பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

பொதுவாக எப்போதும் கடிகார அலார ஒலி கேட்டுத்தான் கண்விழித்து பழக்கம். ஆனால், கடந்த சில தினங்களாக ஆம்புலன்ஸ் சைரன் ஒலி கேட்டுத்தான் எங்கள் பொழுதே விடிகிறது.

ஆம், நாங்கள் இருப்பது உலகிலேயே கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கும் இத்தாலியில். குறிப்பாக, பல்லாயிரக்கணக்கான மக்களை ஒருமித்தே விழுங்கிய வட இத்தாலியில். இன்றும் அப்படித்தான், சைரன் ஒலி கேட்டு விழித்தெழுந்தேன்.

நினைவுகள் அசைபோட்டது.

கிரண், எந்திரி ஸ்கூலுக்கு மணி ஆயிடிச்சு. பாப்பா, நீயும் எந்திரி. சீக்கிரம்.

Italy

இப்படி பிள்ளைகள் இரண்டு பேரையும் எழுப்பி, காலை கடனையும் டிபனையும் முடிக்க வைத்து (தனித்தனியாக தாங்க) பள்ளிக்கூடம் போக ரெடி பண்ணி, நானும் கிளம்பி, போற வழியிலே என் மகனை பள்ளியிலே இறக்கிவிட்டு, எனது அலுவலகம் சென்று இருக்கையில் அமரும்போது மணி 8 ஆகியிருக்கும்.

வழக்கம் போல லேப்டாப் திறந்து வேலையை முடித்துவிட்டு வீடு வர சாயங்காலம் 6 – 7 மணிக்கு மேல் ஆகிவிடும். அதற்குள் பிள்ளைகள் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு தங்கள் பள்ளிப்படிப்பில் மூழ்கியிருப்பார்கள்.

இத்தாலி வந்து கடந்த 7 வருடமாக இதுதான் எங்கள் வாழ்க்கை. விடுமுறையில் ஊரு சுற்றுவது, பள்ளி திறந்ததும் வீட்டுக்கும் வேலைக்கும் பறப்பது. இப்படி பம்பரமாக ஆனாலும் மகிழ்ச்சியாகத்தான் எங்களது வாழ்க்கை இருந்தது.

இவை அனைத்தையும் ஒரே நாளில் மாற்றிப்போட்டது கொரோனா எனும் கொடிய வைரஸ்.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. உண்மை, ஆனால் இந்த கொரோனா வந்ததிலிருந்து பொது இடங்களிலே கூடவே கூடாதென்று இத்தாலி அரசு பெரிதும் கெடுபிடி. எனவே, கடந்த 4 வாரத்துக்கும் மேலாக வீட்டுக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருக்கிறோம், குடும்பத்தோடு.

தலையணை அருகில் இருந்த தொலைபேசி சிணுங்கியது. நினைவுகள் நிகழ்காலம் திரும்பியது.

தயக்கத்துடனே எடுத்தேன். இத்தாலியின் நிலைமையை அனுதினமும் செய்திகளில் கண்டு கவலையில் இருந்த என் தாய்க்கு இங்கு அனைவரும் நலமே என்று எனக்குள் இருந்த கவலையை மறைத்து பதிலளித்து வைத்தேன்.

உறங்கிக் கொண்டிருந்த பிள்ளைகளை எழுப்ப முயன்றேன். “ஸ்கூல் லீவு தானே அப்பா, இன்னைக்கும் சீக்கிரம் எழுந்திருக்கணுமா?” என்று நேற்று சிணுங்கிய முகம் கண்முன் வந்தது. சரி என்று ஒரு புன்முறுவலுடன் எழுந்து எனது காலை கடனைக் கழித்து பத்திரிகை படிக்கத் தொடங்கினேன்.

திருப்பிய பக்கமெல்லாம் கொரோனாவின் கொலைவெறி பற்றிய செய்திதான்.

மகேஸ்வரன் ஜோதி

வேறு நாள்களாக இருந்திருந்தால் இந்நேரம் சுடச் சுட காபி வந்திருக்கும். பள்ளி விடுமுறை என்ற காரணத்தினால் என்னவள் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்.

இன்னும் இரண்டு மாதங்களில் பள்ளியின் இறுதி ஆண்டுத் தேர்வு. ஆனாலும், இந்தக் கொரோனாவின் காரணமாக, பள்ளிகள் விடுமுறை விடப்பட்டுள்ளது என்ற போதும் மாணவர்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு அனைத்துப் பள்ளிகளும் ஆன்லைன் மூலமாகக் கல்வி வழங்கியபடி இருந்தது.

எனவே, பிள்ளைகளை எழுப்பி அதற்குத் தயாராகக் கூறிவிட்டு எனது அலுவல் பணியைத் தொடங்கினேன்.

பொழுது விடிஞ்சு, பொழுது போனா, லேப்டாப்தான் கதி என்று ஆகிவிட்டது. இது ஒன்றும் புதியதில்லை என்ற போதும் ஆபீஸ் சென்றால் எப்படியும் 6 – 7 மணிக்கு வேலையை முடித்துவிட்டு வீடு வந்து சேர்ந்துவிடுவோம். ஆனால், இன்றோ வீட்டில் இருந்தபடியே வேலை செய்வதால் இரவு தூங்கும் வரை இதிலேயே நாள்கள் கரைந்துவிடுகிறது.

இந்த ஐ.டி-ல வேலை பார்க்கிறது எவ்வளோ நல்லாயிருக்கு என்று எண்ணிய காலம் எல்லாம் மலை ஏறிப் போய்விட்டது. இப்பொழுது என்னவென்றால், “நல்லாயிருக்கு நீங்க ஐ.டி-ல வேலைபாக்குறது” என்று முதல் மரியாதை வடிவுக்கரசி கரைச்சி கொட்டுகிற மாதிரியே தோன்றுகிறது.

பெற்றோர் மட்டுமல்ல. இத்தாலியில் அனைத்து பிள்ளைகளுக்கும் வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாக இந்த அரசு ஒவ்வொரு நாளின் முதல் பாதியிலும் லேப்டாப் கொண்டே கல்வி கற்பிக்கிறார்கள். சின்னஞ்சிறு பிள்ளைகள்கூட எந்த ஒரு தயக்கமும் இன்றி டெக்னாலஜியை உபயோகப்படுத்துவது பெருமையாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கிறது.

Italy

மதியம் உண்ணும் வேளையில்தான் அந்த வேதனையான செய்தி வந்தது. ஆம், என் மகளின் பள்ளி ஆசிரியரின் தந்தை இந்தக் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தார். அவர் இன்று காலமாகிவிட்டதாக வந்த செய்திதான் அது. சில தினங்களுக்கு முன் அவருக்கு பாதிப்பு என்று மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவருக்கு கையசைத்து வழியனுப்பி வைத்ததாகவும், அதுவே கடைசியாகக் கண்ட தருணம் என்றும் அவர் கூறியபோது நெஞ்சம் வருந்தியது. ஆம், மருத்துவமனையில் அவர் இறந்ததால் அவரது முகம்கூட பார்க்க அனுமதியில்லை.

இப்படிப்பட்ட ஒரு இழப்புக்கு என்ன சொல்லி ஆறுதல் கூற?

இதுவரை தொலைக்காட்சியிலும் செய்திகளிலும் மட்டுமே கேள்விப்பட்டுக் கொண்டிருந்த நிகழ்வுகள், இதோ எங்களுக்கு மிக அருகில் வந்துவிட்டது. நேற்றுகூட என் நண்பனின் அப்பார்ட்மென்டில் ஒரு முதியவருக்கு பாதிப்பு என்று வருத்தத்துடனே கூறினார்.

இதுவரை, நமக்கெல்லாம் வர வாய்ப்பில்லை என்று திடமாக நம்பிய எங்களுக்கு இதுபோன்ற செய்திகள் தினமும் எங்களைச் சுற்றிச் சுற்றி வந்த வண்ணம் இருப்பதால் எங்களது குருட்டு நம்பிக்கையும் தகர்ந்துகொண்டிருந்தது.

சிறிது நேரம்தான் மணி மாலை 6 மணி ஆகிவிடும் என்று எனது வேலையை மடமட என முடித்துக் கொண்டிருந்தேன்.

Representational Image

6 மணிக்கு அப்படி என்ன விசேஷம் என்றுதானே கேட்கிறீர்கள். கூறுகிறேன். தினமும் மாலை 6 மணிக்கு இத்தாலியில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவினால் பாதித்தவர் மற்றும் இறந்தவரின் எண்ணிக்கையை அறிவிப்பார்கள்.

இன்றாவது எண்ணிக்கை குறைய வேண்டுமே என்று அனைத்து ஆண்டவனையும் வேண்டிக்கொண்டே காதுகளைக் கூர்மையாக்கி டிவியில் செய்தி கேட்கத் தொடங்கினேன்.

இன்று இறந்தவர் எண்ணிக்கை 800 தாண்டியது என்று அறிவித்தது கேட்டு கடவுளை பலமாகக் கடிந்துகொண்டேன். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்க வேண்டுமென மனைவி கூறியதால் வீட்டின் அருகில் இருந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றேன்.

கடந்த 4 வாரங்களில் நான் வெளியில் செல்வது இது மூன்றாவது முறை. ஆம், அவ்வளவு கட்டுப்பாடுகள் இங்கே. மேலும், மார்க்கெட் சென்றால் குறைந்தது 1 மீட்டர் இடைவெளியில் ஒருவர் பின் ஒருவர் என வரிசையில் நின்றுதான் செல்ல வேண்டும். இருப்பினும், மனதிற்குள் ஒரு வித பயம். யாரைப் பார்த்தாலும் கொரோனாவின் குத்தகைக்காரராகவே தோன்றியது.

Italy

அச்சத்துடனே வேகமாக பொருள்கள் வாங்கி வீடு திரும்பினேன். நல்லவேளையாக சமூக வலைதளங்களில் பகிர்ந்தது போன்ற அமெரிக்காவில் நிகழும் அடிதடிகள் இங்கு எங்கும் இல்லை. மக்கள் அனைவரும் பொறுமையாக வரிசையில் நின்று பொருள்களை வாங்கிச் செல்கிறார்கள் என்பதை நினைத்து நிம்மதி கொண்டேன். மேலும், அனைத்துப் பொருள்களும் தங்கு தடையின்றிக் கிடைக்கின்றன.

இப்படித்தான் ஒவ்வொரு நாளும் எங்களுக்கு வேதனையுடன் செல்கிறது. எங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லையென்றாலும் எங்களைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளால் கவலை மேலோங்கியே இருக்கிறது.

இதோ இந்தப் பதிவை எழுதும் இந்நேரம்கூட ஒரு ஆம்புலன்ஸ் சைரன் ஒலி எழுப்பி சென்றுகொண்டிருக்கிறது. எனது மனதோ அந்த வாகனத்தின் உள்ளிருப்போருக்காக ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்தது.

வேலைகள் அனைத்தையும் முடித்து இன்றைய பொழுது இனிதே முடிந்தது என்று படுக்கைக்குச் செல்லும்போது, சில தினங்களுக்கு முன் எங்கள் பால்கனியிலிருந்து கைதட்டி நன்றி செலுத்திய சமயம் எங்கள் அண்டை வீட்டார் கூறியதுதான் நினைவுக்கு வந்தது.

இதுவும் கடந்து போகும்.

ஆம், இன்று வரை எங்களை எந்தப் பாதிப்புமின்றி வைத்த இறைவனுக்கு நன்றி செலுத்தியபடியே அடுத்த விடியலை நோக்கி காத்திருக்கத் தொடங்கினேன்.

நாளையாவது கடிகார அலாரம் ஒலித்து விழிக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு உறங்கச் செல்கிறேன்.

இத்தாலியிலிருந்து,

உங்கள் மகேஷ்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.