பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

1994-ம் வருடம் ஒரு மாலை வேளை.

டேய் இந்த இடம் கரெக்டா இருக்கும் டா என்று ஒரு ஏரியை ஒட்டிய பகுதியைக் காட்ட்னேன் நான்.

ஆம், நான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த தருணம். தேங்காய் மட்டையில் பேட் செய்து, கார்க் பந்தில் விளையாடிய வேலை.

நாள் ஒன்றுக்கு நான்கு மட்டைகள் தேவைப்படும். ஏனென்றால், கார்க் பந்து கடினமாக இருந்ததால் தேங்காய் மட்டை உடைந்துவிடும்.

அடுத்ததாக, பலகையைக் கொண்டு அண்ணன் பேட் செய்தான், அதுவும் முறிந்துபோனது.

கடைசியாகத்தான் மரத்தை வெட்டி, அதைக் கையாலேயே செதுக்கி, உறுதியான கிரிக்கெட் பேட் செய்தோம். ஆனால், அதன் எடை மிகவும் அதிகம்.

Representational Image

ஏன் இவ்வளவு சிரமம்..?

பேட் வாங்க பணம் இல்லை.

அது எங்கு விற்பார்கள் என்பதுகூட தெரியாது. பஞ்சாயத்து டி.வி -யில் டெண்டுல்கர் விளையாடும்போது பார்ப்பதோடு சரி.

சரி, இப்போது பேட் ரெடி! விளையாடுவதற்கு மைதானம்..?

ஏற்கெனவே தென்னை மட்டையில் விளையாடினோம். அதில் அடித்தால் கார்க் பால் அதிக தூரம் போகாது. அதனால் வீட்டு வாசலிலேயே விளையாடினோம். இப்போது நல்ல மர பேட் செய்தாயிற்று. அதில் அடித்தால் ரொம்ப தூரம் போகிறது. அதுவும் 11 பேர் நின்று விளையாட வேண்டும் என்றால் கண்டிப்பாக கிரவுண்டு வேண்டும் எனத் தேடி அலைந்தோம்.

எங்கள் ஊரில் இரண்டு காடுகள் உள்ளன. சின்னக் காடு, பெரிய காடு.

பெரிய காட்டில் நிறைய மரங்கள் இருப்பதால், அங்கு காட்டுப் பாதுகாவலர் விட மாட்டார் என்பதால் சின்ன காட்டுப் பகுதிக்குப் போனோம்.

தேடிப் பார்த்ததில், மிகவும் முட்கள் நிறைந்த பகுதி என்பதாலும் எங்கள் அனைவரிடமும் செருப்பு இல்லாத காரணத்தாலும் தொடர்ந்து அங்கே விளையாட முடியவில்லை.

அடுத்து, வடக்குமேடு பகுதிக்குச் சென்றோம். வடக்குமேடு பகுதி என்பது விவசாய நிலம்.

எந்த நிலம் பயிர் இல்லாமல் இருக்கிறதோ அதுதான் எங்கள் தற்காலிக கிரிக்கெட் கிரவுண்டு.

கடைசியாக பெரிய காட்டுக்கு முன் ஒரு பெரிய ஏரி ஒன்று இருந்தது.

அதன் ஒரு பகுதி தரைமட்டமாக மைதானம் மாதிரி இருக்கும். ஆனால் அதில் ஒரு சிக்கல். அங்கு பந்து போடும் இடம் தவிர மற்ற இடத்தில் எல்லாம் காட்டுச் செடிகள் படர்ந்திருந்தன, முட்கள் மிகவும் குறைவு கலா செடி, வேலிமுள், சப்பாத்திச் செடி என்று கொத்துக்கொத்தாக தரையில் படர்ந்திருந்தன.

Representational Image

இதை மட்டும் வெட்டி நீக்கிவிட்டால் போதும், கிரவுண்டு ரெடி.

மைதானத்தின் ஒரு பகுதியில் ஒரே ஒரு வெள்ள வேல மரம் இருந்தது. அந்த மரத்தடியில் அமர்ந்து ரன்கள் குறிக்கும் இடமாக வைத்துக்கொள்ளலாம் என்று பேசி முடித்தபின், 50 பைசா கொடுத்து செட்டியார் கடையில் போய் நூல் உருண்டை ஒண்ணு வாங்கிட்டு, மீதிக்கு போட்டி (தின்பண்டம்) வாங்கிட்டு வாடா என்று சொன்னான் என் பெரியப்பா பையன் செல்வம்.

அவன்தான் சீனியர். பள்ளிக்கூடம்கூட போகாத அவனுக்கு அப்போதே 22, 23 வயதுக்கு மேல் இருக்கும்.

நான் ஆறாவது படிக்கிறேன். ஆனாலும் அவனை வாடா, போடா என்றுதான் கூப்பிடுவேன்.

நூல் உருண்டு வந்ததும் பேட் மேன் பகுதியில் இருந்து ஃபோர் லைன் அளவு செய்தோம்.

ஃபோர் லைனில் சின்னச்சின்ன கற்களை அடுக்கி வைத்துவிட்டு செடிகளை வெட்டத் தொடங்கினோம்.

அனைவருமே விவசாயக் குடும்பம் என்பதால், செடிகளை நன்றாக வெட்டினோம்.

கத்தி, மண்வெட்டி, கடப்பாரை என்று ஆளுக்குகொரு ஆயுதத்தை எடுத்து சுத்தம் செய்தோம்.

சனி, ஞாயிறு மட்டும்தான் விடுமுறை நாள்கள் என்பதால், மீதியை அடுத்த வாரம் பார்த்துக்கொள்ளலாம் என்று கிளம்பினோம்.

இரண்டாவது வாரம், மூன்றாவது வாரம் என்று சனி மற்றும் ஞாயிறுகளில் மட்டும் சுத்தம் செய்வோம்.

Representational Image

சுத்தம்செய்யப் போனதும், ஆர்வக்கோளாறில் ஃபஸ்ட் ஒரு மேட்ச் ஆடிவிட்டு அப்புறம் செடியை வெட்டலாம் என்று சொல்லி விளையாடுவோம்.

ஒரு வழியாக மைதானம் ரெடி. இப்போது தொடர்ந்து சனி, ஞாயிறுகளில் காலை முதல் இருட்டும் வரை இங்குதான் விளையாடிக்கொண்டிருப்போம்.

வெளியூரிலிருந்து நிறைய அணிகள் போட்டிக்கு வருவார்கள் நாங்களும் பக்கத்து கிராமங்களுக்கு போட்டிகளுக்குப் போவோம்.

10 கிலோமீட்டர் என்றாலும் நடந்தே போவோம்.

மதிய சாப்பாடு பற்றி கவலைப்பட்டதே இல்லை, சாப்பாடு தண்ணி எல்லாமே எங்களுக்கு கிரிக்கெட் தான்.

இன்று மார்ச்-25, 2020 நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, இந்தியாவில் ஏப்ரல் 14 வரை 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது அரசாங்கம்.

ஏற்கெனவே 15 நாள்கள் விடுமுறை. இன்னும் 15 நாள்கள் விடுமுறை. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேல். மார்ச்-16, 2020 முதல் விடுமுறை. அதனால் சென்னையிலிருந்து என் கிராமத்திற்கு வந்துவிட்டேன்.

144 தடை உத்தரவு எங்கள் கிராமத்தை பெரிதும் பாதிக்கவில்லை. விவசாய பூமி என்பதால் அவரவர் வேலையை அவரவர் செய்த படியே உள்ளனர்.

பயந்து எவ்வளவு நேரம் வீட்டிலேயே அடைந்துகிடப்பது… அப்படியே ஏரிப் பக்கமா போயிட்டு வருவோம்னு பைக்கை எடுத்துக்கொண்டு போனேன்.

கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து இந்த இடத்திற்கு இவ்வளவு ஃப்ரீயாக வருகிறேன்.

Representational Image

நாங்கள் உருவாக்கிய கிரவுண்டில் நிற்கிறேன்.

என்ன ஒரு ஆச்சர்யம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மொத்தமாக மைதானமாக இருக்கிறது.

எந்தக் காட்டில் முள் செடி, மரங்களை வெட்டி நானும், நண்பர்களும் ரத்தம் சிந்தி மைதானம் ஆக்கினோமோ அதே மைதானத்தில் நிற்கிறேன்.

இப்போது கண்களில் கண்ணீர் வருகிறது.

என் ஆண்ட்ராய்டு போனில் பிரதமர் மோடி அவர்கள் நேரலையில் வந்து சொல்கிறார், கொரோனா பாதிப்பிலிருந்து தப்பிக்க 20 நிமிடத்திற்கு ஒரு முறை சோப்பு போட்டு கையைக் கழுவுங்கள் என்று.

வரும்போது அம்மா சொல்லி அனுப்பினார்கள், சீக்கிரம் வாடா குடிக்கக்கூட தண்ணீர் இல்லை… எங்கேயாச்சும் போய் ரெண்டு குடம் தண்ணி எடுத்துட்டு வாடா பைக்ல என்று.

யமஹா பைக், காலில் க்ராக்ஸ் செருப்பு, சாம்சங் S20 ஆண்ட்ராய்டு மொபைல் போன், ப்ளூடூத் ஹெட்போன், பர்ஸ்ஸில் ஆறேழு கிரெடிட் கார்டுகள்.

இவ்வளவு ஹைடெக்காக இருக்கும் நான், எந்த டெக்னாலஜியை வைத்து எங்க அம்மாவுக்கு தண்ணீர் கொண்டு வந்து தரப்போகிறேன்..?

அன்று மரங்கள், செடிகொடிகள் இல்லாமல் மைதானம் சுத்தமாக இருந்தால்தான் கிரிக்கெட் நன்றாக விளையாட முடியும் என்று எண்ணிய நாங்கள்,

Representational Image

இன்று மரங்கள், தாவரங்கள் இருந்தால்தான் மழை வரும் என உணர்ந்துவிட்டோம். ஆனால், வெட்டிய செடிகளை எந்த டெக்னாலஜியைக் கொண்டு மறுபடியும் விளைவிக்கப் போகிறோம்..?

மரங்களை, செடிகளை அழிச்ச பாவத்திற்குக் கிடைச்ச தண்டனை தான் இந்த கொரோனா.

எங்ககிட்ட கை கழுவ கூட தண்ணி இல்ல

கொரோனா வந்தே செத்துப் போறோம் விட்டுவிடுங்கள்.

எஸ்.சீனிவாசன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.