அரியலூர்: முழுமையடையாத பேருந்து நிலைய கட்டடப் பணிகள்… அவதியுறும் பொதுமக்கள்!

அரியலூர் மாவட்டப் பேருந்து நிலையத்தில் கட்டடப் பணிகள் முழுமையாக நிறைவடையாமல் இருக்கின்றன. இதனால் பொதுமக்கள் தொடர்ந்து அவதியுற்று வருகின்றனர். அரியலூர் பேருந்து நிலையம் முழுவதும் சிறிய வகை சல்லிகளால் நிரம்பி இருக்கிறது. பேருந்து நிறுத்துமிடங்களில் பாதி பணிகள் மட்டுமே நடைபெற்று மேற்கூரைகள் இன்றியே காட்சியளிக்கிறது. அங்குள்ள சுமார் 40-க்கும் மேற்பட்ட கடைகளும் மூடிய நிலையிலேயே உள்ளன. பேருந்து நுழைவாயில்கள் இரண்டு இருக்கும் நிலையில், வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் அருகிலுள்ள நுழைவாயில் மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக மக்கள் பயன்பாட்டிற்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

பேருந்து நிலையம் அருகிலேயே வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், சுமார் 30 மீட்டர் அருகிலேயே வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் காவல் நிலையம் அமைந்துள்ளது.

சுமார் 1 கி.மீ தொலைவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,1.5 கி.மீ தொலைவில் ரயில் நிலையம் குறிப்பாக பேருந்து நிலையத்திற்கான பொறுப்பு அலுவலகமான அரியலூர் நகராட்சி அலுவலகம் சுமார் 100 மீட்டர் தொலைவிலும் அமைந்திருந்தும்… பொது மக்களின்‌ தவிர்க்க முடியாத பேருந்து நிலையமாக இருந்தபோதிலும் சுமார் 2 ஆண்டுகளாக கட்டுமான பணிகள் நடைபெறாமல் இருக்கிறது.

இது குறித்து அங்கிருந்த பயணிகள் பேசும்போது,

“பேருந்து நிலையம் கட்டாய தேவையாக உள்ளது. முன்பக்கம் மட்டுமே பேருந்து வந்து செல்வதால் நெருக்கடியான சூழலை எதிர்கொள்கிறோம். இட நெருக்கடி உள்ளதால் பேருந்துகள் நிறுத்துவதில் மற்றும் அடுத்த பேருந்துக்காக வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலையே நீடிக்கிறது” என்கின்றனர் பயணிகள்.

இந்நிலை குறித்து பேருந்து ஓட்டுநர்களிடம் கேட்டபோது,

“இந்த பேருந்து நிலையம் ஏதோ பிரச்னையில் உள்ளது. அதனால்தான் கட்டுமான பணிகள் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளன. இட நெருக்கடி காரணமாக பேருந்து இயக்குவதில் இடர்பாடுகள் ஏற்படுகிறது. முழுமையாக பணிகள் முடிந்த பிறகு மக்களுக்கும் பேருந்துகளுக்கும் போதுமான இட வசதிகள் கிடைக்கும். ஆதலால், அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைக்கின்றனர்.

இது குறித்து அரியலூர் மாவட்ட நகராட்சி அலுவலகத்தில் விசாரித்தபோது,

“பேருந்து நிலையம் கட்டுவதில் அரசுக்கு எந்த நிதி பிரச்னையும் இல்லை. பேருந்து நிலையம் கட்டுமான டெண்டர் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதனால் நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கிறோம்.

நீதிமன்ற உத்தரவு கிடைத்தவுடன் அதற்கான பணிகள் விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்” என்று குறிப்பிட்டனர்.