ஈரோட்டின் பெருந்துறையில் பொதுக்கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார் விஜய். கரூர் சம்பவத்துக்குப் பிறகு தமிழகத்திற்குள் அவர் பொதுவெளியில் கலந்துகொள்ளும் முதல் கூட்டம் இது. செங்கோட்டையன் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் விஜய் அதிமுகவையும் அட்டாக் செய்வார் என எதிர்பார்க்க, வேறு ரூட் பிடித்து சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.

திமுக எதிர்ப்பு
அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெ. வை துணைக்கு அழைத்து ‘தீயசக்தி’ என அடையாளப்படுத்தி திமுக எதிர்ப்பை இன்னும் கூர்தீட்டியிருக்கிறார். விஜய்யின் ஈரோடு பேச்சுக்கு பின்னால் சில முக்கியமான கவனிக்க வேண்டிய வியூகங்களும் ஒளிந்திருக்கிறது.
திருச்சி தொடங்கி கரூர் வரைக்கும் விஜய் அந்த பேருந்தில் ஏறி பிரசாரம் செய்திருக்கிறார். ஆனால், எங்கேயுமே அந்த ஊரின் மா.செக்களை வண்டியில் ஏற்றியதில்லை. ஆனால், ஈரோட்டில் முதல் முறையாக ஈரோடு மாவட்டத்தின் மா.செக்கள் மூவரையும் பேருந்தின் மீது ஏற்றி அறிமுகப்படுத்தி பேச வைத்தனர். கடைசியில் விஜய்க்கு செங்கோட்டையன் செங்கோல் கொடுத்த போதும் விஜய்யே மா.செ பாலாஜியை அருகில் அழைத்து நிறுத்திக் கொண்டார்.

விஜய்யின் முகத்தை தவிர மக்களுக்கு எந்த முகமும் பரிச்சயமாகவில்லை. குறிப்பாக, மா.செக்களை விஜய் அங்கீகரிப்பதில்லை போன்ற விமர்சனங்கள் கரூர் சம்பவத்துக்கு பிறகு அதிகமாக எழுந்தது. அதேமாதிரி, செங்கோட்டையனின் வருகைக்குப் பிறகு ஈரோட்டில் மற்ற மா.செக்களின் முக்கியத்துவம் குறைகிறது எனும் பேச்சும் எழுந்திருந்தது. இதைத் தொடர்ந்துதான் ஈரோடு மா.செக்களை பேருந்தில் ஏற்றி அந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தனர்.
கொங்கு மண்டலம்
கொங்கு மண்டலம் முழுமையும் அதிமுக – பாஜக கூட்டணிதான் கோலோச்சுகிறது. 2021 தேர்தலில் அங்கிருக்கும் தொகுதிகளில் நான்கில் மூன்று பங்கு இடங்களை அந்த கூட்டணிதான் வென்றது. மேலும், முன்னாள் முதல்வர் எடப்பாடியும் சேலத்தில்தான் மையமிட்டிருக்கிறார். விஜய் கொங்கு மண்டலத்துக்குள் செல்கையில் அதிமுகவையும் அட்டாக் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு வலுசேர்க்க இன்னொரு காரணமும் இருந்தது. ஈரோடு பெருந்துறை கூட்டத்தையே செங்கோட்டையன்தான் முன் நின்று ஏற்பாடு செய்திருந்தார்.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட எரிச்சலில் எடப்பாடி மீதான கடுப்பில்தான் அவர் பனையூர் பக்கமாகவே ஒதுங்கினார். அவரை விஜய்யும் கூடுதல் கவனம் கொடுத்து கட்சிக்குள் வரவேற்றிருந்தார். ஆக, அவரின் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் அவரின் விருப்பத்துக்காகவாது விஜய் அதிமுகவின் இப்போதைய தலைமையை சீண்டுவார் என அனுமானிக்கப்பட்டது.
ஆனால், விஜய்யின் பேச்சின் மூலம் அவரின் வியூக தரப்பு வேறாக சிந்தித்திருப்பதை அறிய முடிகிறது. ஆரம்பத்திலிருந்தே தவெக vs திமுக, ஸ்டாலின் vs விஜய் என கருத்தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில்தான் விஜய்யின் கூட்டங்கள் திட்டமிடப்பட்டு வருகிறது. அந்த வகையில்தான் ஒவ்வொரு கூட்டத்திலும் திமுக எதிர்ப்பை விஜய் கூர்தீட்டிக் கொண்டே இருக்கிறார். வேறு எதாவது கட்சியை விமர்சித்தால் பதிலுக்கு அந்த கட்சியினர் விமர்சிப்பர். அதற்கு பதில் கூற வேண்டியிருக்கும். அப்படி கூறினால் திமுக vs தவெக என களத்தை செட் செய்ய முடியாது.

இந்த பொசிசனிங்கை மனதில் வைத்துதான் விஜய்யை இறங்கி அடிக்கும் நாதகவை கண்டுகொள்ளாமல் நிற்கிறது தவெக. ‘எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் வளர்த்த கட்சியின் இப்போதைய நிலையை பாருங்க’ என்பதுதான் விஜய் அதிமுக மீது வைத்த அதிகபட்ச விமர்சனம். செங்கோட்டையனுக்காக அந்த பொசிசனிங்கில் சமரசம் செய்துகொள்ள விஜய்யின் வியூக தரப்பு விரும்பவில்லை என்பதை ஈரோடு கூட்டத்தின் மூலம் அறிய முடிகிறது.
மேலும், செங்கோட்டையன் கட்சிக்குள் வந்தவுடன் அவர் மீது அதிக வெளிச்சம் விழுகிறது. அவர் ஜெ.படத்தை சட்டைப் பையில் வைத்துக் கொண்டேதான் விஜய்யையும் சந்திக்கிறார். ஜெயலலிதா படத்தை போட்டே தவெகவுக்கு பேனரும் அடிக்கிறார். தவெக தலைமை முழுமையாக விரும்பாத விஷயம் இது. அப்படியிருக்க செங்கோட்டையனின் வருகைக்குப் பிறகு புதிதாக அதிமுக அட்டாக்கை கையில் எடுத்தால், தவெகவையே செங்கோட்டையன் தான் வழிநடத்துகிறார் எனும் பேச்சு எழுமோ என்ற தயக்கமும் தவெக தரப்புக்கு இருக்கிறது.

அதிமுக கோலோச்சும் கொங்குநாட்டில் அவர்களைப் பற்றி பேசாமல் இறங்கினால் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதனால்தான் போகிற போக்கில் மறைமுகமாக, ‘களத்தில் இல்லாத கட்சிகளையெல்லாம் விமர்சிக்கமாட்டோம்’ என அட்டாக் செய்தார். ஒரே ஒரு விஷயம் மட்டும் உறுதி. விஜய்யை ஆட்சியில் இருக்கும் திமுகவுக்கு எதிராக பிராண்டிங் செய்வதை மட்டும் எந்த இடத்திலும் மட்டுப்படுத்திவிடக் கூடாது என நினைக்கின்றனர். அதனால்தான் செங்கோட்டையனையும் தப்பி தவறி கூட அதிமுகவை பற்றி பேசவிடவில்லை. அவரும் பொதுவாக எம்.ஜி.ஆரோடு விஜய்யை ஒப்பிட்டு புரட்சி தளபதி என புகழ்ந்து அவர் மீதான ஹீரோ இமேஜை உயர்த்தவே முயன்றார்.
விஜய் பேசும் போதும் எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் குறிப்பிட்டு அவர்கள் கூறியதைப் போலவே திமுகவை ‘தீயசக்தி…தீயசக்தி’ எனக் கூறி அட்டாக்கை இன்னும் தீவிரப்படுத்தினார். க்ளைமாக்ஸில் எம்.ஜி.ஆரால் அடையாளங்காட்டப்பட்ட செங்கோட்டையன் கையில் செங்கோலை வாங்கிக் கொண்டு ஈரோடு விஜயத்தை முடித்துக் கொண்டார்.

10 வருடம் ஆட்சியில் இருந்துவிட்டு Anti incumbency யோடு தேர்தலை சந்தித்து கொங்கில் நான்கில் மூன்று பங்கு இடங்களை வென்ற அதிமுகவையும் சேர்த்து களத்திலேயே இல்லாத கட்சி என விஜய் எப்படி கூறுகிறார் என அவரின் வியூக தரப்புக்கு மட்டுமே வெளிச்சம்.!
