விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில், “சாமானியர்களின் வரிச் சலுகைகளைக் குறைத்துவிட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அதிகளவில் வரிச் சலுகைகள் அளிப்பதால் பொருளாதாரம் மேன்மை அடையுமா?” என்ற கேள்வியை எழுப்பியிருந்தார் விகடன் வாசகர் கார்த்திக். அதன் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏதேனும் வரிச் சலுகைகள் அறிவிக்கப்படும் போதெல்லாம் சாமானியர்களின் நலனில் அக்கறை கொள்ளாமல் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்காக திட்டங்கள் அறிவிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழும்.
வரி விஷயத்தில் அரசு சாமானியர்களின் நலன் கருதி செயல்படவில்லையா, இல்லை கார்ப்பரேட் நிறுவனங்களை ஊக்கப்படுத்துவதில் மட்டும்தான் அரசு கவனம் செலுத்தி வருகிறதா என்ற கேள்விகளுக்கான பதிலை ஆடிட்டர் சத்ய நாராயணனைச் சந்தித்துக் கேட்டோம்.

Also Read: ஜிடிபி என்றால் என்ன… அதைவைத்து ஒரு நாட்டின் வளர்ச்சி எப்படி கணக்கிடப்படுகிறது? #DoubtOfCommonMan
“முதலில் மக்கள் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். தனி நபருக்கு விதிக்கப்படும் வரிச்சலுகை விகிதங்களை ஒரு போதும் கார்ப்பரேட் நிறுவனங்களின் மேல் விதிக்கப்படும் அளவுகளோடு சம்பந்தப்படுத்திப் பேசக்கூடாது.
மக்களுக்கு வரிச்சலுகைகள் அதிகரிக்கப்படுவதால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு நன்மையும் ஏற்படுவதில்லை. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகளை அதிகரிப்பதால் சாமானிய மக்கள் பல வகைகளில் பயன் அடைகின்றனர்.

1980-களில் தனி நபரின் மீது விதிக்கப்பட்டிருந்த வரி விகிதம் கிட்டத்தட்ட 60 – 70 சதவிகிதம். ஆனால், தற்போது விதிக்கப்படும் சராசரி வரி விகிதமே 25 சதவிகிதம்தான். இதில் இருக்கும் வித்தியாசத்தை வைத்தே நாம் சொல்லி விட முடியும்.
சமீபத்திய பட்ஜெட்டின்படி, இந்தியாவில் மத்திய அரசு சாமானியர்கள் மீது விதித்து வரும் வரி விகித அளவு 5% – 25% வரைதான். அதிலும் வருடத்திற்கு 5 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் வருமானம் வரி செலுத்த வேண்டியது அவசியம் இல்லை. வருமானம் 5 லட்சத்தைத் தாண்டும்போது அதற்கேற்ப 5% – 10% மற்றும் 15% அதிகபட்சமாக 25% விதிக்கப்படுகிறது.
வருமானம் லட்சங்களைத் தாண்டி கோடிக்குச் செல்லும்போது அவர்கள் சாமானியர்கள் இல்லை. பணக்காரர்கள் என்றே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவர். அப்படி வருமானம் கோடிகளைத் தொடும் பட்சத்தில் வருமானத்தில் 30 சதவிகிதத்தை வருமான வரியாகச் செலுத்த வேண்டும். அரசு எப்பொழுதும் மக்களின் நலனில்தான் தன்னுடைய முதன்மை கவனத்தைச் செலுத்தி வருகிறது.
அடுத்து கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் வரி விகிதங்களைப் பார்க்கும்போது சென்ற ஆண்டைவிடவும் இந்த ஆண்டு அதிகம்தான். கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்கும் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு மிக முக்கியமானதாக இருக்கிறது.
பெரும்பாலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எங்கு கார்ப்பரேட் வரிச் சலுகைகள் அதிகமாக இருக்கிறதோ அங்கு மட்டும்தான் முதலீடு செய்ய முன் வருகின்றனர். அப்படி இருக்கும் போது அரசு கார்ப்பரேட் நிறுவனங்களின் மீதான வரி விகிதத்தைக் குறைத்தால் மட்டுமே வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க முடியும். உதாரணத்திற்கு இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நல்ல வரிச் சலுகைகள் இருக்கும் பட்சத்தில், வெளிநாட்டிலிருந்து பல நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க முன்வரும்.

இதனால் பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உண்டாகி நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் குறையும். மேலும், ஒரு பொருளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து வாங்குவதற்கும், நம் நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டதை வாங்குவதற்கும் வித்தியாசம் உண்டு. நம் நாட்டிலேயே தயாரிக்கப்படுவதால் அந்தப் பொருள், மிகக் குறைந்த விலையில் கிடைக்கும். அதேபோல் கார்ப்பரேட் நிறுவனங்களின் உற்பத்தியும் வருவாயும் பெருகும்போது அரசுக்குச் செலுத்தப்படும் வரிப்பணம் இன்னும் அதிகமாகும். அதனால் நாட்டின் பொருளாதாரம் உயரும். இந்தியாவில் புதிதாய் தொழில் தொடங்குவோருக்கு அறிமுக சலுகையாக 15% – 20% வரை மட்டுமே வரி விதிக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, அந்த வரி விகிதம் அதிகபட்சம் 22% முதல் 25% வரை விதிக்கப்படுகிறது. ஒரு கார்ப்பரேட் நிறுவனம் எந்த அளவுக்கு அரசிடமிருந்து வரிச் சலுகைகளைப் பெற்றுக் கொள்கிறதோ, அந்த அளவுக்கு அதனால் அரசாங்கத்திற்கும் ஆதாயம் உள்ளது. எனவே, இங்கு நாம் சாமானியர்களின் வரிச் சலுகைகளையும் வரி விகிதங்களையும் கார்ப்பரேட் நிறுவனங்களின் மீது விதிக்கப்படும் அளவோடு ஒப்பிட்டுக் கருத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல் சாமானியர்களுக்கும் அரசு அதிகமான வரிச் சலுகைகளை வழங்கி வருவதை மறுக்க முடியாது. மொத்தத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அதிகளவு வருமானம் வரிச் சலுகைகள் அளிப்பதால் பொருளாதாரம் கண்டிப்பாக மேன்மை அடையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. மக்கள் இரண்டையும் குழப்பிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை” என்றார்.

விகடன் DoubtOfCommonMan பக்கத்தை ஃபேஸ்புக்கில் பின்தொடர இங்கே க்ளிக் செய்யவும்
இதேபோல விகடனின் #DoubtOfCommonman பக்கத்தில் கேட்க உங்களிடம் கேள்விகள் இருந்தால், இந்தப் படிவத்தில் பதிவுசெய்யவும்.