`தேசிய ஊரடங்கு; 450 கி.மீ தொலைவு!’ – பணிக்காக 20 மணிநேரம் நடந்தே சென்ற கான்ஸ்டபிள் #Corona

கொரோனாவால் இந்தியா உட்பட மொத்த உலகமும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் என்றால் வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக உலகம் முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு வைரஸை விடப் பல மடங்கு பெரும் பிரச்னையாக உள்ளது. இதனால் பல பில்லியன் தொழிலாளர்கள் வேலையிழந்து அடுத்த வேளை உணவு இல்லாமல் பெரும் சிரமமடைந்துள்ளனர்.

இந்தியாவிலும் இதே நிலையே நீடிக்கிறது. இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனால் டெல்லியில் வசித்து வந்த பிற மாநிலக் கூலித் தொழிலாளர்கள் இரண்டு, மூன்று நாள்களாகப் பல நூறு கி.மீ நடந்தே தங்கள் சொந்த மாநிலங்களுக்குப் பயணப்பட்டுள்ளனர்.

கொரோனா

இந்தத் தொழிலாளர்கள் உண்ண உணவு இல்லாததால் சொந்த கிராமங்களுக்குச் செல்லும் இதே நேரத்தில் தன் பணியின் மீதான அர்ப்பணிப்பால் பல நூறு கி.மீ நடந்து சென்றுள்ளார் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதான கான்ஸ்டபிள் திக்விஜய் சர்மா. உத்தரப்பிரதேசத்திலிருந்து 450 கி.மீ தொலைவில் உள்ள மத்தியப்பிரதேசத்தின் ராஜ்காருக்கு நடந்து சென்று தன் பணியில் மீண்டும் சேர்ந்துள்ளார்.

இதுபற்றி பி.டி.ஐ ஊடகத்திடம் பேசியுள்ள சர்மா, “எனது பி.ஏ தேர்வுக்காக மார்ச் 16-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை விடுமுறை எடுத்திருந்தேன். அந்த நேரத்தில்தான் தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து எனது மூத்த அதிகாரிக்குப் போன் செய்து இந்தக் கடினமான நேரத்தில் நான் பணியில் இருக்க வேண்டும் என எனது விருப்பத்தைத் தெரிவித்தேன்.

ஆனால், எனது விருப்பத்தை மறுத்த அதிகாரி போக்குவரத்து வசதி இல்லாததால் வீட்டிலேயே இருக்குமாறு எனக்கு அறிவுறுத்தினார். ஆனால் இந்த நேரத்தில் நான் பணியில் இருக்க வேண்டும் என விரும்பினேன். அதனால் அவர் பேச்சையும் மீறிக் கடந்த 23-ம் தேதி அதிகாலை என் வீட்டை விட்டுப் புறப்பட்டேன்.

கான்ஸ்டபிள்

கிட்டத்தட்ட 20 மணி நேரம் நடந்தேன், வழியில் சிலரின் மோட்டார் வண்டியில் லிஃப்ட் கேட்டும் பயணித்தேன். இறுதியாக மறுநாள் இரவுதான் மத்தியப்பிரதேசத்தின் ராஜ்காருக்கு வந்தடைந்தேன். எனது பயணத்தில் எங்கும் உணவு கிடைக்கவில்லை. ஒரு இடத்தில் சமூக ஆர்வலர்கள் வழங்கிய உணவை மட்டும் எடுத்துக்கொண்டேன். நான் நீண்ட தூரம் நடந்தே வந்ததால் என்னை சில நாள்கள் ஓய்வெடுக்கும்படி எனது மேல் அதிகாரி தெரிவித்துள்ளார். இன்னும் இரு நாள்களில் என் வேலையில் சேர்ந்துவிடுவேன்” என நம்பிக்கையாகத் தெரிவித்துள்ளார்.

தன் பணியின் மீது உள்ள அர்ப்பணிப்பால் இக்கட்டான சூழ்நிலையிலும் நடந்தே வந்து பணியில் சேர்ந்த கான்ஸ்டபிளின் செயலை ராஜ்கார் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.