தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான் ஏலக்காய் தோட்டத் தொழிலாளர்கள், ஊரடங்கு காரணமாக வேலை இழந்து வீட்டில் இருந்துவரும் சூழலில், அவர்களிடம் குடிநீர் கட்டணம் வசூல் செய்யும் வேலையில் தீவிரம் காட்டி வருவதாகவும் மக்களை மிரட்டுவதாகவும் தேவாரம் அருகே உள்ள பண்ணைப்புரம் பேரூராட்சி மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ள ஏலக்காய் தோட்டங்களில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தினக்கூலித் தொழிலாளர்கள் வேலைபார்த்து வந்தனர். இந்நிலையில், கொரோனா அச்சம் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும், தமிழக – கேரள எல்லைகள் மூடப்பட்டதும், தொழிலாளர்கள் அனைவரும், தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பினர். அப்படி ஊர் திரும்பிய போடி ராசிங்காபுரத்தைச் சேர்ந்த 4 பேர் காட்டுத்தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
Also Read: `காட்டுத் தீ, வனவிலங்கு வேட்டையைக் கண்காணிக்கலாம்!’ – புது முயற்சியால் முதுமலை அதிகாரிகள் நம்பிக்கை
இந்நிலையில், வேலை இழந்து வீடுகளில் முடங்கியிருக்கும் ஏலக்காய் தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதையடுத்து, மாவட்ட ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வேலை கொடுக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துவருகிறது. இது ஒருபுறம் என்றால், தேவாரம் அருகே உள்ள பண்ணைப்புரம் பேரூராட்சி நிர்வாகம், வருடக் கணக்கை முடிப்பதற்காக, ஏலக்காய் தோட்டத் தொழிலாளர்களிடம் குடிநீர் கட்டணம் வசூல் செய்யும் பணியைத் தொடங்கியிருப்பதாகவும் பேரூராட்சி அதிகாரிகள் சிலர் தகாத வார்த்தைகளில் பேசி கட்டண வசூல் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக நம்மிடையே பேசிய பண்ணைப்புர கிராம மக்கள் சிலர், “பண்ணைப்புரத்தில் பெரும்பாலும், ஏலக்காய் தோட்டங்களில் வேலை செய்பவர்கள்தான் இருக்கிறோம். சிலர், தினமும் ஜீப் மூலம் தோட்டங்களுக்குச் சென்றுவிட்டு வருவார்கள். சிலர், மாதக்கணக்கில் தங்கிவிட்டு பின்னர் வீடுகளுக்கு வருவார்கள். இவர்கள் அனைவரும், தற்போது வேலை இழந்து வீடுகளில் இருக்கிறோம். தினமும் வேலை செய்தால்தான் சோறு என்ற நிலையில், பண்ணைப்புரம் பேரூராட்சி நிர்வாகம், குடிநீர் கட்டணம் கட்டச் சொன்னார்கள். `இன்னும் எத்தனை நாள்களுக்கு இந்த ஊரடங்கு நீடிக்கப் போகுதோ தெரியலை… இருக்குற பணத்தை வச்சு பிழைக்கணும். கொரோனா பிரச்னை முடிந்ததும், பணம் கட்டிவிடுகிறோம்…’ எனக் கூறினோம். அதற்கு, தகாத வார்த்தைகளால் பேசிய அதிகாரிகள், உடனே பணத்தைக் கட்டவில்லையென்றால், குடிநீர் இணைப்பைத் துண்டித்துவிடுவோம் எனக் கூறி மிரட்டுகிறார்கள். இதற்கு கலெக்டர்தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

தனியார் நிதி நிறுவனங்கள் தொடங்கி வங்கிகள் வரை மக்களிடம் பண வசூல் செய்யக் கூடாது என அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இது பேரூராட்சி நிர்வாகத்திற்குப் பொருந்தாதா எனத் தெரியவில்லை. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் மரியம் பல்லவி பல்தேவிடம் பேசிய போது, “உடனடியாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கிறேன்” என உறுதியளித்தார்.