ஈரோடு அருகே உள்ள விஜயமங்கலத்தில் தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட பிரசாரக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க காவல்துறை சார்பில் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. இதைத் தொடர்ந்து, தவெக தலைமை சார்பில் வெளியிட்டப்பட்டிருந்த அறிவிப்பில், “கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் வருவேர், முதியவர்கள். உடல்நலம் குன்றியவர்கள், பள்ளிச் சிறுவர், சிறுமியர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு அனுமதி இல்லை. விஜய் நிகழ்ச்சியை முடித்துவிட்டுச் செல்லும்போது அவரது வாகனத்தை இருசக்கர வாகனங்களிலோ அல்லது வேறு வாகனங்களிலோ பின்தொடர்வது போக்குவரத்துக்கு இடையூறாகச் செயல்படுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை தொண்டர்கள் தவிர்க்க வேண்டும். தனியார் கட்டடங்கள், காம்பவுண்ட் சுவர்கள், மரங்கள், வாகனங்கள் (பஸ். வேன். ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள்), கொடிக் கம்பங்கள் ஆகியவற்றின் மீது ஏறக் கூடாது. மின்விளக்குக் கம்பங்கள், மின் கம்பங்கள், மின்மாற்றிகள் ஆகியவற்றின் அருகில் செல்லக் கூடாது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

கம்பத்தில் ஏறிய தொண்டர்… எச்சரித்த விஜய்
வியாழக்கிழமை காலை 8 மணிக்கு மேல் தொண்டர்கள் மைதானத்துக்கு உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதிகாலை முதலே தொண்டர்கள் குவிந்ததால், காலை 7 மணி அளவில் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். காலை 10 மணி முதல் பிற்பகல் 1 வரை கூட்டத்துக்கு அனுமதி அளித்திருந்த நிலையில், தவெக தலைவர் விஜய் 11.30 மணிக்கு கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வருவார் என்று சொல்லப்பட்டிருந்தது. சுமார் 11.40 அளவில் பிரசாரக் கூட்ட மேடைக்கு விஜய் வருகை தந்தார். விஜய் பிரசாரக் கூட்டத்துக்கு வந்தவுடன் கூட்டத்தில் இருந்த இளைஞர்கள் அவரைப் பார்க்கும் ஆர்வத்துடன், கேபினின் இரும்புக் கம்பிகள் மீது ஏறத் தொடங்கினர். இதையடுத்து, காவலர்கள் அவர்களைக் கீழே இறங்குமாறு அறிவுறுத்தினர். சிலர் குடிநீர் கொண்டு வந்த லாரிகள் மீது ஏறி அமர்ந்துகொண்டனர். அவர்களை கீழே இறங்குமாறு அறிவுறுத்தியும் அவர்கள் கீழே இறங்காததால், லாரி மீது ஏறிய காவலர்கள் அவர்களை வலுக்கட்டயமாக கீழே இறக்கிவிட்டனர்.

பெண்களுக்கென்று தனியாக கேபின் அமைக்கப்பட்டிருந்தது. கைக்குழந்தைகள் மற்றும் சிறுவர், சிறுமியர்களை அழைத்து வர வேண்டாம் என்று தவெக தலைமை அறிவுறுத்தி இருந்தபோதும், சிலர் கைக்குழந்தைகளையும், சிறுவர், சிறுமியர்களையும் கூட்டத்துக்கு அழைத்து வந்திருந்தனர். குறிப்பாக தவெக துண்டை அணிந்து வந்திருந்த வடமாநிலத் தொழிலாளர்களை பிரசாரக் கூட்டத்தில் பரவலாகக் காண முடிந்தது. விஜய் பேசிக்கொண்டிருக்கும்போது, ஒலிப்பெருக்கிகள் அமைக்கப்பட்டிருந்த கம்பத்தின் மீது ஏறிய தொண்டரை கீழே இறங்குமாறு எச்சரித்த விஜய், அவர் இறங்கினால்தான் பேச்சைத் தொடருவேன் என்றார். அதற்கு அந்த தொண்டர் முத்தம் கேட்டதற்கு, கீழே இறங்கினால் கண்டிப்பாக முத்தம் தருவதாக விஜய் கூறியதை அடுத்து அந்த தொண்டர் கீழே இறங்கினார். அவரை போலீஸார் அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

விபத்தில் சிக்கிய தொண்டர்கள்…
விஜய்யின் வாகனத்தைப் பின்தொடரக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருந்தபோதும், விஜய் தனது பேச்சை முடித்துக் கொண்டு கோவை விமான நிலையம் நோக்கிச் சென்றபோது, விஜயமங்கலம் டோல்கேட் அருகே அவரது வாகனத்தை தொண்டர்கள் சூழ்ந்துகொண்டனர். இதனால், அங்கு கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. காவலர்கள் விஜய்யின் வாகனத்தை சூழ்ந்த தொண்டர்களை அப்புறப்படுத்தினர். இருந்தாலும், அவரது வாகனத்தை இருசக்கர வாகனத்தில் தொண்டர்கள் பின்தொடர்ந்தனர். விஜயமங்கலம் அருகே சென்றபோது, இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் பெண் ஒருவர் காயமடைந்தார். அதேபோல், கூட்டத்தில் கலந்துகொண்ட 3 பேர் மயங்கி விழுந்தனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இப்படியாக…. விஜய்யின் ஈரோடு பிரசாரம் முடிந்தது!
