வானொலி நிலையங்களில் பணியாற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர்களை நேற்று (29.3.2020) மாலை, வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் சந்தித்துப் பேசியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. கான்ஃப்ரன்ஸில் கலந்துகொண்ட ஹலோ எஃப்.எம் நிகழ்ச்சித் தொகுப்பாளர் விஷ்ணு பிரியாவிடம், `கான்ஃப்ரன்ஸ்-ல் என்ன நடந்தது’ எனக் கேட்டோம்.

“இந்த கான்ஃப்ரன்ஸூக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முப்பதுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் இணைந்திருந்தனர். சென்னையிலிருந்து ஹலோ எஃப்.எம் நிலைய தலைமை அதிகாரி சுரேஷும் நானும் கலந்துகொண்டோம். `கொரோனா தொற்று காரணமாக வீட்டில் இருந்துகொண்டே கடினமான சவால்களை எதிர்கொண்டு நிகழ்ச்சிகளை எவ்வித தடையுமின்றி வழங்கி, மக்களை மகிழ்வித்து வரும் வானொலி நிலையங்களுக்குப் பாராட்டுகள்’ என்றார்.
மேலும், ”ரேடியோ ஒலிபரப்பு மீது எனக்கு பெரிய நம்பிக்கை உண்டு. ரோடியோ நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாகிய நீங்கள் சொன்னால் மக்கள் நம்பகத்தன்மை உணர்ந்து கேட்பதோடு, அவற்றைப் பின்பற்றவும் செய்வார்கள். தற்போது நாட்டில் நிலவிக் கொண்டிருக்கும் சுகாதார நெருக்கடியான சூழல் பெரும்பாலான இந்திய மக்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்தச் சூழலை மாற்றும் விதமாக, நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் அவர்களை பொழுதுப்போக்குடன் கொண்டு செல்ல வேண்டும்.’ எனக் கேட்டுக்கொண்டார்.

“‘தற்போது நாட்டின் சூப்பர் ஹீரோக்களாக விளங்கிக் கொண்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் என அனைத்து உண்மையான சூப்பர் ஹீரோக்களையும் எப்போதும் இல்லாத அளவுக்குக் கொண்டாட உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு செய்யும் போது, மக்கள் மத்தியிலும் இவர்கள் குறித்தான மதிப்பு கூடுவதோடு மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தும் நடைமுறைகளை இவர்களின் நிலை உணர்ந்து பின்பற்றுவார்கள்’ என்றார். மேலும், மக்கள் இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டுக்கு உள்ளேயே இருந்தவாறு புத்துணர்வுடன் பொழுதைக் கழிக்கும் வகையில் விளையாட்டுகள் போன்ற விதவிதமான நிகழ்ச்சிகளை வழங்க பிரதமர் கேட்டுக்கொண்டார்” என்றார் விஷ்ணு ப்ரியா.