சென்னை பழைய வண்ணாரப்பேட்டை தட்டான்குளத்தைச் சேர்ந்தவர் ரவி (40). இவரின் மனைவி சாவித்திரி (38). இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். ஸ்டீல் பட்டறையில் ரவி வேலை பார்த்துவந்தார். சாவித்ரி, அந்தப்பகுதியில் வீட்டு வேலைகளைச் செய்துவந்தார். ஊரடங்கு காரணமாக சாவித்திரியின் மகனும் மகளும் அவரின் சகோதரி வீட்டுக்கு சென்றுவிட்டனர். அதனால் சாவித்ரியும் ரவியும் மட்டுமே வீட்டில் தனியாக இருந்தனர்.

ரவி

Also Read: `21 நாள் ஊரடங்கு ஏன்?; கொரோனாவை எதிர்க்கும் ஆயுதம்!’ – பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள்

இந்த நிலையில், 29.3.2020 -ம் தேதி ரவி மட்டும் வீட்டின் வெளியில் நின்றுகொண்டிருந்துள்ளார். அப்போது ரவியின் அம்மா, அங்கு வந்துள்ளார். அவர், `சாவித்திரி இன்னும் கண்விழிக்கவில்லையா, அவள் எங்கு இருக்கிறாள்?’ என்று ரவியிடம் கேட்டுள்ளார். அதற்கு ரவி சிரித்தபடி, `கட்டிலில் படுத்துகிடக்கிறாள்’` என்று கூறியுள்ளார். உடனே ரவியின் அம்மா உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது கட்டிலில் ரத்த வெள்ளத்தில் சாவித்திரி இறந்து கிடந்ததைப் பார்த்து ரவியின் அம்மா அதிர்ச்சியில் உறைந்தார்.

இதையடுத்து கொருக்குப்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார், சம்பவ இடத்துக்கு வந்து சாவித்திரியின் சடலத்தைக் கைப்பற்றினர். பிரேதப் பரிசோதனைக்காக சாவித்திரியின் சடலத்தை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், ரவியிடம் சாவித்திரியின் மரணம் குறித்து விசாரித்தனர். அப்போது அவர், `நான்தான் அவளைக் கொலை செய்தேன்’ என்று கூலாக கூறியுள்ளார். அதன்பேரில் ரவியை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

கொலை

சாவித்திரி கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் செங்கல்பட்டு மாவட்டம், கல்வாய் அஞ்சல், மேல்கல்வாய் கிராமத்தில் குடியிருக்கும் அவரின் சகோதரி சல்சா, கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதில், என்னுடைய தங்கை சாவித்திரிக்கும் ரவிக்கும் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கடந்த 10 நாள்களுக்கு முன்பு சாவித்திரி, தன்னுடைய மகனையும் மகளையும் அழைத்துக் கொண்டு மேல்கல்வாய் கிராமத்துக்கு வந்தார்.

அப்போது அவர் மிகவும் மனவேதனையில் இருந்தார். அதனால் அவரிடம், `வீட்டில் ஏதாவது பிரச்னையா?’ என்று கேட்டேன். அதற்கு சாவித்திரி, `ரவி, சமீபகாலமாக வேலைக்குச் செல்லவில்லை. அதோடு வீட்டிலேயே மதுஅருந்துவதோடு குடிக்கப் பணம் கேட்டு என்னை அடித்து துன்புறுத்துகிறார்’ என்று அழுதபடி கூறினார். அதைக்கேட்ட நான், சாவித்திரிக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தேன். இந்தச் சமயத்தில்தான் 29.3.2020-ம் தேதி காலையில் ரவியின் தம்பி மனைவி அம்பிகா எனக்கு போன் செய்து, சாவித்திரியின் தலையில் அடித்து ரவி கொலை செய்துவிட்டதாகக் கூறினார்.

Also Read: `தடம் மாறிய அம்மாவின் வாழ்க்கை; தட்டிக்கேட்ட மகள் கொலை!’- 6 ஆண்டுகளுக்குப் பிறகு துப்பு துலங்கியது

உடனடியாக நானும் என் குடும்பத்தினரும் வண்ணாரப்பேட்டைக்கு வந்தோம். என் தங்கை சாவித்திரியை தலையில் அடித்துக் கொலை செய்த அவரின் கணவர் ரவி மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். புகாரின்பேரில் ரவியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து கொருக்குப்பேட்டை போலீஸார் கூறுகையில், “ஊரடங்கு காரணமாக வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த ரவிக்கும் அவரின் மனைவி சாவித்திரிக்கும் இடையே 28.3.2020 அன்று இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் தூங்கச் சென்றுள்ளனர். ரவிக்கு தூக்கம் வரவில்லை. அதனால் நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த சாவித்திரியின் தலையில் சுத்தியலால் ஓங்கி அடித்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.

அதன்பிறகு ரவி, எதுவும் நடக்காது போல வீட்டிலேயே இருந்துள்ளார். 29-ம் தேதி காலையில் 8.30 மணியளவில் ரவியிடம் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் விசாரித்தபோதுதான் சாவித்திரி கொலை செய்யப்பட்ட தகவல் தெரியவந்துள்ளது. விசாரணையில் ரவிக்கு மனநலம் பாதிப்பு இருப்பதாக தெரியவந்துள்ளதால் அவரைக் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம்” என்றனர்.

இந்தச் சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.