நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், காதல் திருமணம் செய்துகொண்ட இளைஞர் ஒருவர், படுகொலை செய்யப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்ட வகுப்பிற்குள்ளேயே வெவ்வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள் காதலித்துத் திருமணம் செய்துகொண்டதால், அந்த இளைஞரை படுகொலை செய்துள்ளனர் பெண்ணின் அப்பாவும் தாய்மாமாவும்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த மொரப்பந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சுதார்கர் (26) என்பவரும் பக்கத்துக் கிராமமான ஒண்டிக்குடிசை கிராமத்தைச் சேர்ந்த ஷர்மிளா (22) என்ற பெண்ணும் 5 வருடங்களாகக் காதலித்து வந்துள்ளனர். இருவரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பிற்குள்ளேயே வெவ்வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு ஷர்மிளா வீட்டில் பயங்கர எதிர்ப்பு எழுந்துள்ளது.

திருமணத்தின் போது சுதாகர், ஷர்மிளா

இந்த நிலையில் 6 மாதத்திற்கு முன்பு இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி கோயிலில் திருமணம் செய்துகொண்டு, ஆற்காடு அடுத்த வாலாஜாவில் தனியாக வீடு எடுத்துக் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். 15 நாள்கள் மட்டுமே குடும்பம் நடத்திய நிலையில், ஷர்மிளாவும், சுதாகரும் வாலாஜாவில் இருப்பது அவர்களுடைய பெற்றோருக்குத் தெரியவர அவர்களைச் சொந்த ஊருக்கே அழைத்துச் சென்று இருவரையும் பிரித்துள்ளனர்.

இந்த நிலையில், சென்னைக்கு கட்டட வேலைக்குச் சென்ற சுதாகர், ஷர்மிளாவிடம் போனில் ரகசியமாகப் பேசி வந்துள்ளார். அதே சமயம் ஷர்மிளாவின் தந்தை மூர்த்திக்கு போன் செய்து, ‘ஷர்மிளாவை எனக்கு முறைப்படி திருமணம் செய்து கொடுத்து விடுங்கள்’ என்றும் கேட்டு வந்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த மூர்த்தி, ‘இனிமேல் எனக்கு போன் செய்யாதே’ என்று பலமுறை கூறியதாகத் தெரிகிறது. ஆனாலும் சுதாகர் தொடர்ந்து போன் செய்துள்ளார். இதனால், கடும் கோபத்தில் இருந்துள்ளார் மூர்த்தி.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் 144-தடை விதிக்கப்பட்டதும், சென்னையிலிருந்து தனது ஊரான மொரப்பந்தாங்கல் கிராமத்திற்கு வந்துள்ளார் சுதாகர். இந்தத் தகவல் மூர்த்திக்குத் தெரிந்ததும், சுதாகர் எப்போது வெளியே வருவார் என்று எதிர்பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று காலை சுதாகர் தனது நண்பர்களுடன் இயற்கை உபாதை கழிப்பதற்காக மொரப்பந்தாங்கல் ஏரிக்கரைக்கு வந்துள்ளார்.

இந்தச் சமயத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்ட மூர்த்தி, தனது அக்கா மகன் கதிரவன் என்பவனோடு ஏரிக்கரைக்கு வந்து சுதாகரை இரும்புக் கம்பியாலும் கத்தியாலும் சரமாரியாகத் தலையில் தாக்கியுள்ளனர். இதைப் பார்த்த சுதாகரின் நண்பர்கள் வீட்டிற்கு ஓடிச்சென்று ஊரில் உள்ளவர்களை அழைத்துவந்துள்ளனர். ஆனால் அவர்கள் வருவதற்குள், சுதாகரைக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர் மூர்த்தியும் கதிரவனும்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆரணி டி.எஸ்.பி. செந்தில், இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், ஆகியோர் கொலையானவரின் சடலத்தை மீட்டுப் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். கொலை செய்த இருவரையும் உடனடியாக தேடிப்பிடித்துக் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஆணவப் படுகொலை என்கிற ரீதியிலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். கொரோனா பாதிப்பு ஊரடங்கு நிலையில், இந்தச் சம்பவம் நடந்தது திருவண்ணாமலை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.