கொரோனா குறித்த பல தவறான தகவல்கள் உலவி வருகின்றன. ஆகவே இந்தக் கிருமி குறித்து ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்ற டாக்டர் பவித்ரா அடிப்படையான பல வதந்திகளுக்குப் பதிலளித்துள்ளார்.

கொரோனா குறித்து எவ்வளவோ விழிப்புணர்வு தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனாலும், மக்கள் அது குறித்து பாடம் கற்றதாகத் தெரியவில்லை. வழக்கம் போல் மிகச் சாதாரணமாக அவர்கள் தங்களின் அன்றாடப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு தமிழகம் முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று கோயம்பேடு முழுக்க பயணிகள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. ஒரு மீட்டர் இடைவெளியைப் பேண வேண்டும் என்ற விதிமுறைகள் எல்லாம் காற்றில் கரைந்து போயின.

image

இந்நிலையில், கொரோனா குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் டாக்டர் பவித்ரா வேங்கடகோபாலன் புதிய தலைமுறை நிகழ்ச்சியில் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மற்ற வைரங்களைக் காட்டிலும் இறப்பு சதவீதம் குறைவாக இருந்தாலும், இந்தியாவில் 130 கோடி மக்கள் தொகை இருப்பதால் 3.5 சதவீதம் பேருக்குப் பாதிப்பு ஏற்பாட்டாலும் அதுவும் 40 லட்சம் பேர் ஆகும். அதனால், நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கூறினார். அத்துடன் இந்த வைரஸ் அறிகுறிகளைக் காண்பிப்பதற்கு முன்பாகவே மற்றவர்களுக்குப் பரவுவதால் நாம் கணிப்பதை காட்டிலும் அதிக பரவல் இருக்கும் என்றார்.

அத்துடன், டாக்டர் பவித்ரா வேங்கடகோபாலன் சில அரிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் அளித்த நேர்காணல் வடிவத்தை அப்படியே ஸ்ரீகாந்த் சத்யநாராயணன் என்பவர் தொகுத்து ஃபேஸ்புக்கில் வழங்கியுள்ளார். மிக எளிமையாகப் புரிந்து கொள்ளும்படியான இந்தத் தகவல்களைக் கட்டாயம் வாசித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.

image

முதலில் கொரோனா குறித்து நல்ல செய்திகள் :—

• COVID-19 பாதிக்கப் பட்டால் நூற்றில் 97 சதவிகிதம் குணமாகி உயிர் பிழைக்கும் வாய்ப்பு.
• 1950லேயே கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் குடும்பத்தின் புதிய வைரஸ்தான் இது, அவ்வளவே.
• இதற்கு முன்னும் மனிதர்களைத் தாக்கி இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் மனிதர்களில் வரும் மூன்றில் ஒரு பங்கு சளிக் காய்ச்சலுக்கு கொரோனா வைரஸே காரணம்.
• எல்லா விலங்கிலும் கூட கொரோனா வைரஸ் இருக்கிறது.
• சபீனா சோப்பில் கை கழுவினால் கூட போதுமானது.
• பொதுமக்களுக்கு முகமூடிகள் தேவையில்லை. (மருத்துவ, சுகாதாரப் பணியில் ஈடுபடுகிறவர்களுக்குத்தான் வேண்டும்). பாதிக்கப்பட்டவர்கள் சரியான முறையில் பயன்படுத்தத் தெரிந்தால் மட்டுமே உபயோகிக்க வேண்டும்.
• குழந்தைகளிலும், கர்ப்பிணிப் பெண்களிலும் பாதிப்பின் வீரியம் குறைவே.
• ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் உயிர் பிழைக்கும் சதவிகிதம் மிக அதிகம் (99.1%).
• உலகில் மருந்து கண்டுபிடிக்க முடியாத பல வியாதிகள் இருக்கின்றன. குறிப்பாக டெங்கு. எனவே கொரோனாவிற்கு கூடுதல் அச்சம் தேவையில்லை.
• சிகிச்சை என்பது பாதிப்பைப் பொறுத்தது; நோயைப் பொறுத்தது அல்ல. எனவே நடைமுறையில் உள்ள சிகிச்சைகளே போதுமானது.
• நாய், பூனை, பறவைகள் வைத்திருப்பவர்கள் பொதுவான சுகாதாரத்தைப் பின்பற்றினாலே போதும். செல்லப் பிராணிகளுக்கு என்று குறிப்பாகப் பாதுகாப்பு எதுவும் தேவை இல்லை.
• பாதிக்கப் பட்டவர்களிலும் 15% பேருக்கு மட்டுமே ஐசியு, வெண்டிலேட்டர் தேவைப் படும்.
• பதற்றம் தேவையே இல்லை.

image

அடுத்து இப்போது புரளிகளைப் பற்றிப் பார்ப்போம்:-

• புரளி நம்பர் 1 – வெய்யிலில் வராது.

— வெய்யிலில் கண்டிப்பாக வரும். வெயிலில் காற்றில் ஈரத்தன்மை சற்று அதிகம் இருக்கும். எனவே, பரவும் வேகம் குறைவாக இருக்கலாம். குளிர் காலத்தில் காற்று சற்று காய்ந்து இருக்கும். பரவுதல் சற்று எளிது. அதுவே வித்தியாசம்.

• புரளி நம்பர் 2 – மாமிசம் தின்றால் வரும்.

— ரசத்திலிருந்து மட்டன் பிரியாணி வரை எதை வேண்டுமானாலும் உண்ணலாம். எதைத் தின்றாலும் சுத்தமான தண்ணீரில் சமைத்துச் சாப்பிடுங்கள். சமைத்த உணவில் வைரஸ் பிழைக்காது.

• புரளி நம்பர் 3 – நிறையத் தண்ணீர் குடித்தால் வராது.

— தேவையான தண்ணீர் குடிப்பது உடல் நலத்திற்கு நல்லது. எந்த நோயையும் எதிர்த்துப் போராடுவதற்கு உடலுக்குக் கூடுதல் பலம் கிடைக்கிறது. மற்றபடி, கொரோனா தாக்குதலுக்கும், தண்ணீர் குடிப்பதற்கும் தொடர்பு இல்லை.

• புரளி நம்பர் 4 – இளவயதினருக்கு வராது.

— வயது வித்தியாசமின்றி எல்லாரையும் தாக்கும், ஆனால் வயதானவர்கள், மற்ற உடல் உபாதைகளுக்கு ஆளானவர்கள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள் ஆகியோருக்கு பாதிப்பு அதிகம். (குறிப்பாக, Diabetes, HBP, Transplant candidates, Cancer patients etc.,)

• புரளி நம்பர் 5 – கிராமங்களில் வராது.

— காற்று இருக்கும் எல்லா இடங்களிலும் பரவும். கொரோனாவிற்கு நகரம் கிராமம் என்ற வித்தியாசம் எல்லாம் தெரியாது.

• புரளி நம்பர் 6 – மாற்று மருந்துகளில் குணமாகும்.
— எந்தவொரு நோய்க்கும், எந்தவொரு மருந்தும் சந்தைக்கு வருவதற்கு முன், நோயைக் கட்டுப்படுத்தும் அதன் தன்மைக்காகவும், அது பாதுகாப்பானதா என்பதற்காகவும் சோதனை செய்யப்பட்ட பிறகே பரிந்துரைக்கப்படும். கொரோனாவைப் பொறுத்தவரையில், இன்று வரை எந்த மருத்துவத்திலும், பரிசோதிக்கப்பட்ட எந்த மருந்தும் கிடையாது. கொரோனாவிற்கு அப்படி ஒரு மருந்து வர இன்னும் பல மாதங்கள் ஆகலாம். எனவே அறிகுறிகள் இருந்தால், எந்த மருந்தையும் எடுத்துக் கொள்ளாமல் மருத்துவரைப் பாருங்கள். உயிரிழப்பைத் தவிருங்கள்.

• புரளி நம்பர் 7 – அறுபது வயதிற்கு மேற்பட்ட சீனர்களை முடித்துக் கட்ட சீனா உருவாக்கிய வைரஸ்.

— இது அறிவியல் கூடத்தில் உருவாக்கப் பட்ட வைரஸ் அல்ல. GENOME SEQUENCE கொண்டு விலங்கிடமிருந்து எந்த நாளில் மனிதனுக்குக் கடத்தப் பட்டது என்பது வரை மிகத் தெளிவாக ஆராய்ந்து கண்டு பிடித்து விட்டார்கள்.

• புரளி நம்பர் 8 – கொரோனா வைரஸ் இருப்பவர்களைக் கடந்து சென்றாலே நமக்கும் வந்து விடும்.

— வராது. நம் மேல் இருமினாலோ, தும்மினாலோ, அவர்களின் எச்சில் விரவி இருக்கும் காற்றை நாம் சுவாசித்தாலோதான் நம்மைத் தாக்கும். அவர்களின் எச்சில் பட்டு ஒரு இடம் காய்ந்து விட்டால், அந்த இடத்தை நாம் தொட்டாலும் வராது.

image

விழிப்புணர்வுத் தகவல்கள்

• அறியாமை நம்பர் 1 – முகமூடி அணிந்து விட்டால் கை கூட கழுவ வேண்டாம்.

— முதலாவதாக, முகமூடி அணியத் தேவையில்லை. அணிந்தால் சரியாக அணிய வேண்டும். அணிந்தாலும் 4-6 மணி நேரங்களுக்கு ஒரு முறை புதிய முகமூடி அணிய வேண்டும். ஒரு வேளை அதற்கு முன் மாஸ்க்கை வெளிப்புறமாக வடிகட்டியில் தொட்டு விட்டால் தூக்கி எறிந்து விட்டு புதிய மாஸ்க் அணிய வேண்டும். மாஸ்க் அணிந்தாலும் கை கழுவ வேண்டும்.

• அறியாமை நம்பர் 2. பூண்டு, இஞ்சி, மிளகு சாப்பிட்டால் வராது.

— இவற்றையெல்லாம் சாப்பிட்டாலும் கொரோனா வைரஸ் வரும். மேலும், பூண்டு அதிகமாக பச்சையாகச் சாப்பிட்டால் தொண்டையில் inflammation வரும். எச்சரிக்கை. Magic ஆன எந்த காய்கறிகளும், பழங்களும் இல்லை.

• கொரோனா வைரஸ்க்கு பயப்பட வேண்டுமா?

– புது வைரஸ். பின்னால் வருத்தப்படுவதை விட இப்போதே பாதுகாப்பாக இருப்பது நல்லது.
– காற்றில் பரவும் வைரஸ். நேரடித் தொடர்பைக் குறைப்பதன்மூலம் கட்டுப்படுத்த வாய்ப்புகள் அதிகம்.
– பாதிக்கப்பட்ட ஒருவர் 2 மீட்டர் தூரத்திற்கு ஒன்றிலிருந்து மூன்று பேர் வரை ஒரே சமயத்தில் பரப்ப முடியும்.
– பாதிக்கப்பட்டவர்கள் கட்டுப்பாட்டுடன் இருந்தால் பரவலின் வீரியத்தைக் குறைக்க முடியும்.
– தனக்கு கொரோனா இருக்கிறதா இல்லையா என்பதைத் தனிநபரால் தெரிந்து கொள்ள முடியாது.
– பரிசோதிப்பதற்கு Proper Test Kit வேண்டும். Inaccurate test kit = Inaccurate results.

• ஏன் இவ்வளவு பதற்றம்?

புது வைரஸ். பரவும் வேகம் அதிகம். மேலும் கடந்த காலங்களை விட நாம் பயணிப்பதும், பொதுவில் ஒன்று கூடுவதும் அதிகமாகி விட்டது. சமூக வலைத் தளங்கள். 99.5% புரளிப் பரிமாற்றங்கள்.

• என்ன செய்ய வேண்டும்?

1. தனிப்பட்ட சுகாதாரம்.
முடிந்த வரை அடிக்கடி கை கழுவுங்கள். குறைந்த பட்சமாகச் சாப்பாட்டிற்கு முன், பின். கழிவறைக்குச் செல்லும் முன், பின். வெளியிலிருந்து வந்தால், அழுக்கான இடங்களைத் தொட்டால். இது அனைத்தும் பொதுவாகவே நமக்கு கற்றுக் கொடுக்கப் பட்ட விஷயங்கள் தான். கொரோனா special இல்லை.

 

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.