கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. அமெரிக்கா, சீனா, இத்தாலி ஆகிய நாடுகளில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80,000-த்தைக் கடந்துவிட்டது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30,000-த்தைக் கடந்திருக்கிறது. உலகின் வல்லரசு நாடு முதல் ஏழ்மையான நாடு வரை வைரஸின் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றன. அதேபோல் ஏழை, பணக்காரன் போன்ற எந்த வித்தியாசமும் பார்க்காமல் அனைவரையும் அச்சத்தின் பிடியில் வைத்துள்ளது கொரோனா.

கொரோனா வைரஸ்

இதுவரை உலகின் பல தலைவர்கள், பிரபலங்களுக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபி ட்ரூடோ, இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் எனப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. இதே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு ஸ்பெயின் நாட்டின் இளவரசி மரியா தெரேசா உயிரிழந்துள்ளார். கொரோனாவால் அரசக்குடும்பத்தில் நேர்ந்த முதல் உயிரிழப்பு இது என கூறப்படுகிறது.

ஸ்பெயின் மன்னர் ஆறாம் ஃபெலிப்பின் உறவினரான இளவரசி மரியாவுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவர் ஃபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவருக்கு வயது 86. இந்த தகவலை இளவரசியின் சகோதரரும் இளவரசருமான சிக்ஸ்டஸ் ஹென்றி உறுதிப்படுத்தியுள்ளார்.

ஸ்பெயின் இளவரசி

மறைந்த இளவரசி மரியா 1933-ம் ஆண்டு ஜூலை மாதம் பாரிஸில் பிறந்தார். அவர் பாரிஸ் சோர்போனே பல்கலைகழகத்தின் பேராசிரியராகவும் மாட்ரிட்டின் கம்ப்ளூடென்ஸ் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். அரசக் குடும்பத்து பெண்களின் உரிமைகள் மற்றும் சோசலிச கருத்துகளைத் தொடர்ந்து ஆதரித்து வந்தவர். இவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் சீனாவை விட ஐரோப்பிய நாடுகளில் மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸால் ஸ்பெயினில் இதுவரை 73,235 பேர் பாதிக்கப்பட்டு 5,982 பேர் உயிரிழந்துள்ளனர். அதுவே இத்தாலியில் 92,472 பேர் பாதிக்கப்பட்டு 10,023 பேர் உயிரிழந்துள்ளனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.