக்கும் போலீஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. நான் கொஞ்சம் அவதூறாகப் பேசிவிட்டேன். அப்போது போலீஸார் அப்படி நடந்துகொண்டுவிட்டனர். அவர் என்னுடைய 14 ஆண்டுக்கால நண்பர். அவர் அத்லட்டிக் பிளேயர். நான் கால்பந்து பிளேயர்.

மன்னிப்பு கேட்கின்றனர்

ஒரு நண்பன் என்றுகூட பாராமல் தண்டனை கொடுத்துவிட்டார். பொதுமக்களின் நலன்கருதி காவலர் நித்தியானந்தம் அப்படி நடந்துகொண்டார். அதனால் எந்தவித தவறும் இல்லை. அந்த வீடியோவை யாரும் பரப்ப வேண்டாம். காவல்துறை மருத்துவர்கள், மாநகராட்சி அதிகாரிகள் ரோட்டில் இறங்கி வேலை பார்க்கிறார்கள்.

கொரோனா பரவக் கூடாது என்றுதான் நாம் வீட்டில் இருக்கிறோம். அவர்களுக்கும் குழந்தைகள் இருக்கின்றன. எனவே, நாம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். நண்பனே அடித்திருப்பதால் காவல்துறை எப்படி வேலை செய்கிறது என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். இது பெரிய விஷயம் அல்ல. இது சாதாரண விஷயம் பெரிதுபடுத்த வேண்டாம். கொரோனா பரவுவதைத் தடுக்க நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்” என்பதோடு வீடியோ நிறைவடைகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.