`ஒருமுறை பார்க்கலாம்’ எனும் வகைமையின் கீழ்தான் பெரும்பாலான படங்களை வகைப்படுத்துவார்கள் தமிழ் ரசிகர்கள். `இன்னொரு முறை பார்க்கலாம்’, `எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது’, `எத்தனை முறை பார்த்தாலும் புரியாது’ என வேறு சில வகைமைகளைக் கொஞ்சம் அரிதாகவே. அதனினும் அரிதாக, `ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் ஒண்ணு புதுசா தெரியுது’ எனும் வகைமை. அப்படி தமிழ் சினிமாவுக்குக் கிடைத்ததொரு அரிய வகை சினிமா, தியாகராஜன் குமாரராஜாவின் `சூப்பர் டீலக்ஸ்.’ அப்படத்தைப் பற்றி, அதன் முதலாம் ஆண்டு நிறைவு நாளான இன்று கொஞ்சம் அலசுவோம்.

ஜோதியும் ஷில்பாவும்

Also Read: “`மதயானைக் கூட்டம்’க்கு ரெண்டு க்ளைமாக்ஸ் யோசிச்சேன்; அது என்னன்னா?!” – விக்ரம் சுகுமாரன்

`சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் பலரும் பார்த்திருப்போம். ‘சூப்பர் சம்சாரம்’ திரைப்படம் பார்த்திருக்கிறீர்களா? `சம்சாரம் அது மின்சாரம்’ படத்தின் ஹை-வோல்டேஜ் வெற்றியைத் தொடர்ந்து, அதன் பாணியிலேயே வெளியான பல குடும்பத் திரைப்படங்களில் அதுவும் ஒன்று. தோளுயர மகனின் தாய் மாலா, மழலை மாறா மகனின் தாய் தீபா, புதிதாய் திருமணமான துளசி என மூன்று நடுத்தர வர்கத்து இல்லத்தரசிகளின் கதைகளைச் சொன்ன படம். ஒரே ஊரில் வசிக்கின்ற அவர்களின் வாழ்வில் நிகழும் பிரச்னைகளும் அதன் தீர்வுகளும் என காரசாரமாக நகரும். இந்த இரு படங்களுக்கும் பெயரைத் தாண்டி வேறொரு சம்பந்தமும் உண்டு. அதை யோசித்துக்கொண்டே இருங்கள். கட்டுரைக்குள் செல்வோம்.

முதல் பத்தியில் சொன்னதுபோல், ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் புதுப்புது ஆச்சர்யத்தைக் கொடுக்கும் வகை படங்களுக்கு மிகச்சிறந்த எடுத்துகாட்டு `சூப்பர் டீலக்ஸ்’. அது ஏன் என்பதற்கு இதோ சில எடுத்துக்காட்டுகள். தியாகராஜன் குமாரராஜா தன் படைப்புகளின் வழியாகத் திரையில் புணையும் பிரபஞ்சத்தின் வடிவம் தனித்துவமானது. அந்தத் தனித்துவம், அதிலுள்ள சுவர்களால் பலப்படுத்தப்படுகிறது. அடர்த்தியான வண்ணப் பூச்சுகளும் அந்தப் பூச்சுகள் பாதி உரிந்து கிடப்பதுமான சுவர்கள், ஒருவித பிரத்யேகமான சாயலை அவர் பிரபஞ்சத்திற்குத் தருகின்றன. அழகியல் தாண்டி அந்தச் சுவரின் மீது அறையப்பட்ட புகைப்படங்களும் பொருத்தப்பட்ட பொருள்களும், ஒட்டபட்ட போஸ்டர்களும் எழுதப்பட்ட எழுத்துகளும், கிறுக்கிய கிறுக்கல்களும் அங்கு கதை சொல்லிகளாகவும் இருக்கின்றன. ஒவ்வொரு முறை படம் பார்க்கும்போதும், தொப்பிக்குள் இருந்து ஒரு முயலை எடுத்து நீட்டுகின்றன.

வேம்பு

படத்தில் முக்கிய கதாபாத்திரங்களின் உருவங்கள் கண்ணாடிகளில் பிரதிபலிக்கும் காட்சியை பல இடங்களில் காணமுடியும். கண்ணாவின் உடலை இழுத்துச் செல்லும்போது, வேம்பு கண்ணாடியில் தன் முகம் பார்த்து, படபடப்பது. ஏழரை ஆண்டுகளுக்குப் பிறகு, தன் கணவனை காண விரையும் ஜோதி, கண்ணாடியில் தன் முகம் பார்த்து நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்வது. ஷில்பா, கண்ணாடியைப் பார்த்துக்கொண்டே சேலை உடுத்துவது, ஏலியன் தன் மனித ஆடையைக் களைவது எனப் பல இடங்களில் கண்ணாடிகளின் பிரதிபலிப்புகளைக் காணமுடியும். கண்ணாடிகள், நமக்கு நம்மைப் பிளந்து காட்டுகின்றன. நம்மோடு நம்மைப் பேச வைக்கின்றன. அதேநேரம், மற்றவர்களுக்கு நாம் எப்படித் தெரிகிறோம் என்பதிலும் எப்படித் தெரிய வேண்டும் என்பதிலும் உதவுகின்றன. “`சக்தி மீது பக்தி’ன்னு ஒரு படம். அதுல நான் அம்மனா நினைச்சேன். அப்படிப் பார்க்குறவங்களுக்கு அப்படி, இப்படிப் பார்க்குறவங்களுக்கு இப்படி. ஆனா, நான் என்னைக்குமே லீலாதான்” என மகன் சூரியிடம் லீலா சொல்லும் வசனத்தைப்போல.

ராசுக்குட்டியைத் தேடி பர்மா மார்க்கெட்டுக்குள் ஷில்பா சுற்றிவருகையில், பின்னால் சுவரில் `மேஜிக் ஈவன்ட்’ எனப் எழுதப்பட்டிருக்கும் வாசகம், நொடிப்பொழுதில் `ரியல் மேஜிக் ஈவன்ட்’ என உருமாறும். ஒரு அதிசயம் நிகழப்போகிறது என்பதற்கான சமிக்ஞை அது. முட்டபப்ஸின் உண்மை பெயர் நினைவிருக்கிறதா? ஆமாம், வசந்த். அவன் காதலிக்கும் மலையாளி இந்துப் பெண்ணின் பெயர் பிரதீபா. அவள் மீதான வசந்தின் காதல் கிறுக்கல்களை, வேம்பு குடியிருக்கும் அடுக்குமாடி சுவர்களில் காணலாம். கண்ணனின் உடலிருக்கும் சிவப்பு மெத்தை, 4 வது மாடியிலிருந்து விழும்போது 3 வது மாடியின் சுவற்றில் `வசந்த்’ என்றும், 2 வது மாடியில் `லவ்ஸ்’ என்றும், 1வது மாடியில் `பிரதீபா’ என்றும் கிறுக்கபட்டிருக்கும். சொன்னேனே, கிறுக்கல்களும் கதை சொல்லும் என.

காஜி

அதேபோல், படத்தில் வரும் பெரும்பாலான வீடு மற்றும் கடைகளில் விதவிதமான கடவுள்களின் புகைப்படங்கள் மாட்டப்பட்டிருக்கும். ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத இரு புள்ளிகளைத் தொடர்புபடுத்தி, காரணம் கற்பிக்கப்போய் பிறந்ததுதான் மதமும் மத நம்பிக்கையும் எனப் படத்தில் வசனம் வரும். ஒரு மனித உருவச்சிலையைக் கட்டிப்பிடித்து தப்பித்ததால், சுனாமி ஆண்டவர் எனப் புதுக் கடவுளையே உருவாக்கி அதன் மீது கண்மூடித்தனமான நம்பிக்கை வைத்து, சராசரி மனித அறிவுக்கு எதிரான செயல்களை செய்யும் அற்புதம், ஒருவேளை ஒரு கரடி பொம்மையைக் கட்டிப்பிடித்திருந்தால் நிலைமை என்னவாகியிருக்கும் எனக் கேள்வி எழுப்புவார் லீலா. கடவுள், கடவுள் நம்பிக்கை, கடவுளின் புனிதத்தன்மை மீதான அழுத்தமான விமர்சனங்களை முன்வைத்திருப்பார். அதிலும் இந்தக் குறள்.

‘தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.’

சிங்கப்பெருமாள், கஜபதி, கஜேந்திரனின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஆரம்பித்து சினிமா போஸ்டர்கள் வரை ரகளை செய்திருப்பார்கள். `கில் பில்’ படத்தின் போஸ்டரைப் பார்த்து காஜிக்கும் அவன் நண்பர்களுக்கும் இடையே நடக்கும் உரையாடல். ராசுக்குட்டியுடன் ஷில்பா நடந்து செல்லும் வழியில், சுவர் முழுக்க ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்கள். அதன் நட்டநடுவில் ஒட்டியிருக்கும் `வாழ்வின் ரகசியம்’ படத்தின் போஸ்டர். அதில் உள்ள சாவி படம், அதே சாவியானது கண்ணாவின் காரில் தொங்குவது எனக் குறிப்பால் பல விஷயங்களை உணர்த்தியிருப்பார்கள். `ஏலியன்’ திரைப்படத்தின் போஸ்டர் மீது `வருகிறது’ என்ற காவி வண்ணக் காகிதம் ஒட்டப்பட்டிருக்கும். பிறகு, `சம்சாரம் அது மின்சாரம்’ போஸ்டரும். சரி, அந்த முதல் பத்தியில் குறிப்பிட்ட இரு படங்களுக்கும் இடையேயான சம்பந்தத்தைக் கண்டுபிடித்துவிட்டீர்களா?

ஜோதி

Also Read: “கொரோனாவை மீறின ஒரு சக்தி இருக்கு; அது என்னன்னா?!” – நட்டி 

முதலில், `சூப்பர் சம்சாரம்’ படம் பார்த்திருக்கிறீர்களா? பார்த்திருக்க வாய்ப்பே இல்லை. ஏனென்றால், அப்படி ஒரு படமே இல்லை. அதன் கதையாக நான் சொன்னது, `சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் கதைதான். மாலாவுக்கு பதில் லீலா, ஜோதிக்கு பதில் தீபா, துளசிக்கு பதில் வேம்பு எனப் பெயர் மாற்றிப்படியுங்கள். “சூப்பர் டீலக்ஸ்’, விசுவின் `சம்சாரம் அது மின்சாரம்’ படத்திற்கான ஹோமேஜ்” எனத் தெரிவித்திருந்தார் தியாகராஜன் குமாரராஜா. அது எப்படி இதற்கு ஹோமேஜ் ஆகும் என இணைத்துப் பார்த்ததில் உருவானதுதான் இந்த `சூப்பர் சம்சாரம்’. டிங் டாங்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.