உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸால் இதுவரை 7 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிப்படைந்துள்ளதாகவும் 33,000-க்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவிலும் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வரும் இந்த வைரஸால் இங்கு இதுவரை 1000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்துள்ளனர். இதனால், கொரோனா என்ற பெயர் அனைத்து மக்களிடமும் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், கொரோனா என்ற பெயரைப் போலவே இருக்கும் கிராமம் ஒன்றில் வசிக்கும் மக்கள் அனைவரும் பிறரால் புறக்கணிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உத்தரப்பிரதேச மாநிலம், சீதாபூர் மாவட்டத்தில் கொரோனா என்ற பெயரைப்போல ஒலிக்கும் கோரவுனா என்ற கிராமம் உள்ளது. கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருவதை அடுத்து கோரவுனா கிராமத்தில் வசிக்கும் மக்கள் பாகுபாட்டை எதிர்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
Also Read: `கொரோனா வார்டு எனச் சொல்லாதீங்க…!’ – கன்னியாகுமரி கலெக்டர் சொல்லும் காரணம்
இதுதொடர்பாக கிராமத்தில் வசிக்கும் மக்களில் ஒருவரான ராஜன் என்பவர் பேசுகையில், “எங்கள் கிராமத்தில் உள்ள மக்கள் யாரும் வெளியே வரத் தயாராக இல்லை. மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். நாங்கள் கோரவுனா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று பிறரிடம் கூறினால், அவர்கள் எங்களைத் தவிர்க்கிறார்கள். கோரவுனா என்பது வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல. இது ஒரு கிராமத்தின் பெயர் என்பது அவர்களுக்குப் புரியவில்லை. பெயரைக் கேட்டவுடன் மற்ற சிலர் மிகவும் பயப்படுகின்றனர். எங்களின் தொலைபேசி அழைப்புகளுக்குக்கூட பதிலளிக்க மறுக்கிறார்கள்” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
“நாங்கள் சாலைகளில் செல்லும்போது, காவல்துறையினர் எங்களிடம் `எங்கே செல்கிறாய்’ என்று கேட்கின்றனர். நாங்கள் கோரவுனாவுக்குச் செல்கிறோம் என்று அவர்களிடம் சொன்னால் அமைதியற்றவர்களாக மாறுகின்றனர். எங்கள் கிராமத்துக்கு இத்தகைய பெயர் இருந்தால் அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்” என்று கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு நபரான சுனில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதே கிராமத்தைச் சேர்ந்த ராம்ஜி என்பவர், “நாங்கள் தொலைபேசியில் யாரையாவது தொடர்புகொண்டு, `கோரவுனாவில் இருந்து பேசுகிறோம்’ என்றால் அவர்களைக் கேலி செய்வதாக நினைத்து அழைப்புகளைத் துண்டித்து விடுகின்றனர்” என்று கூறியுள்ளார்.
கொரோனா என்ற பெயர் அதிகமாக உச்சரிக்கப்பட்டு வரும் வேளையில் கோரவுனா என்ற பெயரில் ஒரு கிராமம் இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இரண்டு பெயர்களையும் குழப்பி அக்கிராமத்து மக்களின் மனதை கவலைக்கு உள்ளாக்குவது முறையானது அல்ல என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
Also Read: “கொரோனா விஷயத்தில் அமெரிக்கா, இத்தாலியைவிட இந்தியா பெஸ்ட்!” – சி.பி.ஆர் சான்றிதழ்