இரவு பகல், மழை, வெயில், குளிர் என எதையும் பாராமல், இந்த பெருந்தொற்றுக்கு எதிராக நேரடியாக வீதியில் இறங்கிப் போராடும் தூய்மைப் பணியாளர்களை மிக மோசமாக நடத்தும் ஊட்டி நகராட்சிக்கு எதிராகப் பலரும் கொதிக்கின்றனர்.

தூய்மை பணியாளர்

கொரோனா வைரஸின் பிடியில் சிக்கித்தவிக்கும் உலகை மீட்க, ஒட்டுமொத்த மனிதகுலமும் போராடிக்கொண்டிருக்கிறது. பரவும் என்று தெரிந்தே சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், இதர மருத்துவப் பணியாளர்கள், இடைவிடாது கிருமிநாசினிகளைத் தெளித்துவரும் தூய்மைப் பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள், காவல்துறை எனக் களத்தில் ஒருங்கிணைந்து போராடிவருகின்றனர்.

உலகமே பயந்து நடுங்கும் இந்த வைரஸை விரட்ட, களம்காணும் ஊழியர்களை அரசு நிர்வாகங்கள் கூடுதல் பாதுகாப்புடன் கவனித்துவருகின்றன. இதற்கு எதிர்மறையாக, ஊட்டி நகராட்சி தூய்மைப் பணியாளர்களின் சுகாதார பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி, அன்றாடம் தூய்மைப் பணிக்கு குப்பை ஏற்றும் வாகனத்தில் கூட்டமாக ஏற்றிச்செல்லும் அவலம் ஆர்வலர்களை கொதிப்படையச் செய்துள்ளது.

தூய்மைப் பணியாளர்

ஊட்டி நகராட்சி தூய்மைப் பணியாளர்களின் சுகாதார பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி, அன்றாடம் தூய்மைப் பணிக்கு குப்பை ஏற்றும் வாகனத்தில் கூட்டமாக ஏற்றிச் செல்லும் சம்பவம் மக்களைக் கொதிப்படையச் செய்துள்ளது.

சமூக செயற்பாட்டாளர் ஜனார்த்தனன் பேசுகையில், “சர்வதேச சுற்றுலா நகராக விளங்கக்கூடிய ஊட்டி நகரில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு பணிச்சுமை வழக்கமாகவே அதிகம். ஆள் பற்றாக்குறை, ஒப்பந்தம், போதிய உபகரணங்களின் பற்றாக்குறையால் அவதிப்பட்டுவருகின்றனர். இந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க எல்லா இடங்களிலும் கிருமிநாசினிகளைத் தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மக்கள் கூடும் சந்தைகளில் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

தூய்மைப் பணியாளர்கள்

இந்தப் பணிகளை மேற்கொள்ள ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு அழைத்துச்செல்ல முறையான வாகனங்களை ஏற்பாடு செய்யாமல், நகராட்சிக் குப்பை வாகனங்களில் ஏற்றிச் செல்லும் காட்சிகள் நாள்தோறும் வெளியாகின்றன. ஒரு வாகனத்தில் பணியாளர்களை கூட்டமாக ஏற்றிச்செல்வதால் இவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.இதுகுறித்து எந்தக் கவலையுமின்றி, நாள்தோறும் இதே அவலம் தொடர்வதைக் காண முடிகிறது” என்கிறார் வேதனையோடு.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளைத் தொடர்புகொண்டு கேட்டபோது, “ போதிய சுகாதார வழிமுறைகளைக் கடைபிடிக்கிறோம். நீங்கள் சொல்வதுபோல் நடக்கவில்லை” என்கின்றனர்.

தூய்மைப் பணியாளர்கள்

கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஊட்டி மார்க்கெட் பகுதியில் ஒரு குப்பை ஏற்றும் வாகனத்தை நிறுத்தி ஏராளமான ஆண், பெண் தூய்மைப் பணியாளர்களை கூட்டமாக ஏற்ற முயன்றுள்ளனர். அதைப் பார்த்த நாளிதழ் செய்தியாளர் ஒருவர் புகைப்படம் எடுக்க முயன்றுள்ளார். அவரை சில நகராட்சி ஊழியர்கள் தாக்க முற்பட்ட சம்பவமும் நடைபெற்றுள்ளது.

இதையும் மீறி, எந்த பாதுகாப்புமின்றி நாள்தோறும் தூய்மைப் பணியாளர்களைக் கூட்டம் கூட்டமாக ஊட்டி நகராட்சிப் பணிக்கு அழைத்துச்செல்லும் அவலம் தொடர்வது, அலட்சியத்தின் உச்சம் என மக்கள் கொதிக்கின்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.