கொரோனா வைரஸ் உலகையே ஆடிப்படைத்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போரின் ஒருபகுதியாக வரும் ஏப்ரல் மாதம் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து வகையான தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. முடங்கிக்கிடக்கும் மக்களுக்குக் கைகொடுக்கும் விதமாக தமிழக அரசு ஒரு ரேஷன் அட்டைக்கு ஆயிரம் ரூபாய் வீதம் இழப்பீடு அறிவித்துள்ளார். மேலும் கட்டடத் தொழிலாளர்கள், ஓட்டுநர் நல வாரியங்களில் அங்கத்தினராக இருப்பவர்களுக்குக் கூடுதலாக ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குடும்ப அட்டைக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் ஆகியவை இலவசமாக வழங்குவதாகவும் அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பால் தொழில் இழந்து வாடும் வில்லிசை மற்றும் கிராமியக் கலைஞர்களுக்கு அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து நாகர்கோவிலைச் சேர்ந்த வில்லிசை கலைஞரும் குமரி மாவட்ட கிராமியக் கலைஞர்கள் முன்னேற்றச் சங்க நிர்வாகியுமான தங்கமணி கூறுகையில், “கிராமியக் கலைஞர்கள் தென்மாவட்டங்களில் அதிகமாக உள்ளனர். அதிலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வில்லிசைக் கலைஞர்கள் அதிகமாக உள்ளனர். மூன்று மாவட்டங்களிலும் சேர்ந்து 1500-க்கும் அதிகமான வில்லிசைக் கலைஞர்கள் உள்ளனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக வில்லிசைக் கலைஞர்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். தமிழ் மாதமான பங்குனி, சித்திரை மாதங்களில் கோயில் திருவிழாக்கள் களைகட்டும். இந்த சீசன்களில் மட்டுமே வில்லிசைக் கலைஞர்களுக்கு அதிக பணி கிடைக்கும். மார்ச், ஏப்ரல் மாதங்கள் வரும் வருவாயை வைத்துதான் ஆண்டின் 12 மாதங்களும் எங்கள் ஜீவனம் நடக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கிராமக் கோயில் விழாக்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. எனவே வில்லிசைக் கலைஞர்களும் நையாண்டி மேளம், செண்டை மேளம், கணியான் கூத்துக் கலைஞர்களும் வேலை இழந்துள்ளனர். எனவே, கிராமிய இசை கலைஞர்களுக்குக் குறைந்தபட்சம் பத்தாயிரம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்க வேண்டும்.

மேலும் வில்லிசைக் கலைஞர்களை அரசு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதன் மூலம் அவர்களுக்கு சொற்ப வருமானத்துக்காவது வழிவகை செய்ய வேண்டும் என ஏற்கெனவே கோரிக்கை விடுத்திருந்தோம். அதையும் தமிழக முதல்வர் பரிசீலனை செய்து கிராமியக் கலைஞர்களின் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும்” என்றார்.