கொரோனா தொற்றால் மொத்த உலகமும் ஸ்தம்பித்துப்போயுள்ளது. அனைத்து நாட்டு எல்லைகளும் மூடப்பட்டு மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் இதே நிலையே தொடர்கிறது. 21 நாடுகளுக்குத் தேசிய ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் தினக்கூலிகளும் தங்கள் வீட்டைவிட்டு வெளியில் சென்று வேலை செய்யும் தொழிலாளர்களும் கடுமையான சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.

அப்படி பீகாரைச் சேர்ந்த 50-க்கும் அதிகமான தொழிலாளர்கள் திருப்பூரில் உள்ள கருவம்பாளையம் பகுதியில் சிக்கித் தவித்து வந்துள்ளனர். இந்த விவரம் அறிந்த பீகாரின் எதிர்க்கட்சித் தலைவரும் லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் அந்தத் தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் பண உதவி செய்யுமாறு ட்விட்டரில் கோரிக்கை விடுத்திருந்தார். இதை ஏற்ற தமிழக முதல்வர் ‘விஷயம், உரிய அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. தொழிலாளர்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ எனத் தேஜஸ்விக்கு ஆறுதல் கூறியதோடு திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயனைத் தொடர்புகொண்டு தொழிலாளர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்துதருமாறு கூறினார்.
இதைத்தொடர்ந்து தொழிலாளர்கள் இருக்கும் இடத்துக்கு விரைந்த மாவட்ட நிர்வாகம் அவர்களுக்குத் தேவையான உதவி மற்றும் உணவுப் பொருள்களை மிக விரைவாகச் செய்துகொடுத்துள்ளது. இது பற்றி ட்விட்டரில் வீடியோவுடன் கருத்து பதிவிட்டுள்ள கலெக்டர் விஜய கார்த்திகேயன், “தமிழக முதல்வரிடம் இருந்து வந்த அறிவுறுதலின்படி திருப்பூரில் சிக்கித் தவித்த பீகார் தொழிலாளர்களை விரைவாகத் தொடர்புகொண்ட மாவட்ட நிர்வாகம் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்துகொடுத்தது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
After receiving instructions from our honble @CMOTamilNadu , our #Tiruppur district administration team immediately proceeded to the spot and immediately took care of the migrant workers from #Bihar https://t.co/hOVmeRvxHm pic.twitter.com/aJne8PMhHq
— Vijayakarthikeyan K (@Vijaykarthikeyn) March 28, 2020
இதேபோல் திருப்பூரின் பி.என்.ரோடு பகுதியில் வசித்து வந்த ஒடிசாவை சேர்ந்த சில தொழிலாளர்களுக்கும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அடுத்த மூன்று வாரங்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்கள், உணவு, காய்கறி போன்றவற்றை வழங்கியுள்ளனர்.