திருப்பூர் மாநகராட்சி: `குப்பையிலும் கமிஷன்; ஊழல் செய்வது மட்டுமே குறிக்கோள்’- அண்ணாமலை கடும் தாக்கு

திருப்பூர் மாநகராட்சியில் சேகரமாகும் குப்பைகளை இடுவாய் ஊராட்சியின் சின்னக்காளிபாளையத்தில் கொட்டுவதற்கு சுற்றுவட்டார கிராம மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சின்னக்காளிபாளையத்தில் குப்பை கொட்டச் சென்ற லாரிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்கள் கைது செய்யப்பட்டனர். அதில், 14 பேர் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்து பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் திருப்பூர் குமரன் சிலை முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் போராட்டத்துக்கு போலீஸார் அனுமதி மறுத்த நிலையில், ஆர்ப்பாட்டத்துக்கு வந்தவர்களை போலீஸார் கைதுசெய்தனர். போராட்டத்தில் பங்கேற்க வந்த அண்ணாமலையும் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

அண்ணாமலை

கைது செய்யப்படுவதற்கு முன்பு, அண்ணாமலை பேசுகையில், “சின்னக்காளிபாளையம் செல்ல என்னை போலீஸார் அனுமதிக்கவில்லை. இன்று முதல் காவல்துறையை எப்படி வேலைவாங்க வேண்டுமோ, அப்படி வேலை வாங்குவோம். ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி தரப்படவில்லை. இதுதான் ஜனநாயகமா? இங்கு போராடும் மக்களுடன் நான் நிற்கிறேன் என்பதற்காக, என் தந்தையை கோவை மருத்துவமனையில் பார்க்கச் சென்றால் அங்கு ஏன் போலீஸார் தொடர்ந்து வருகிறார்கள்? கல்லூரி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் தைரியமாக சுற்றுகிறார்கள். ஆனால், ஜனநாயக முறைப்படி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டால், மறுக்கிறார்கள். இங்கு ஜனநாயகம் இருக்கிறதா? இல்லையா? மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தத்தான் போகிறோம். வீதிக்கு வீதி ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதற்கு நான் பொறுப்பேற்கிறேன். அரசு கொடுக்கும் தவறான உத்தரவை காவல்துறை பின்பற்றக் கூடாது. திருப்பூர் மாநகராட்சி ரூ. 50 துடைப்பத்தை ரூ. 450- க்கு வாங்கினார்கள். மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஊழல் செய்வதற்கு மட்டுமே உட்கார்ந்துள்ளார். மேயர் வீட்டு முன்பாக நாமே குப்பையைக் கொண்டுவந்து கொட்டுவோம்.

போராட்டம்

மாநகரில் குப்பை அதிகம் தேங்கினால், குப்பை சேகரிக்கும் வண்டியும் அதிகரிக்கும். குப்பை சேர சேர கமிஷன் அதிகரிக்கும். குப்பையை கமிஷனுக்காக அதிகம் சேர்த்து வைத்துள்ளனர். குப்பையை எங்கும் மறுசுழற்சி செய்வதில்லை. கிராம மக்களின் சுகாதாரம், குடிநீர் பற்றி மேயருக்கு அக்கறை இல்லை. சுவட்ச் பாரத் சர்வேயில், அசுத்தமான நகரங்களின் பட்டியலில் மதுரை, சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர் இடம்பெற்றுள்ளன. இதற்கு நிரந்தரத் தீர்வு வரும் தேர்தல் தான் என்பதை மக்கள் மறக்கக் கூடாது. வடமாநிலத்தில் உள்ள இந்தூர் சுகாதாரத்தில் முதலிடம் பிடித்துள்ளது” என்றார்.

கைது செய்யப்பட்ட பாஜக மற்றும் கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் கல்லூரி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.