கொரோனா கொடூரத்துக்கு இணையாக, மக்களின் அன்றாடத் தேவைகளும் நெருக்கடிகளும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன!

இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவினால் வேலையின்றி வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கும் 130 கோடி மக்களுக்கான உணவுத் தேவை, பொருளாதாரச் சிக்கல்கள், வருகிற நாள்களில் கொரோனா பாதிப்பைவிடவும் பெரிய பிரச்னையாக வெடித்துக்கிளம்பும் என்று எச்சரிக்கிறார்கள் துறைசார்ந்த வல்லுநர்கள்.

இந்த நிலையில், மத்திய – மாநில அரசுகளின் நடவடிக்கைகளை விமர்சித்துப் பேசும் தி.மு.க எம்.பி தயாநிதி மாறன், “கடந்த வெள்ளிக்கிழமை வரையிலும் `நாடாளுமன்றத்தை மூடுங்கள்… மூடுங்கள்’ என்று நாங்கள் சொன்னபோதெல்லாம் எங்களைப் பேசவிடாமல் தடுத்துவிட்ட மத்திய அரசு, தடாலடியாக கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்றத்தை மூடுகிறது. மத்தியப் பிரதேசத்தில், பா.ஜ.க-வை எப்படியாவது அரியணையில் அமரவைத்துவிட வேண்டும் என்பதில், காட்டிய அக்கறையை 130 கோடி மக்களின் பாதுகாப்பில் காட்டவில்லை, இந்த மத்திய அரசு!

தயாநிதி மாறன்

மாநில எல்லையை மூடுங்கள், மாவட்ட எல்லையை மூடுங்கள், ஊரடங்கு உத்தரவு போன்ற மத்திய அரசின் உத்தரவுகள் எல்லாமே சரியானவைதான். ஆனால், இவற்றையெல்லாம் முன்கூட்டிய திட்டமிட்டு, போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெச்சரிக்கையாக செய்துமுடித்துவிட்டல்லவா செய்திருக்க வேண்டும்… கொரோனா தொற்று வெளிநாடுகளிலிருந்துதான் இந்தியாவுக்குள் ஊடுருவியிருக்கிறது. எனவே, தொற்றின் ஆரம்பப் புள்ளியாக இருக்கக்கூடிய வெளிநாட்டு வரவையல்லவா பிப்ரவரி மாதத்திலேயே நிறுத்தியிருக்க வேண்டும்! அதைச் செய்யாததால்தான், இப்போது தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக அல்லல்படுகிறோம். இப்போதும்கூட, பாதிக்கப்பட்ட நபரின் ஏரியாவைக் கணக்கிட்டு அந்தக் குறிப்பிட்ட வார்டை மட்டும் முதலில் மூடுவதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

அடுத்ததாக கட்டடத் தொழிலில் ஆரம்பித்து பல்வேறு அடிப்படைத் தொழில்களைச் செய்துவரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் மட்டும் லட்சக்கணக்கில் இருக்கின்றனர். இவர்களெல்லாம் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிச் செல்ல முறையாக அறிவிப்பு செய்து போக்குவரத்து வசதிகளையும் முன்கூட்டியே செய்துகொடுத்திருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு இவற்றையெல்லாம் செய்யத் தவறிவிட்டன. இந்த நிலையில், இத்தனை பேரின் உணவுத் தேவையை வருகிற நாள்களில் எப்படி சமாளிக்கப் போகிறோம்? இந்த நிலை, இப்படியே தொடர்ந்தால், நிலைமை இன்னும் மோசமாகும்!

Also Read: மது கிடைக்காததால், ஒருவர் தற்கொலை… கேரளா துயரம்!

21 நாள் ஊரடங்கில் மக்கள் எல்லோருமே வீட்டுக்குள் அடைந்துகிடக்கும் நிலையில், அரிசி, பருப்பு போன்ற தானியங்கள் ஓரளவு தட்டுப்பாடின்றி இப்போது கிடைத்துவருகிறது… ஆனால், காய்கறி…? சிறுநிறுவனங்கள், கடைகள் எல்லாமே மூடிக்கிடக்கும் நிலையில், ஏப்ரல் மாதம் தன் ஊழியர்களுக்கு இந்நிறுவனங்கள் எப்படி சம்பளம் வழங்கப்போகிறது? அதற்காக அரசு எடுத்திருக்கும் நடவடிக்கை என்ன?

தமிழ்நாட்டில் டாஸ்மாக்கை மூடிவிட்டோம்… ஆனால், கள் விற்பனை ஆரம்பித்துவிட்டதாக செய்திகள் வர ஆரம்பித்துவிட்டதே? கொரோனா விழிப்புணர்வு இன்னும் போதிய அளவு மக்களிடம் ஏற்படவில்லைதான். அதற்காக அத்தியாவசியத் தேவைகளுக்காக ரோட்டில் வருகிற மக்களைக்கூட போலீஸார் லத்தியால் அடித்து விரட்டுவதைப் பார்த்தால், பதறுகிறதே… மருந்து, மளிகைக் கடைகளைத் திறந்துவைத்திருக்க அனுமதித்துவிட்டு பொருள்கள் வாங்கச் செல்லும் மக்களை அடித்து துவைப்பது என்ன நியாயம்? மக்களை அடித்துவிரட்டினால், கொரோனா போய்விடுமா?

எடப்பாடி பழனிசாமி

இப்போதும்கூட, கடைகளில் மக்கள் கூட்டமாக நின்று பொருள்கள் வாங்கிச் செல்லும் நிலைமைதானே தொடர்கிறது. இதனால் தொற்று ஏற்படாதா? ரேஷன் பொருள்களை நிவாரணமாக வழங்க தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அதை எப்படி வழங்கப்போகிறார்கள்…. அங்கேயும் மக்கள் கூட்டமாக கூடினால், ஊரடங்கு உத்தரவுக்கே அர்த்தமில்லையே!

கேரளாவில், பள்ளிகளை மூடிய பின்னரும்கூட, குழந்தைகளுக்கான மதிய உணவை வீடுவீடாகக் கொண்டுபோய் கொடுத்தனர். பக்கத்து மாநிலங்கள் செய்கிற சரியான விஷயங்களைப் பார்த்தாவது நாமும் அதைப் பின்பற்றலாமே” என்கிறார் அக்கறையோடு.

தயாநிதி மாறன் முன்வைக்கிற கேள்விகளுக்கு விளக்கம் கேட்டு அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வனிடம் பேசியபோது, “ஏப்ரல் 2-ம் தேதியிலிருந்து குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப டோக்கன் கொடுக்கப்பட்டுதான் நிவாரணத் தொகை வழங்கப்படவிருக்கிறது. இந்தத் தொகையைப் பெற்றுக்கொள்ள வருபவர்களும்கூட, முறைப்படி சமூக இடைவெளியைப் பின்பற்றி நின்றுதான் தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும். எனவே, நியாய விலைக் கடைகளில் கூட்டம் கூடுவதற்கான வாய்ப்பு இல்லை.

வைகைச் செல்வன்

அடுத்ததாக, அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்காக கடைகளில் மக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் நோக்கில், காய்கறி மற்றும் மளிகைப் பொருள்களை வீடுகளுக்கே நேரடியாகச் சென்று வழங்குவதற்கான ஏற்பாடுகள் மாநகராட்சிகளின் மூலம் நடைபெற்று வருகின்றன.

கொரோனா பற்றிய விழிப்புணர்வு இல்லாமல், சாலைக்கு வரவேண்டிய தேவையும் இல்லாமல், அநாவசியமாக சுற்றித் திரியும் நபர்கள் மீதுதான் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். ஆயினும்கூட தற்போது, `காவல்துறை தடியடி பிரயோகத்தைக் கையாள வேண்டாம்’ என முதல்வரே அறிவுறுத்தியிருக்கிறார்” என்றார்.

கொரோனா விவகாரத்தில் மத்திய அரசுமீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கொடுத்துப் பேசிய தமிழக பா.ஜ.க மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், “நம்மைவிடவும் முன்னேறிய அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளிலேயே கொரோனா பாதிப்பு எந்தளவு இருக்கிறது என்பதை கண்கூடாகப் பார்த்துவருகிறோம்.

அதிக மக்கள் தொகை, அதுவும் அடர்த்தியான மக்கள் தொகையைக் கொண்ட ஜனநாயக நாடு இந்தியா. இங்கே எந்தவொரு நடவடிக்கையையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று சட்டென்று செயல்படுத்திவிட முடியாது. ஆனாலும்கூட, உலக நாடுகளோடு ஒப்பீட்டளவில், இந்தியாதான் குறைந்த கால இடைவெளியிலேயே பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. உதாரணமாக, சீன நாட்டிலிருந்து கொரோனா பரவுகிறது என்பது தெரிந்த உடனேயே, அந்நாட்டு விமானங்களுக்குத் தடை விதித்தது முதல், இந்த 21 நாள் ஊரடங்கு உத்தரவு வரையிலாக பல்வேறு விஷயங்களைச் சொல்லமுடியும்.

Also Read: `கட்சிப் பதவியைத் தொடர்ந்து அமைச்சர் பதவி!’- ராஜேந்திர பாலாஜிக்கு `செக்’ வைக்கும் மதுரைப் புள்ளி

Narendra Modi

பொருளாதார சிக்கல்களைத் தீர்ப்பதற்காக இதோ, மத்திய நிதி அமைச்சர் ஒரே அறிவிப்பில், ஒன்றே முக்கால் லட்சம் கோடி ரூபாய் அளவில் நிவாரண உதவிகளை அறிவித்திருக்கிறார்.

மத்தியப் பிரதேசத்தில், காங்கிரஸ் அரசு கவிழ்ந்துபோனதற்கு ராகுல்காந்தியின் முதிர்ச்சியற்ற அரசியல்தான் காரணம். அதாவது, தன் சகாக்களை மரியாதையாக நடத்தத் தெரியாததினாலேயே ஆட்சியை இழந்தார்கள். மறுபடியும் ஆட்சியைத் தக்கவைப்பதற்காக காங்கிரஸ் கட்சிதான் அதிக நேரம் செலவிட்டதே தவிர… பா.ஜ.க மீது பழி சொல்வதில் அர்த்தமில்லை!” என்றார் உறுதியாக.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.