நெல்லை: சுவர் ஏறிக் குதித்து கோயிலுக்குள் புகுந்த கரடி; துணிகளைக் கடித்து ஆக்ரோஷம்;அச்சத்தில் மக்கள்

நெல்லை மாவட்டம், களக்காடு மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் புலி, யானை, கரடி, சிறுத்தை, செந்நாய், காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வசித்து வருகின்றன.

இதில், சில வன விலங்குகள் மலையடிவார கிராமங்கள் மற்றும் விளைநிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருவது தொடர்கதையாகி வருகிறது. சமீப காலமாக கரடிகள் வனப்பகுதியிலிருந்து குட்டிகளுடன் வெளியேறி பகல் நேரங்களில் புதர்களில் பதுங்கி விடுகின்றன.

கரடி
கரடி

இரவு நேரங்களில் வீடு, கடை, கோயில்களுக்குள் புகுந்து பிடித்தமான உணவுப் பொருட்களைச் சாப்பிட்டுவிட்டு செல்கின்றன. உணவு ஏதும் கிடைக்காத பட்சத்தில் ஆக்ரோஷத்தில் அங்குள்ள பொருட்களைச் சேதப்படுத்திவிட்டுச் செல்கின்றன.

இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இரவு நேரங்களில் உலா வரும் கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என, வனத்துறையினருக்குப் பல முறை கோரிக்கை வைத்தும் ஒரு கரடியைக்கூட கூண்டு வைத்துப் பிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், கரடிகளின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், களக்காடு அருகிலுள்ள பெருமாள்குளம் கிராமத்திற்குள் நுழைந்த ஒரு கரடி, அங்குள்ள அம்மன் கோயிலின் காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதித்து நுழைந்து உணவு தேடியுள்ளது. உணவு எதுவும் கிடைக்காததால், அங்கிருந்த துணி மூட்டைகளைக் கடித்து குதறியுள்ளது. பின்னர் கோயிலில் இருந்து வெளியேறி கிராமத்தின் சாலை வழியே செளகரியமாக நடந்து சென்றுள்ளது.

குடியிருப்புக்குள் புகுந்த கரடி
குடியிருப்புக்குள் புகுந்த கரடி

இந்தக் காட்சிகள், கோயிலின் சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளன. கரடிகளின் நடமாட்டத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். கரடி மட்டுமல்லாமல் சமீப நாட்களாக யானைகள், காட்டுப்பன்றிகளும் மலையடிவார கிராமங்களுக்குள்ளும், விளைநிலங்களுக்குள்ளும் புகுந்து அட்டகாசம் செய்து மக்களை அச்சப்படுத்தி வருகின்றன.

சிறுத்தைகளும் வீடுகளுக்குள் புகுந்து வளர்ப்பு பிராணிகளான கோழி, ஆடு, நாய்களைக் கடித்துவிட்டுச் சென்றுவிடுகின்றன. உடனடியாக வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.