தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண் திட்டங்களின் சலுகைகளைப் பெற 6 முதல் 12 ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்திருக்க வேண்டும் என விதிக்கப்பட்டிருக்கும் நிபந்தனையை, ஒன்றாம் வகுப்பிலிருந்தே அரசுப் பள்ளிகளில் படித்திருக்க வேண்டுமென மாற்ற வேண்டுமென கிருஷ்ணகிரி மாவட்ட அரசுப் பள்ளித் தலைமையாசிரியர் சி.வீரமணி என்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மனு அளித்துள்ளார்.
கிருஷ்ணகிரி அருகேயுள்ள கிராமம் ஒன்றில் தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியராக இருப்பவர் சி.வீரமணி.
கடந்த வாரம் திருவண்ணாமலையில் நடந்த திமுக இளைஞரணி மாநாட்டுக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலினின் கார் இவரது பள்ளி இருக்கும் கிராமத்தின் வழியே சென்றபோது , முதல்வரிடம் மனு ஒன்றைத் தந்துள்ளார் இவர்.
அதில், பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு புரட்சிகளைச் செய்து வரும் நமது திராவிட மாடல் அரசு, தமிழ்ப் புதல்வன், புதுமைப்பெண் ஆகிய திட்டங்களின் சலுகைகளைப் பெற 6 முதல் 12 ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்திருக்க வேண்டுமென்கிற நிபந்தனையை ‘1ம் வகுப்பு முதல் 12 வரை எனத் திருத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார்.

கூடவே, மருத்துவக் கல்விக்கான சேர்க்கையில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களூக்கு வழங்கப்படும் 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டையும் அதிகரிக்க வேண்டுமென்கிற கோரிக்கையையும் வைத்திருக்கிறார்.
இது தொடர்பாக அவரிடமே பேசினோம்.
”மக்களின் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மீதான மோகத்தால் அரசு தொடக்கப் பள்ளிகளில் இப்ப தொடர்ச்சியா அட்மிஷன் குறைஞ்சுட்டே வருது. இதனால தொடக்கப் பள்ளிகள் மூடப்படுகிற ஆபத்துகளும் இருக்கு. சில பகுதிகள்ல ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை தனியார் பள்ளிகளில் படிக்க வச்சிட்டு அதன் பிறகு இந்த இட ஒதுக்கீட்டுக்காகவே 6ம் வகுப்புக்கு அரசுப் பள்ளியில் கொண்டு வந்து சேர்க்கிறாங்க. இதனால தான் அந்த நிபந்தனையை 1 முதல் 12 வகுப்புன்னு கொண்டு வரணும்னு சொல்றேன்.
அதேபோலத்தான் அந்த 7.5 சதவிகித இட ஒதுக்கீடு ரொம்ப நல்ல திட்டம். அதை அதிகப்படுத்தினா இன்னும் கொஞ்சம் கூடுதலான அரசுப் பள்ளி மாணவர்கள் பயன் பெறுவாங்கன்னு கேட்டேன்.
இதை ஏற்கெனவே இந்தப் பகுதி கல்வி அதிகாரிகள்கிட்ட இதுக்கு முன்னாடியும் கொடுத்திருக்கேன். அன்னைக்கு முதல்வர் எங்க ஊர் வழியா போறதா சொன்னாங்க. ஊர்ல வரவேற்பு கொடுக்க இருக்கறதாகவும் சொன்னாங்க. அதனால் முடிஞ்சா நாமும் பார்க்கலாமேனு போனேன்.
முன்னாள் அமைச்சர் பழனியப்பன் வீட்டுத் திருமணத்தை முடிச்சிட்டு இந்த வழியாத்தான் திருவண்ணாமலை மாநாட்டுக்குப் போனார்.
வழியில கொஞ்ச நேரம் எங்க ஊர்ல நின்னு கட்சிக்காரங்க கிட்ட வரவேற்பை ஏற்றார். அந்தச் சமயத்துல நானும் போய் இந்த மனுவைக் கொடுத்தேன். வாங்கிக் கொண்டார். இதை நான் விளம்பரத்துகாகச் செய்யலங்க. முதல்வர்ங்கிற முறையில அவர்கிட்ட கோரிக்கை வைக்கறதுல என்ன இருக்குன்னு தந்தேன், அவவளவுதான்’ என்றவரிடம்,

‘இருந்தாலும் ஒரு அரசு ஊழியராக இருக்கும் பட்சத்தில் ‘நம் திராவிட மாடல் அரசு’ என்றெல்லாம் குறிப்பிட்டால் சர்ச்சை வராதா’ என்ற கேள்வியையும் கேட்டோம்.
‘முதல்வர்கிட்ட புதுசா வச்ச கோரிக்கை இல்ல இது. அதிகாரிகள்கிட்ட ஏற்கெனவே இதைப் பத்திப் பேசியிருக்கேன். தவிர, நான் குறிப்பிட்டது தமிழ்நாடு அரசைத்தான். இதுல அரசியல் நோக்கம் எதுவும் இல்லை.
இதை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கத் தேவையில்ல. ஏன்னா 7.5 சதவிகித இட ஒதுக்கீடு ரொம்பவே நல்லதொரு திட்டம்னு குறிப்பிட்டிருக்கேனே, அது எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்கும்போது கொன்டு வந்ததுதானே. அதனால சர்ச்சை வராது’ என்கிறார்.
