கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட ஏழு பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆனால், சுகாதாரத்துறையோ அவர்கள் கொரோனா காரணமாக இறக்கவில்லை எனக் கூறியது. அதேசமயம் நாகர்கோவில் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ சுரேஷ் ராஜன் ஏழு பேர் மரணம் குறித்து சந்தேகம் கிளப்பியுள்ளார். கொரோனா தொற்று இல்லாமல் இருந்தால் அவர்கள் எதற்காக கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டனர். உண்மை நிலவரத்தை சொல்லக் கூடாது என மருத்துவர்களுக்கு அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது எனவும் சுரேஷ்ராஜன் சந்தேகம் தெரிவித்தார்.

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,“கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் கொரோனா இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கும் நபர்கள், கொரோனா அறிகுறி உடையவர்கள், ஏற்கெனவே பல்வேறு வியாதிகளில் பாதிக்கப்பட்டு உடல்நிலை மோசமானவர்கள் என மூன்று வகை நோயாளிகளுக்கு தனித்தனியே வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி கொரோனா வார்டு

அங்கு அவர்களைக் கண்காணித்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே, இதைக் கொரோனா நோய் பாதிப்பு என்று யாரும் குறிப்பிட வேண்டாம். தற்போதுவரை கொரோனா பாதிப்பு மற்றும் அறிகுறியோடு எந்த நோயாளிகளும் இல்லை. கொரோனா வார்டு எனக் கூறுவதால் மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே, இதைக் கொரோனா வார்டு என பயன்படுத்த வேண்டாம். அதற்குப் பதிலாக சாரி வார்டு (SEVERE ACUTE RESPIRATORY WARD) என பயன்படுத்த வேண்டும். சாரி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் ஏற்கெனவே காணப்பட்ட பலவித நோயால் உயிரிழந்துள்ளனர்.

எனவே, ஊடகங்களும், சமூக ஊடகங்களும் கொரோனா வார்டு எனக் குறிப்பிட வேண்டாம், சாரி வார்டு எனக் குறிப்பிடுங்கள். கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இதுவரை கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை. ரத்தம் மற்றும் சளி பரிசோதனை முடிவுகள் வர தாமதம் ஏற்படுவதால் முடிவுகள் அறிவிக்க தாமதம் ஏற்படுகிறது. ரத்தம் மற்றும் சளி மாதிரிகளை குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை செய்ய விரைவில் ஏற்பாடுகள் செய்யப்படும். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை அனுமதிக்கும் வகையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை

மார்ச் 10-ம் தேதிக்குப் பின்னர் வெளிநாட்டிலிருந்து திரும்பிய 2,300 பேர் தற்போது வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர். வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களை வீட்டு கண்காணிப்பில் வைப்பதற்கான ஸ்டிக்கர் ஒட்டும் பணி இதுவரை முழுமையடையவில்லை. 4,446 பேர் தனிமைப்படுத்தப்பட்டு  வீடுகளில் சுகாதாரத் துறை மூலம் கண்காணிக்கப்படுகிறார்கள். யாரேனும் வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் குறித்து தகவல் தெரிந்தால் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.