சென்னை சாந்தோமில் தமிழகத்திலேயே முதல் முறையாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் திறக்கப்பட்ட அம்மா உண்வகம் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இப்போது அந்த அம்மா உணவகம் பாழடைந்து சுகாதரமற்ற முறையில் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.

சாந்தோம் மெயின் ரோடில் நான்காவது டிரஸ்ட் தெரு அருகே இருக்கிறது அந்த அம்மா உணவகம். 2013 பிப்ரவர் 19 தேதியன்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அம்மா உணவக திட்டத்தை தொடங்கி வைத்தார். ஜெயலலிதா நேரில் வந்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்து உணவு பரிமாறிவிட்டு சென்ற உணவகம் அது. அந்த உணவகம் சுகாதரமற்ற முறையில் இயங்குகிறது என கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்து, அந்த அம்மா உணவகத்துக்கு நேரடியாக விசிட் செய்தோம். மற்ற அம்மா உணவகங்களை விட விசாலமாக பெரிய இடத்தில் அமைந்திருக்கிறது.
நாம் சென்ற மதிய நேரத்தில் தயிர் சாதமும் சாம்பார் சாதமும் விநியோகம் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. கூலி வேலை பார்ப்பவர்கள், ஆட்டோக்காரர்கள் என ஒரு சிலர் உணவருந்திக் கொண்டிருந்தனர். நாமும் அங்கு விநியோகிக்கப்படும் உணவை சாப்பிட்டு பார்த்தோம். அதில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், உணவு சமைத்து விநியோகிக்கும் இடமும் மக்கள் உணவு உண்ணும் இடமும் மேற்கூரைகள் பெயர்ந்து மின் வயர்கள் அறுந்து தொங்க அத்தனை மோசமாக இருந்தது. பெயர்ந்து நொறுங்கி நிற்கும் மேற்கூரைகளுக்கு கீழே சுகாதரமற்ற முறையில்தான் உணவு விநியோகிக்கிறார்கள். அதேமாதிரி, மக்கள் நின்று சாப்பிட போடப்பட்டிருக்கும் டேபிள்களும் கேட்பாரற்று ஒரு மூலையில் கிடந்தன. உணவு உண்ணும் இடத்திலும் மேற்கூரையில் அவ்வளவு பெரிய ஓட்டை.

மலிவு விலையில் உணவு வழங்கப்படுகிறது என்பதற்காக தரத்திலும் சுகாதாரத்திலும் சமரசம் செய்யக்கூடாதென அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார். திமுக ஆட்சி அமைந்த பிறகும் அம்மா உணவகங்கள் அப்படியே செயல்படும் என இப்போதைய முதல்வர் ஸ்டாலினும் அரசியல் முதிர்ச்சியோடு பேசியிருந்தார். கடந்த ஆண்டு ஜூலையில் தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகம் ஒன்றை திடீரென ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், ‘உணவகங்களை சுத்தமாக சுகாதாரமாகவும் பேண வேண்டும்’ என ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கியிருந்தார். மேலும், ‘அம்மா உணவகங்களை புனரமைக்க 21 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்’ என்றும் அறிவித்தார்.
21 கோடி ரூபாய் ஒதுக்கியும் சென்னையின் மையத்தில் அப்போதைய முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட அம்மா உணவகம் மேற்கூரைகள் பெயர்ந்து சுகாதாரமற்ற முறையில் செயல்படுவதுதான் அத்தனை பேருக்கும் அதிர்ச்சியை கொடுக்கிறது. ‘சாப்பாடெல்லாம் நல்லா இருக்கு. சரியான டைமுக்கும் கொடுக்குறாங்க. ஆனா, சாப்பாடு செய்ற இடமும் சாப்புடுற இடமும் இப்படி பெயர்ந்து போயி அலங்கோலமா இருக்கே சார்…இதெல்லாம் சரி பண்ணி இன்னும் சுகாதாரமா பேணுனா ரொம்ப நல்லா இருக்குமே’ உணவருந்திக் கொண்டிருந்த கூலி தொழிலாளர்கள் வருத்தப்பட்டனர்.

சாந்தோமில் அந்த அம்மா உணவகம் திறந்த போது சென்னையின் மேயராக இருந்த சைதை துரைசாமியை தொடர்புகொண்டு பேசினோம். ‘முதலில் என்னுடைய சொந்த செலவில் மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக மலிவு விலை உணவகங்களை தொடங்கினேன். 2011 இல் அதிமுக ஆட்சி அமைந்து நான் சென்னை மாநகராட்சியின் மேயர் ஆன போது அந்தத் திட்டத்தை அம்மாவிடமும் கூறினேன். ஒரு ரூபாய்க்கு இட்லியும் 5 ரூபாய்க்கு கலவை சாதமும் போடலாம் என்றேன். அம்மா, ‘is it possible DuraiSamy?’ என்றார். ‘நிச்சயமாக சாத்தியம் அம்மா’ என்றேன். ரேஷன் கடையில் ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுக்கிறீர்கள். அந்த ஒரு ரூபாய் அரிசியில் 66 இட்லி சுடலாம். அதேமாதிரி, 13 பேருக்கு கலவை சாதம் கொடுக்கலாம். கட்டாயம் நாம் லாபத்தில்தான் இயங்குவோம். மக்களுக்கும் பெரும் பயனை கொடுக்கும் என்றேன். அம்மாவும் ஒத்துக்கொண்டார்.
சாந்தோமில் நீங்கள் சொல்லும் அந்த இடத்தில் அம்மாவே வந்து உணவகத்தை திறந்தார். அன்றைய நாளில் அம்மாவுக்கு இருந்த மகிழ்ச்சியை வார்த்தைகளில் விவரிக்க முடியவில்லை. அதன்பிறகுதான் அம்மா உணவகம் தமிழ்நாடு முழுக்க விரிவுப்படுத்தப்பட்டது. ஏழை மக்கள் பசியாறும் அந்தத் திட்டத்தை இன்னும் விரிவாக்க வேண்டுமே தவிர, அதை முடக்க நினைக்கக்கூடாது. சரியாக பேணி பாதுகாத்து சுகாதாரமாக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்’ என்றார்.





அரசு சார்பில் 21 கோடி ரூபாய் ஒதுக்கியும் அந்த அம்மா உணவகம் ஏன் முறையாக புனரமைக்கப்படவில்லை என்பதை கேட்க சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவையும் மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனையும் தொடர்புகொண்டோம். இருவரும் அழைப்பை ஏற்கவில்லை. குறுஞ்செய்திக்கும் பதில் இல்லை.
அன்றாடம் பசியை போக்கும் அந்த அம்மா உணவகம் முறையாக புனரமைக்கப்பட்டு சுகாதாரமாக உணவு வழங்கப்படுமா என்பதே அந்தப் பகுதி உழைக்கும் மக்களின் எதிர்பார்ப்பு.
