சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் அலுவலக வாசலில் மார்ச் 28-ம் தேதி `தனிமைப்படுத்தப்பட்டோர்’ பட்டியலில் கமல் பெயர் இருப்பதாகச் சொல்லி சென்னை மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியது. உடனே கமலுக்கு கொரோனா என்று பரபரப்பு பற்றிக்கொண்டது. அதன்பிறகு கமல் ஆபீஸில் இருந்த நோட்டீஸை அகற்றிய மாநகராட்சி, “கெளதமி வீட்டில் ஒட்டவேண்டியதை கமல் ஆபீஸில் ஒட்டி விட்டோம். கெளதமியின் பாஸ்போர்ட்டில் அந்த முகவரிதான் இருந்தது” என்று சமாளித்தது. என்னதான் நடந்தது என்பது குறித்து கெளதமியிடம் பேசினோம்.

கௌதமி

“வெளிநாட்டிலிருந்து மார்ச் 10-ம் தேதி சென்னை விமான நிலையத்துக்கு வந்தபோது இப்போதுபோல அப்போது கொரோனோ குறித்த விழிப்புணர்வு கிடையாது. அப்போதே நான் என்னுடைய பேப்பர்களை முறையாக ஒப்படைத்துவிட்டு வந்தேன். எனக்குக் காய்ச்சலோ, வேறு எந்த நோயோ இல்லை. ஆனாலும், அன்று முதல் என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். என்னுடைய அலுவலகத்துக்குச் செல்வதை நிறுத்திவிட்டேன். அங்கே வேலைபார்த்தவர்களுக்கு விடுமுறை கொடுத்துவிட்டேன். இந்த மாதத்துக்கும், அடுத்த மாதத்துக்கும் உரிய சம்பளத்தையே முன்கூட்டியே கொடுத்துவிட்டேன். சினிமாவில் நான் நடித்தபோது ரொம்பவும் பிஸியாக இருந்தேன். அதனால் நான் நடித்த படங்களின் ப்ரிவ்யூ காட்சியைக்கூட பார்க்க நேரம் இல்லாமல் நடித்துக்கொண்டிருந்தேன். அப்போது பார்க்காமல் தவறவிட்ட படங்களை இப்போது பார்த்து ரசிக்கிறேன். நிறைய புத்தகங்கள் வாசிக்கிறேன். புதிதாக வேறொரு மொழியைக் கற்றுக்கொள்ளலாமா என்று யோசிக்கிறேன். முன்பு இருந்ததைவிட இப்போது நல்ல ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்.

டாக்டரான என் அப்பா கேன்சர் ஸ்பெஷலிஸ்ட். உயிருக்குப் போராடிய எத்தனையோ கேன்சர் நோயாளிகளுக்கு சிகிச்சைக் கொடுத்துக் காப்பாற்றியவர். ஒருமுறை என் உடலில் ஒருசில மாற்றங்கள் ஏற்பட்டன. அப்போது நானே என்னை சுயபரிசோதனை செய்துகொண்டு டாக்டரிடம் சென்று புற்றுநோய் பரிசோதனை செய்யச் சொன்னேன். எனக்கு புற்றுநோய் இருப்பதை உறுதிப்படுத்தினார்கள். அப்போது நான் தோளில் சாய்ந்துகொண்டு ஆறுதலாய் அழுவதற்கு என் அப்பா உயிரோடு இல்லை. கேன்சர் நோயின் சிகிச்சைக்கு ஒவ்வொருமுறை செல்லும்போதும் மன திடத்தோடு சென்று போராடி இறுதியில் கேன்சரை விரட்டியடித்தேன். இன்று இந்தியாவில் இருக்கும் எத்தனையோ மனிதர்கள் கேன்சர் நோயால் பீடிக்கப்பட்டு, விரக்தி அடையும்போது அவர்களுக்கு அருகில் நின்று ஆறுதல்கூறி, ஆலோசனை வழங்கி வருகிறேன். கேன்சரை பொறுத்தவரை எண்பது வகையான நோய்கள் உண்டு.

கௌதமி

Also Read: ` அம்பு எய்தது யார்…?’ – கமல் இல்லத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் கொதிக்கும் ம.நீ.ம

அவற்றில் மருந்து, மாத்திரைகள் பயன்படுத்தி தீர்க்க முடிகிற பட்டியலும் உண்டு. முற்றிவிட்ட வகைகளும் உண்டு. கொரோனோ வைரஸை மக்கள் எல்லோரும் ஏதோ மலேரியா காய்ச்சல், வைரல் ஃபீவர் மாதிரி மாத்திரை சாப்பிட்டால் குணமாகிவிடும் என்று சாதாரணமாக நினைத்து அலட்சியப்படுத்தி வருவது ஆபத்துக்கான அறிகுறி. நான் அலட்சியமாக இல்லை.

“கொரோனா வைரஸ் உடலுக்குள் புகுந்து நுரையீரலை ஆக்கிரமித்துக்கொள்கிறது. இதயநோய், சிறுநீரக வியாதி, சர்க்கரை நோய், சிகரெட் பிடிப்பவர்கள், உடல் பலவீனமானவர்கள் உயிர்களை கொரோனா தாக்கினால் அவர்கள் உயிரைக் காப்பாற்றுவது கடினம். கொரோனோ சிகிச்சை பெற்று குணமடைந்து வீட்டுக்குத் திரும்புகிறார்களே அது எப்படி சாத்தியம் என்கிற கேள்வியை நீங்கள் கேட்கலாம் அவர்கள் எல்லோருமே மேற்கண்ட வியாதி எதுவுமே இல்லாதவர்கள். அதுமட்டுமல்ல உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டவர்கள் என்பதுதான் உண்மை. கொரோனோ குறித்த விழிப்புணர்வு செய்திகளை எடுத்துச் சொல்லி பலபேர் அதை மதித்து பின்பற்றி வருகிறார்கள்.

கௌதமி

இன்னும் சிலபேர் ஆபத்தின் தன்மையை உணராமல் செய்யும் செயல்களைப் பார்த்தால் வருத்தமாக இருக்கிறது. அன்றாடம் அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்குச் செல்லும் மக்களுக்கு இடையே இடைவெளி வேண்டும் என்று வெள்ளைக்கோடு போட்டிருக்கிறார்கள். அதை மதித்து நடந்து கொரோனாவை விரட்டியடிக்க வேண்டுகிறேன். என்னைப்பற்றி ஏதோ ஒரு செய்தி வெளியில் பரவ என்மீது அன்பு கொண்டவர்கள் எனக்கு போன்செய்து பாசத்தோடு விசாரித்தார்கள் அக்கறையோடு விசாரித்த உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றி. கடவுள் அருளாலும், ஆசீர்வாதத்தாலும் நான் சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறேன்” என்றார் கெளதமி.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.