மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே தென்னாம்பட்டினம் ஊராட்சி மாத்தாம்பட்டினத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. 100க்கும் மேற்பட்டோர் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணாக்கர்கள் இங்கே இருக்கிறார்கள். மாத்தாம்பட்டினத்தில் இருந்து கோணயாம்பட்டினம், கீழமூவர்க்கரை, மேலமூவர்க்கரைக்கு செல்ல ஏதுவாக முல்லையாற்றின் குறுக்கே 100மீ நீளத்தில் மூங்கில் பாலம் ஒன்று போடப்பட்டது.
ஆண்டாண்டுக் காலமாக மக்கள் அப்பாலத்தினை பயன்படுத்தியும் வந்துள்ளனர். இப்பாலத்தின் வழியே கோணயாம்பட்டினம், மேலமூவர்க்கரை, கீழமூவர்க்கரைக்கு செல்ல 1 கி.மீ தொலைவு தான். ஆனால், இப்பாலம் இன்றி சென்றால் சுமார் 4 கி.மீ தூரம் சுற்றித்தான் செல்ல வேண்டும். இதனால், இப்பாலமானது அப்பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
இப்பாலத்தினை பள்ளி செல்லும் மாணாக்கர்கள், விற்பனைக்கு வெளி ஊருக்கு செல்வோர், அத்தியாவசிய தேவைக்கு அடுத்த ஊருக்கு செல்வோர் என பலரும் பயன்படுத்தி வந்த நிலையில், சுமார் ஐந்து வருடக்காலமாக மூங்கில் பாலத்தின் நிலையானது நாளுக்கு நாளுக்கு நாள் மோசமடைந்தே சென்றுள்ளது.

பாதிக்கு மேல் சேதமடைந்து இடையில் பிடிப்பதற்கு பிடிமானம் இன்றி ஆபத்தான நிலையில் இருக்கும் இப்பாலத்தில் பள்ளி மாணவர்கள் உயிரை பயணம் வைத்து கடந்து செல்லும் காட்சியானது சமூக வலைதளங்களில் பரவி பார்போரின் நெஞ்சையே பதைபதைக்க செய்த நிலையில், இன்றைய தினம் ஆட்சியர் ஆய்வு செய்து மூங்கில் பாலத்தை முழுமையாக இடிக்க உத்தரவிட்டு, இடிக்கப்பட்டிருக்கிறது.
தற்சமயம் மூங்கில் பாலம் அமைத்து தருவதாகவும், பின்பு கான்கிரீட் பாலம் அமைத்து தருவதாகவும் மக்களிடம் கூறியுள்ளார், ஆட்சியர். மாணவர்கள் தினந்தோறும் பள்ளி சென்று வர வாகனமும் ஏற்பாடு செய்துள்ளார்.
இது குறித்து அப்பகுதி மக்களிடம் பேசியபோது, “இந்த பாலம் இருக்குறது எங்களுக்கு போய் வர வசதியா இருந்துச்சு. ஆனா, இப்ப பாலத்தோட நெலமையே ரொம்ப மோசமா இருந்துச்சு. இருந்தாலும் நாளு கிலோமீட்டர் சுத்தி போக முடியாதுன்னு எல்லாரும் இதுலதான் போறோமே. ஸ்கூல் புள்ளைங்க கூட இதுல தான் மரண பயத்தோட தெனமும் நடந்து போவுதுங்க.
பாருங்க எப்படி இருக்குன்னு. விதியேன்னு இதுலே தான் போக வேண்டி இருக்கு. இங்கேருந்து பாலு, தயிர், மீனு விக்க அங்க போவோம். அங்கேருந்து மீனு, நண்டு விக்கலாம் இங்க வருவாங்க. நாங்களும் சில சமயம் விழுந்து எழுந்துருச்சி தான் வர மாறி இருக்கு. பத்து நாளைக்கி முன்னாடிக்கூட ஒரு பொண்ணு விழுந்துருச்சு. நல்ல வேள ஒருத்தர் பாத்துக் காப்பத்திட்டாரு.

இல்லாட்டி அந்தப் பொண்ணுக்கு என்ன ஆயிருக்குமோ தெர்ல. இந்த பாலத்த கட்டித் தரச் சொல்லி நெறைய மனு கொடுத்து இருக்கோம். ஆனா, நடவடிக்கை எடுத்த மாறி தான் தெர்ல. இப்ப ஒரு சாரு போட்ட வீடியோவை பாத்துட்டு இன்னைக்கி காலையில கலெக்டர் வந்து அந்த பாலத்த இடிக்கச் சொன்னாரு. தற்சமயத்துக்கு மூங்கில் பாலம் ரெண்டே நாளுல கட்டிக்கொடுக்கச் சொல்லி இருக்காரு. பசங்க ஸ்கூல் போயிட்டு வர வேன் ஏற்பாடு பண்ணி குடுத்து இருக்காரு. அவரு சொன்ன மாறி கான்கிரீட் பாலத்தையும் அமைச்சுக் கொடுத்துட்டா போதும்” என்றனர்.
இது குறித்து வீடியோவை வெளியிட்ட சமூக ஆர்வலர் ஜெக.சண்முகம் கூறுகையில், “கடந்த 15 நாள்களுக்கு முன்பும் என் முகநூலில் இதே செய்தியை பதிவிட்டேன். ஆனால், அன்று அந்த அளவு பேசபடவில்லை. பள்ளி செல்லும் மாணவி அந்த மூங்கில் பாலத்தில் கடக்க முயன்றபோது விழுந்து காயமடைந்தாக கேள்விப்பட்டு, மீண்டும் அங்கு சென்று, சேதமடைந்த மூங்கில் பாலத்தில் ஆபத்தான நிலையில் மாணவர்கள் செல்லும் அவல நிலையை வீடியோவாக என் முகநூல் பக்கத்தில் வெளியிட்டேன்.
இருபது முப்பது ஆண்டுகளாக அங்குள்ள மூங்கில் பாலத்தை மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.

மழைக்காலம் இன்றி, மற்ற காலங்களில் தண்ணீர் கீழே இருக்கும் பட்சத்தில் தான் மக்கள் இப்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். இருபுறமும் உள்ள சிறு வியாபாரிகளும், பள்ளி செல்லும் மாணவர்களும் இப்பாலத்தை நம்பித்தான் இருக்கின்றனர். எனவே, அரசு மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு விரைந்து தற்சமயத்துக்கு மூங்கில் பாலமும், பின்பு கான்கிரீட் பாலமும் அமைத்துத் தர வேண்டும்” என்றார்.
இது குறித்து சீர்காழி வட்டார வளர்ச்சி அலுவலர் கூறுகையில், “நீர்வளத்துறையிடம் அனுமதி பெற்று, கிராமப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் பாலம் அமைக்க எஸ்டிமேட் தயாரிக்கவும், தற்காலிகமாக மூங்கில் பாலம் அமைத்து தரவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தற்காலிகமாக மாணவர்கள் பள்ளிக்குச் சென்று வர பேருந்து வசதி ஏற்படுத்தி தருமாறு வட்டார போக்குவரத்து அலுவலருக்கும் உத்தரவிட்டுள்ளார்” என்றார்.
அரசு விரைந்து துறை சார்ந்து நடவடிக்கை மேற்கொண்டு, தற்காலிக தீர்வாக மூங்கில் பாலத்தை அமைத்து தருவதோடு மட்டுமல்லாமல், நிரந்தரமாக கான்கிரீட் பாலமும் அமைத்து தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் ஒரே கோரிக்கையாக உள்ளது.
