மதுரை மாநகராட்சி வரி மோசடிப் புகாரில் சிக்கி இந்திராணி, தனது மேயர் பதவியை ராஜினாமா செய்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. `புதிய மேயரை நியமிக்காமல் காலத்தைக் கடத்திவிடலாம்’ என்று ஆளுங்கட்சி திட்டமிட்டிருக்கும் நிலையில், அதைவைத்தே தி.மு.க-வுக்கு எதிராக அரசியல் செய்யத் திட்டமிட்டிருக்கிறதாம் அ.தி.மு.க. அதன்படி, `வரி மோசடியில் ஈடுபட்ட தி.மு.க-வினர்மீது மேல் நடவடிக்கை இல்லை’ என்று குற்றம்சாட்டி, போராட்டத்தையும் அறிவித்திருக்கிறது மதுரை அ.தி.மு.க.

இதில் ட்விஸ்ட் என்னவென்றால், இந்தப் போராட்டத்தைப் பெரிதும் வரவேற்று மகிழ்வதே தி.மு.க கவுன்சிலர்கள்தானாம். `மதுரையிலுள்ள தி.மு.க கவுன்சிலர்கள் பலரும், தங்களுக்குத்தான் அடுத்த மேயர் பதவி கிடைக்கும் என்று தீவிரமான முயற்சியில் ஈடுபடுகிறார்கள். ஆனால், அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தலையீட்டால், மேயர் நியமனம் காலதாமதம் ஆகிறது. இப்போது எதிர்க்கட்சி போராட்டம் செய்தால், முதல்வரின் கவனம் பெற்று, நம்மில் ஒரு மேயர் ஆகிவிடலாம் எனக் கணக்கு போடுகிறார்கள் தி.மு.க கவுன்சிலர்கள். அதனால்தான், அ.தி.மு.க போராட்டத்துக்கு தி.மு.க-வினரிடம் ஆதரவு குவிகிறது’ என்கிறது மதுரை மாநகர் உடன்பிறப்புகள் வட்டாரம்!
அ.தி.மு.க ராஜ்ய சபா எம்.பி-யாக இருக்கும் முன்னாள் அமைச்சரான சி.வி.சண்முகம், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மயிலம் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்திருப்பது, கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. `கடந்த சட்டமன்றத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார் சண்முகம். அதையடுத்து, எடப்பாடியிடம் தனக்கிருக்கும் நெருக்கத்தைப் பயன்படுத்தி, ராஜ்ய சபா எம்.பி-யாகிவிட்டார். இப்போது, மயிலம் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்திருக்கிறார்.

விழுப்புரம் மாவட்டச் செயலாளர் என்ற முறையில், வெற்றி வாய்ப்பு அதிகமிருக்கும் மயிலத்தில், நிச்சயம் அவருக்குத்தான் சீட் கிடைக்கும். இதுதான் அவரது திட்டமாக இருந்தால், எதற்காக எம்.பி பதவியை வாங்க வேண்டும்… இப்படித்தான், 2021-ல் கே.பி.முனுசாமியும் வைத்திலிங்கமும் எம்.பி பதவியை ராஜினாமா செய்து தேர்தலில் போட்டியிட்டனர். பிறருக்குக் கிடைக்கவேண்டிய எல்லா வாய்ப்புகளையும் அதிகாரத்தால் இவர்களே வாங்கிக்கொள்வது நியாயமா..?’ என்று கொதிக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்!
ஆளுங்கட்சியான தி.மு.க-விலும் வேட்பாளர் தேர்வுக்கான பணிகள் தொடங்கியிருக்கின்றன. இந்த முறை, 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்களுக்கு மீண்டும் சீட் கொடுக்கும் எண்ணத்தில் தலைமை இல்லையாம். அதேபோல, 25-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் புதுமுகங்களைக் களமிறக்கவும் முடிவெடுத்திருக்கிறதாம் தலைமை. இதை மோப்பம் பிடித்த அறிவாலய அமைப்புப் புள்ளியான ஆர்ட் பிரமுகர், சம்பந்தப்பட்ட ஆட்களைத் தொடர்புகொண்டு வருகிறாராம்.

`உங்களுக்கு இந்த முறை சீட் வாங்கித்தருவது அண்ணன் பொறுப்பு… ஆனா என்ன… கொஞ்சம் செலவுதான் ஆகும்…’ என்று நேரடியாகவே டீல் பேசிவருகிறாராம். `ஏற்கெனவே, இதுபோல சீட் வாங்கித்தருவதாக மேலிட உறவுக்காரரின் நிறுவனத்தார்கள் வசூல் செய்த விவகாரம் பூதாகரமானது. தற்போது, கட்சியின் அமைப்பில் இருப்பவர்களே டீல் பிசினஸில் குதித்துவிட்டார்கள். ஆர்ட் பிரமுகரின் கல்லா விவகாரங்கள் தெரிந்தும், தலைமை ஏன் இன்னும் கண்டுகொள்ளாமல் இருக்கிறதோ புரியவில்லை…’ என்கிறார்கள் அறிவாலய சீனியர்கள்!
தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி அமைந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி… தற்போது காங்கிரஸ் வசமிருக்கும் தொகுதிகளைக் கைப்பற்ற தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கடுமையாக முயன்றுவருகிறார்களாம். அந்த வகையில், தென்மாவட்டமான திருநெல்வேலியிலுள்ள நாங்குநேரி தொகுதியில், காங்கிரஸைச் சேர்ந்த ரூபி மனோகர் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். அந்தத் தொகுதியைக் கைப்பற்ற, தி.மு.க நெல்லை கிழக்கு மாவட்டச் செயலாளர் கிரகாம்பெல் கடுமையாக வேலை செய்துவருகிறாராம்.

அதேபோல, காங்கிரஸ் கட்சியின் பழனி நாடார் கையிலிருக்கும் தென்காசி தொகுதியைக் கைப்பற்ற, தென்காசி தெற்கு மா.செ-வான ஜெயபாலன் முயல்கிறாராம். வழக்கமாக, தேர்தல் நேரத்தில் இது போன்ற நெருக்கடி வருவது இயல்புதான் என்றாலும், இந்த முறை தி.மு.க மாவட்டச் செயலாளர்களே நேரடியாகக் களமிறங்கியிருப்பதால், ‘கூட்டணி அமைந்தாலும் தொகுதியை இழந்துவிடுவோமோ..?’ என்று அச்சத்தில் இருக்கிறார்களாம் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள்!
பின்னலாடை மாவட்டத்திலுள்ள தி.மு.க எம்.எல்.ஏ ஒருவர், தனிப்பட்ட காரணங்களுக்காகத் தலைமையின் மீது கடும் அதிருப்தியில் இருந்திருக்கிறார். அதனால், தன்னுடைய உறவினர் ஒருவர் மூலமாக த.வெ.க மேல்மட்ட நிர்வாகியை அணுகிப் பேச்சுவார்த்தை நடத்திய அந்த எம்.எல்.ஏ., விரைவிலேயே த.வெ.க பக்கம் தாவ ஆயத்தமானாராம். இதைக் கண்டுபிடித்த தி.மு.க மேலிடம், சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ-விடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது.
அதைத் தொடர்ந்து, தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டுவிட்டாராம் அந்த எம்.எல்.ஏ. அவருக்கு முக்கியத்துவம் கொடுப்பதுபோல, பின்னலாடை மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் கட்சி நிகழ்ச்சியில், மேடையிலேயே எம்.எல்.ஏ-வுக்கு இடமும் ஒதுக்கப்படவிருக்கிறதாம். இந்த விஷயத்தை அறிந்த கட்சிக்காரர்கள், `கட்சி மாற நினைத்தால்தான் கட்சிக்குள் மரியாதையே கிடைக்கும்போல…’ என்று கட்சித் தலைமையின் செயல்பாடுகளை நினைத்து ஆதங்கப்படுகிறார்கள்!
