சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், தாத்தியம்பட்டி கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை சேதமடைந்த நிலையில், பலமுறை மனுக்கள் அளித்தும், அதை புதுப்பித்த தர அரசு முன்வரவில்லை என அக்கிராம மக்கள் புகார் கூறிவருகின்றனர்.
சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் தாத்தியம்பட்டி கிராமத்தின் மிக முக்கியமான சாலையாக உள்ள தாத்தியம்பட்டி முதல் தாராபுரம் இணைப்பு சாலை வரையிலான சாலை சேதமடைந்து பல வருடங்கள் ஆகியும்…. அதற்காக மனுக்கள் பலமுறை அளித்தும் இது வரை அதை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

தாத்தியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுமார் 60 -க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் அருகிலுள்ள தாராபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர். எனவே, தினசரி இந்தச் சாலையை கட்டாயம் கடந்து செல்ல வேண்டிய நிலையுள்ளது. மேலும், மிதிவண்டியில் செல்லும்போது சில நேரங்களில் நிலை தடுமாறி காயங்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. அப்பழுதடைந்த சாலையைக் கடந்தே அக்கிராம மக்கள் இடுக்காட்டிற்குச் செல்ல வேண்டியிருக்கிறது.
அப்பகுதி மக்கள் அளித்த மனுக்கள் எல்லாம் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு பராமரிக்கப்படுகிறது என்ற பதிலே அரசு அலுவலர்கள் அளிக்கும் பதிலாக உள்ளது.
இது குறித்து அந்தப் பகுதி மக்கள்,
“சாலை வேண்டி நாங்கள் அளித்த மனுக்கள் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், ஓமலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் மட்டும் இடித்து புதிய கட்டடங்கள் கட்டும் பணி விறுவிறுப்பாக நடைபெறுகின்றது.
தாத்தியம்பட்டி சிக்கனம்பட்டி கிராமங்களுக்கான `உங்களுடன் ஸ்டாலின் முகாம்’ 13.11.2025 அன்று நடைபெற்றது. அங்கும் மனு அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் சமயம் என்பதால் நிச்சயம் கோரிக்கை நிறைவேறும் என ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்கின்றனர்.
ஓமலூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் இது குறித்து கேட்டபோது,
“கூடிய விரைவில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வர் பிரிவிலும் இந்த மனு பெறப்பட்டுள்ளது. ஆதலால் விரைவில் சாலை அமைப்பதற்கான முன்மொழிவு அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டு, சாலை அமைத்து தரப்படும்” எனக் கூறினார்.
