மகாராஷ்டிரா முழுவதும் உள்ள நகராட்சிகளுக்குக் கடந்த 2ம் தேதி தேர்தல் நடந்தன. சில நகராட்சிகளுக்குத் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு நேற்று தேர்தல் நடத்தப்பட்டன. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 10 மணிக்கு எண்ணப்பட்டன.
இத்தேர்தலில் அனைத்து கட்சிகளுமே தனித்து போட்டியிட்டன. சில நகராட்சிகளில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும், பா.ஜ.கவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
வாக்குகள் எண்ணத்தொடங்கியதில் இருந்தே ஆளும் பா.ஜ.க கூட்டணி கட்சிகள் முன்னிலையில் இருந்தன.
மொத்தமுள்ள 288 நகராட்சிகளில் 134 நகராட்சிகளில் பா.ஜ.க முன்னிலையில் இருக்கிறது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 50 நகராட்சித் தலைவர் பதவிகளைக் கைப்பற்றி இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது.
அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 42 நகராட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றி இருக்கிறது. எதிர்க்கட்சிக் கூட்டணியில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா மோசமான தோல்வியைச் சந்தித்து இருக்கிறது.

வெறும் 11 நகராட்சித் தலைவர் பதவிகளை மட்டும் பிடித்திருக்கிறது. சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 14 நகராட்சிகளிலும், காங்கிரஸ் 28 நகராட்சிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன.
சுயேச்சைகள் 27 நகராட்சித் தலைவர் பதவியைப் பிடித்துள்ளனர்.
மூன்று நகராட்சிகளில் தலைவர் பதவியை பா.ஜ.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஜல்காவ் மாவட்டத்தில் அமைச்சர் கிரீஷ் மகாஜன் மனைவி சாதனாமகாஜன் ஜாம்னேர் நகராட்சித் தலைவராகப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
சிவசேனா அமைச்சர் குலாப்ராவின் சொந்த ஊரான தரன்காவ் நகராட்சியை எதிர்க்கட்சிக் கூட்டணி பிடித்துள்ளது. சாங்கிலி மாவட்டத்தில் உள்ள ஈஸ்வர்பூர் நகராட்சியில் சரத்பவார் கட்சியின் மாநிலத் தலைவர் ஜெயந்த் பாட்டீல் தனது செல்வாக்கைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார்.
இந்த நகராட்சியை சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கைப்பற்றி இருக்கிறது. கொங்கன் பகுதியில் சிவசேனா(ஷிண்டே) மூத்த தலைவர் தீபக் கேசர்கரின் சொந்த ஊரான வென்குர்லா நகராட்சியை பா.ஜ.க கைப்பற்றி இருக்கிறது.

பாராமதியில் துணை முதல்வர் அஜித்பவார் தனது செல்வாக்கைத் தக்கவைத்துக்கொண்டார். கொங்கன் பகுதியில் பா.ஜ.க அமைச்சர் நிதேஷ் ரானேயின் சொந்த ஊரான கன்காவ்லியில் பா.ஜ.க தோல்வியைச் சந்தித்து இருக்கிறது. இது நிதேஷ் ரானேவுக்குப் பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.
அதே சமயம் அருகில் உள்ள மால்வான் நகராட்சியில் நிதேஷ் ரானேயின் சகோதரர் நிலேஷ் ரானே தான் சார்ந்து இருக்கும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவை வெற்றி பெற வைத்து இருக்கிறார்.
