தி.மு.க-விலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார் முன்னாள் எம்.பி கே.பி.ராமலிங்கம். ஸ்டாலினை விமர்சனம் செய்து முதல்வரைப் புகழ்ந்ததால் அவரைக் கட்சியிலிருந்து நீக்கி இருப்பதாகச் சொல்கின்றனர் தி.மு.க வட்டாரத்தினர்.

கே.பி.ராமலிங்கம்

கொரோனா வைரஸ், ஒட்டுமொத்த உலகத்தையும் ஆட்டம் காண வைத்திருக்கிறது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர, உலக நாடுகள் தீவிரமாக முயற்சி மேற்கொண்டுவருகின்றன. இந்தநிலையில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று தி.மு.க முன்னாள் எம்.பி கே.பி. ராமலிங்கம் அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும் காணொலிக் காட்சியின் மூலம் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை அவசியமற்றது எனவும் தெரிவித்திருந்தார்.

ஸ்டாலின்

கூடவே, முக்கியமான பிரச்னைகள் என்றால் அரசியல் கட்சித் தலைவர்கள் இமெயிலில் முதல்வருக்கு அனுப்பவேண்டும், ஊரடங்கு உத்தரவு அனைவருக்கும் பொருந்தும். 144 தடை என்றால் அரசியல் நடவடிக்கைகளுக்கும்தான். கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்ற கோரிக்கை வரக்கூடாது’ எனவும் கூறியிருந்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குச் சாதகமாகவும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு எதிராகவும் இந்தக் கருத்து அமைந்துவிட்டது.

காரணம், `கொரோன பரவலைத் தடுப்பது, ஆளும் கட்சியால் மட்டும் முடிகின்ற பணி அல்ல; அனைத்துக் கட்சித் தலைவர்களைக் கூட்டி வீடியோ கான்ஃப்ரன்ஸிங் முறையில் ஆலோசனை நடத்த வேண்டும்’ என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.

அழகிரி

இந்த நிலையில் ஸ்டாலின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக கே.பி.ராமலிங்கத்தின் அறிக்கை அமைந்துவிட்டது. இதனால்தான் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க நிர்வாகிகள் சிலர், ” நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கே.பி.ராமலிங்கம் தி.மு.க விவசாய அணியின் மாநிலச் செயலாளராக இருந்து வந்தார். 2006-ம் ஆண்டு முதல் 2011 வரை தி.மு.க ஆட்சிக்காலத்தில் தென்னை விவசாயிகள் நல வாரியத் தலைவராகவும் தி.மு.க சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார். கலைஞர் இருந்தபோது அழகிரியா ஸ்டாலினா என்ற நிலைப்பாட்டைச் சிலர் எடுத்தபோது அழகிரி பக்கம் சென்றவர் இவர்.

எடப்பாடி பழனிசாமி

ஒருகட்டத்தில் தலைமையின் கோபத்துக்கு ஆளாகாமல் அமைதியைக் கடைப்பிடித்து வந்தார். இந்த நிலையில் ராஜ்யசபா சீட்டையும் கேட்டு வந்தார். தலைமையின் மீது அதிருப்தியில் எதிர்த்துப் பேசிவிட்டார். மேலும், ஒரு கட்சியில் இருந்துகொண்டே அதன் தலைமையை விமர்சிப்பது சரியா எனச் சிலர் கேள்வி எழுப்பியதால் கட்சியிலிருந்தே நீக்கப்பட்டார்” என்கின்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.