விராலிமலை பேருந்து நிறுத்தம், பேருந்துகள் நுழையும் பகுதியில் உள்ள கம்பியில் தொங்கவிடப்பட்டுள்ள விளம்பர போர்டு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்படியாக இருந்தது. அந்தப் போர்டில், “பொதுமக்களின் கவனத்திற்கு, வெளியூரிலிருந்து விராலிமலை பஸ் ஸ்டாப்பில் தவிப்பவர்களுக்கு, பக்கத்தில்தான் எங்கள் வீடு உள்ளது. உணவோ, தண்ணீரோ தேவைப்பட்டால், தொடர்புக்கு: என்று 10 இலக்க செல்போன் எண் எழுதப்பட்டுள்ளது. என்னுடைய கவனத்தையும் ஈர்க்கவே, அந்த செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டேன். மறுமுனையில் செல்போனை எடுத்த அந்தப் பெண் என்னுடைய பெயர் மகாலெட்சுமி. தண்ணீர் வேணுமா? சாப்பாடு வேணுமா? எத்தன பேருக்கு வேணும். எங்கிருந்து தம்பி வர்றீங்க, என்று அடுத்தடுத்து கேள்விகளைக் கேட்டுவிட்டு, பதில் சொல்வதற்குள்ளே சாப்பாடு வேணுமா, பஸ் ஸ்டாப்பிலேயே இருங்க 10 நிமிஷத்துல சாப்பாடு எடுத்திக்கிட்டு வந்திடுறேன் என்று சொன்னவர் அழைப்பைத் துண்டித்துவிட்டு, கொஞ்ச நேரத்தில் சாப்பாடு பொட்டலங்களை எடுத்துக்கொண்டு வந்து கையில் கொடுத்துவிட்டார்.

இலவசமாக சாப்பாடு கொடுக்கும் மகாலெட்சுமி

சாப்பாட்டுக்கு காசு பணம் எல்லாம் இல்லை. இலவசம்தான். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து, விராலிமலை பேருந்து நிறுத்தத்தில் இருந்து சாப்பாடின்றி தவிக்கும் யார் போன் செய்தாலும் அடுத்த சில நிமிடங்களில் சாப்பாடுடன் வந்து நிற்கிறார் லட்சுமி அம்மா. வயது 60-க்கு மேல் இருக்கும். ஆனாலும், பசியுடன் இருப்பவர்கள் போன் செய்த அடுத்த சில நிமிடங்களில் சாப்பாட்டை செய்து எடுத்துக்கொண்டு வந்து நிற்கிறார். சாலையில் சுற்றித்திரியும் ஆதரவற்றோர்களுக்கும் சாப்பாடு கொடுத்து வருகிறார். மகாலெட்சுமியிடம் பேசினோம், “ஊரடங்கு உத்தரவு போட்ட அன்னைக்கு, எங்க வீட்டுப் பக்கமா வந்த ஒருத்தரு, ரொம்ப தாகமா இருக்கு கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா அம்மான்னு கேட்டாரு. தண்ணீரை கொடுத்திட்டு எந்த ஊருன்னு விசாரிச்சா, வெளியூருன்னு சொன்னாரு.

அப்பத்தான், பஸ் ஸ்டாண்ட்ல பலரும் பஸ் கிடைக்காமலும், சாப்பாடு, தண்ணீர் கிடைக்காமலும் இருக்கிறது தெரியவந்துச்சு. அதற்கப்புறம் அவருக்கு சாப்பாடு கொடுத்திட்டு, உடனே பஸ் ஸ்டாண்டுக்குப் போய் இந்த போர்டை மாட்டுனேன். பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்துலதான் எனக்கு வீடு. போன் நம்பர எழுதி வச்சதால, அடுத்தடுத்து அழைப்புகள் வந்துச்சு. உடனே உணவு செஞ்சு பொட்டலங்களாக எடுத்துக்கிட்டுப் போய் அன்னைக்கு பஸ் ஸ்டாண்ட்ல நின்னு போன் பண்ணின எல்லாருக்கும் கொடுத்திட்டேன். போலீஸ் கெடுபிடி இருந்ததால கொஞ்சம் பயந்து பயந்துக்கிட்டுதான் கொடுத்தேன். தெருத் தெருவா அலைந்து ஆதரவற்றோர்களுக்கு கொடுக்க முடியலைங்கிறதுதான் கொஞ்சம் வருத்தமா இருந்துச்சு. அப்புறம், போர்டை அப்படியே விட்டுட்டேன். இப்பவும் அழைப்பு வந்துக்கிட்டுதான் இருக்கு. நேத்து அறந்தாங்கியில இருந்து வந்த 4 பேருக்கு சாப்பாடு கொண்டு போய் கொடுத்தேன். ரொம்பவே சந்தோஷப்பட்டாங்க. பிறருக்குக் கொடுத்ததைப் போட்டோ கூட எடுக்க மாட்டேன்.

யாராவது எடுத்து எனக்கு அனுப்புவாங்க. அந்த சந்தோஷம்தான் எனக்கு வேணும். ஆனாலும், ஒரு சிலர் போன் பண்ணி சாப்பாடு இருக்கான்னு கேட்பாங்க. வேக, வேகமாக சாப்பாடு செஞ்சு எடுத்துக்கிட்டுப் போய் பார்ப்பேன். யாரும் இருக்க மாட்டாங்க. திரும்ப கூப்பிட்டுக் கேட்டால், சும்மா சாப்பாடு கிடைக்குதான்னு டெஸ்ட் பண்ணி பார்த்தேன்னு சொல்லுவாங்க. அதான் மனசுக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கும். ஆனாலும், அதையெல்லாம் தூக்கிப்போட்டுட்டு மறுபடியும் சமைக்க கிளம்பிடுவேன். நானும் என் வீட்டுக்காரரும்தான் இருக்கோம். மகன் விபத்துல இறந்து போயிட்டான். அவன் நினைவாகத் தொடர்ந்து பலருக்கும் அன்னதானம் கொடுத்துக்கிட்டு வர்றேன். அதில் ஒரு பகுதியாகத் தான் இப்போ சாப்பாடு கொடுக்கிறேன். எங்களுக்கு பாத்திரக்கடை இருக்கு. அதுல ஓரளவு வருமானம் கிடைக்குது. அத வச்சுதான் இந்தச் சேவையை செஞ்சிக்கிட்டு இருக்கேன். தொடர்ந்து சேவை செய்ய ஆண்டவன் எங்களுக்கு உடல் ஆரோக்கியத்தைக் கொடுத்தால் போதும்” என்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.