ஈரோடு அருகே உள்ள விஜயமங்கலத்தில் தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட பிரசாரக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அக்கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெற்றுவிடக் கூடாது என்று காவல் துறை தரப்பில் 2000-த்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில், ஈரோடு தொடங்கி விஜயமங்கலம் வரையிலும், அதேபோல் விஜயமங்கலத்தில் இருந்து கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையிலும் விஜய்யை வரவேற்று கட்சிக் கொடிகள், பேனர்கள் மற்றும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

அதிலும் பெருந்துறை சுற்றுவட்டாரப் பகுதி மற்றும் விஜய்யின் பிரசாரக் கூட்டம் நடைபெறும் பகுதிகளைச் சுற்றி அவரை விமர்சித்து ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்த சுவரொட்டியில், “ஈரோடு வரைக்கும் வந்தீங்களே..கரூருக்கு போக மாட்டீங்களா? இங்கே இருக்க கரூக்கு போகல… ஆனா ஆடியோ லான்ச்சுக்கு மலேசியா போறீங்க..what bro it’s very wrong bro” என்று விஜய்யை விமர்சித்து வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது. மற்றொரு சுவரொட்டியில் “மக்கள் பிரச்னைக்கு குரல் கொடுப்பதில்லை. மக்களைச் சந்திக்க கரூர் செல்வது இல்லை. தவெக மாவட்டச் செயலாளர்களின் கூட்டத்தில் கலந்துகொள்வதில்லை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதையொட்டி, அமைப்பின் பெயரோ பிற தகவல்களோ அந்த சுவரொட்டியில் இடம்பெறவில்லை. இதைத் தொடர்ந்து, அங்கு சென்ற போலீஸார் அந்த சுவரொட்டியைக் கைபற்றி விசாரித்து வருகின்றனர். இதனால், தவெக கூட்டம் நடைபெறும் பகுதியில் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.
