விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு, 174 பயனாளிகளுக்கு மொத்தம் ₹1 கோடியே 99 இலட்சத்து 89 ஆயிரத்து 492 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தங்கம் தென்னரசு, “திராவிட மாடல் ஆட்சி பொறுப்பிற்கு வந்த நாள் முதல், சமுதாயத்தின் பல்வேறு படிநிலைகளில் இருப்பவர்கள் – குறிப்பாக ஏழை, எளிய மக்கள், சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்தவர்கள், அரசின் சார்பில் உதவிகளை எதிர்நோக்கி இருப்பவர்கள், உதவிக்கரம் தேடுபவர்கள் – என அனைத்து தரப்பு மக்களுக்குமான அரசாக நம்முடைய ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.
ஒரு சமுதாயம் வளர்ச்சி பெறுகிறது என்றால், அந்தச் சமுதாய வளர்ச்சி என்பது அரசால் நிறைவேற்றப்படும் அடிப்படை கட்டமைப்புகளில் உருவாக்கப்படும் திட்டங்கள் மட்டுமல்லாமல், அந்தச் சமுதாயத்தில் இருக்கும் மக்கள் அனைவரையும் முன்னேற்றும் திட்டங்களை உருவாக்குவதுதான் ஒரு ஆட்சிக்குச் சிறப்பானதாக அமையும்.

அப்படி பெரும்பான்மை சமுதாயங்களுக்குக் கிடைக்கும் எல்லா வசதிகளும், சமுதாயத்தின் மிக முக்கியமான அங்கமாகவும் அதன் வளர்ச்சிக்குப் பாடுபடும் சிறுபான்மை சமுதாயங்களும் அந்த வளர்ச்சியைப் பெற வேண்டும். அப்போதுதான் நாம் ஒரு ஒருங்கிணைந்த சமுதாயமாக மாற முடியும்.
அரசின் சார்பில் பாலங்கள், பெரிய விமான நிலையங்கள் உள்ளிட்ட மிகப்பெரிய திட்டங்களை அரசு நிறைவேற்றி வருகிறது. இவையெல்லாம் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மாற்றம் ஏற்படக் காரணமாக அமைகின்றபோது, அவை மட்டுமே ஒரு சமுதாயத்தின் மாற்றமாகக் கருத முடியாது.
அந்தச் சமுதாயத்தின் மக்களுக்கு நாம் என்ன செய்கிறோம்? விளிம்பு நிலையில் இருப்பவர்களுக்கு அரசாங்கம் எந்த அளவுக்கு உதவிக்கரமாக உள்ளது? சமுதாயத்தில் சிறுபான்மை சமுதாயமாக இருப்பவர்களையும் ஒன்றிணைத்துக்கொண்டு, அவர்களுடைய முன்னேற்றத்திற்கு அரசு எந்த வகையில் செயல்படுகிறது என்பதையெல்லாம் எடுத்துக்கொள்ளும்போதுதான் அந்தச் சமுதாயம் ஒட்டுமொத்த வளர்ச்சியைப் பெறுகிறது.

என்றென்றைக்கும் இல்லாத வகையில் GSDP என்ற மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி குறியீட்டில் 16 சதவீத வளர்ச்சியை நம்முடைய முதலமைச்சரின் ஆட்சிதான் பெற்றுள்ளது.
அதில் மிகக் குறிப்பாக ஏழை, எளியவர்களுக்கு நாம் செய்யும் உதவிகள், கிறிஸ்தவ மகளிர் மற்றும் முஸ்லீம் மகளிர், உலமாக்கள் உள்ளிட்டோருக்குப் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்துச் செயல்படுத்தும் அற்புதமான முன்னெடுப்புதான் இன்றைய தினம் சிறுபான்மையினர் நல தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்தச் சமுதாயத்தின் அங்கமாக நீங்கள் இருக்கிறீர்கள். உங்களுக்கான உரிமைகள் மற்றும் நலத்திட்டங்களைப் பெறக்கூடியதாகவும், பெருமை சேர்க்கும் விழாவாகவும் இன்று இந்த விழா நடைபெற்று வருகிறது.
அந்த விழாவில் நலத்திட்ட உதவிகளை அனைவருக்கும் வழங்குவதில் பெருமை அடைகிறேன்” எனத் தெரிவித்தார்.
