மத்திய அரசின் திட்டம்: “வரவேற்கிறேன்… வலியுறுத்துகிறேன்” – எடப்பாடி சொல்வது என்ன?

பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கடந்த 2005-ம் ஆண்டு, கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ஆண்டில் 100 நாட்கள் வேலை கிடைப்பதை உறுதி செய்ய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

இதற்கு மாற்றாக “வளர்ந்த இந்தியா வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கான உத்தரவாத திட்டம் (VB–G RAM G)” என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த திட்டத்துக்கு கடந்த 12-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதலும் அளிக்கப்பட்டிருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

இந்த புதிய திட்டத்தின்-படி மத்திய அரசின் நிதி பங்களிப்பு 60% குறைக்கப்படுவதால் மாநிலங்களுக்கு நிதி சுமை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனவும், மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டத்தில் திட்டமிட்ட சதி இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில், “2021 சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது, தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில், இன்றைய முதலமைச்சர், அன்றைய எதிர்கட்சித் தலைவர் திரு. ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் 100 நாட்களிலிருந்து 150 நாட்களாக உயர்த்தப்படும் என்றும், மற்றும் ஊதியமும் உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார்.

மக்களை ஏமாற்றி, வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு, கொடுத்த வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றவில்லை. அவர் பதிவிட்டு இருந்த நீண்ட “x” தள பதிவில் ஏன் இதை பற்ற எந்த குறிப்பும் இல்லை? இது போன்ற பச்சை துரோகத்தை செய்து விட்டு பச்சை துண்டு பற்றி பேச அவருக்கு என்ன அருகதை இருக்கிறது?

தற்போது, மத்திய அரசு இந்த 100 நாள் வேலை திட்டத்தை 125 நாட்களாக உயர்த்த உத்தேசித்துள்ளதை வரவேற்கிறேன். எனினும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயர் எவ்வித மாற்றமுமின்றி தொடர மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.