ஊரடங்கு உத்தரவால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பு கொரோனாவை விட அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. ஆகவே நாடு முழுவதும் உள்ள மக்கள் வீட்டிற்குள்ளாக முடங்கிப் போய் உட்கார்ந்துள்ளனர். அதை மீறி வெளியே வருபவர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மட்டும் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 11ஆயிரத்து 565 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விதிகளை மீறியதாக 17ஆயிரத்து 668பேர் கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் வாழ்வா சாவா போராட்டம் என மனதின் குரல் வானொலி உரையின் போது பிரதமர் மோடி கூறினார். மேலும் இத்தகைய காலகட்டத்தில் மிகக் கடினமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் அறிவுறுத்தினார். இதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களிடம் குறிப்பாக ஏழைகளிடம் மன்னிப்பு கோருவதாகக் குறிப்பிட்ட அவர், சிலர் கொரோனாவால் ஏற்படும் பாதிப்பின் தீவிரத்தை உணராமல் கட்டுப்பாடுகளை மீறுவதாக வருத்தம் தெரிவித்தார். ஆகவே அவர்கள் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவால் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ள அவர், மத்திய அரசு அறிவித்துள்ள உதவித்தொகை விரைவில் மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இருப்பிடம் அமைத்துக் கொடுப்பதுடன் அவர்களின் வங்கிக் கணக்குகளில் உதவித்தொகையை செலுத்த வேண்டும் எனவும் ராகுல் வலியுறுத்தியுள்ளார். அதே போல் கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்தினால் மட்டுமே பாதிப்பு குறித்துத் தெளிவாக அறிய முடியுமென்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.