கொரோனா தற்காலிகமாக நம் நாட்டையே முடக்கியிருக்கிறது. மனிதர்களை வீடுகளுக்குள் இருக்கச் செய்துள்ளது. அரசு, மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள் தன்னலம் மறந்து நமக்காகச் சுழன்றுகொண்டிருக்கிறார்கள். அதே நேரம் அனுதினம் ஆலயம் சென்று இறைவனை வழிபட்டு வந்த பக்தர்கள் அருகில் இருக்கும் ஆலயங்களுக்குக் கூடச் செல்லமுடியாமல் மனவருத்தத்தோடு இருக்கிறார்கள்.

அவர்களின் மனக் குறையைத் தீர்க்க சக்தி விகடன், `இல்லம் தேடி வரும் இறை தரிசனம்’ என்னும் பகுதியைத் தொடங்கியிருக்கிறது. இதில் புகழ்பெற்ற சில கோயில்களில் அன்றாடம் நடைபெறும் நித்திய பூஜைகளைப் பதிவு செய்து உங்களுக்காக வழங்க இருக்கிறோம். இல்லத்தில் இருந்தபடியே இறைதரிசனம் கண்டு மகிழுங்கள். தினம் ஒரு திருத்தலம் என்ற முறையில் இன்று நாம் தரிசனம் செய்ய இருப்பது பெரும்பேர் கண்டிகை, அருள்மிகு சிவசுப்ரமண்ய சுவாமி திருக்கோயில்.

சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள தொழுப்பேட்டிலிருந்து சுமார் ஒரு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பெரும்பேர்கண்டிகை.

அகத்தியர் சிவபெருமானின் திருமணக்கோலத்தை தரிசித்த பல திருத்தலங்கள் நாடெங்கும் காணப்பட்டாலும், அவர் சிவனாரின் திருமணக் கோலத்துடன் முருகப்பெருமானையும் சேர்த்துத் தரிசித்த சிறப்புக்கு உரிய தலம் பெரும்பேர் கண்டிகை. இந்தத் தலத்தில் ஞானகுருவாக தெற்கு நோக்கிக் காட்சி தருகிறார், முருகப் பெருமான். ஆறுமுகக் கடவுளை அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் புகழ்ந்து பாடியிருக்கிறார்கள்.

பெரும்பேர் கண்டிகை

முருகப்பெருமானின் திருவுருவத்துக்கு முன்பாக சத்ரு சம்ஹார யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. முருகனுக்கு முன் இருக்கும் வேலுக்கு ‘சக்தி வேலாயுதம்’ என்று பெயர். வேலாயுதம் அம்பாளின் அம்சமாகவே இங்கு வழிபடப்படுகிறது. வேறு எங்கும் இல்லாத வகையில், இங்கு மட்டும் வேலாயுதத்துக்குச் சிறப்பு வழிபாடாக ‘25 மூல மந்திர பீஜாக்ஷர அர்ச்சனை’ செய்யப்படுகிறது.

யந்திரத்துக்கும் சக்திவேலுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு நாளும் பிரம்மதேவர் முருகப்பெருமானை வழிபடுகிறார் என்பதை உணர்த்துவிதம், சக்தி வேலுக்கு அருகில் ஓர் அன்னப் பறவை காணப்படுகிறது.

திருக்கோயில் திருச்சுற்றில் தென் மேற்கில் செல்வ சுந்தர விநாயகரும், வட மேற்கில் சுந்தர விநாயகரும் அருள்புரிகிறார்கள். கருவறைக்குள் செல்லும்போது அகத்தியர், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் ஆகியோர் காட்சி தருகின்றனர்.கோயிலுக்கு அருகிலேயே உள்ள வில்வமரத்தின் அடியில் சட்டநாத சித்தரின் ஜீவ சமாதி அமைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

பெரும்பேர் கண்டிகை

இங்கு விசேஷமாக சத்ரு சம்ஹார யந்திர ஹோமம், சத்ரு சம்ஹார திரிசதி ஹோமம் ஆகியவை செய்யப்படுகின்றன.

இவற்றைச் செய்யும்போது யம பயம் நீங்கும், நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும், கல்வி ஞானம் பெருகும், சித்த சுவாதீனம் தெளிவடையும், சத்ருக்களின் தொல்லைகள் விலகும். பௌர்ணமி தினங்களில் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபடுவது மிகவும் விசேஷம் என்று சொல்கிறார்கள். இதனால் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறுமாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.