TVK : `அப்பா, மகன் என இரண்டு இளைஞர்கள்… இதில் மகன் இளம் பெரியாராம்” – ஆதவ் அர்ஜுனா காட்டம்

ஈரோடு பெருந்துறையில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. ஏற்கெனவே கரூர் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், முன்னெச்சரிக்கையாக பலமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விஜய் உள்ளிட்ட தலைவர்கள் பேசுவதற்கு மேடை எதுவும் அமைக்கப்படவில்லை.

மக்கள் அமருவதற்கு நாற்காலிகளும் போடப்படவில்லை. பரப்புரை பேருந்தில் நின்று விஜய் பேசுவதை, தடுப்புகளுக்குள் நின்று மக்கள் கேட்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தாவெக - ஈரோடு பொதுக்கூட்டம்
தாவெக – ஈரோடு பொதுக்கூட்டம்

கூட்ட நெரிசல் எதுவும் ஏற்படாத வகையில் 20 ஏக்கர் பரப்பளவில் 72 பிரிவுகளாகப் பிரித்து மக்கள் நிற்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்த 60 ஏக்கர் பரப்பளவில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு குடிநீர் வழங்கவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய த.வெ.க தேர்தல் மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “செங்கோட்டையன் நம்மிடம் வந்தபிறகு செயின்ட் ஜார்ஜ் கோட்டை நமக்குதான் என உறுதியாகிவிட்டது. அதிகாரத்தைமட்டும் அடைவதா நம் லட்சியம்? நம் விவசாயிகள் முதல் தொழிலாளர்கள் வரை நிம்மதியாக வாழ முடியாத அளவு ஊழல் நடக்கிறது. இங்கிருக்கும் அமைச்சர்கள் டாஸ்மாக்கையே நம்பி நடத்தும் ஒரு நிர்வாகத்தைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆதவ் அர்ஜுனா
ஆதவ் அர்ஜுனா

இதை மாற்றவேண்டுமானால் த.வெ.க-தான் மக்களின் நம்பிக்கை. சமீபத்தில் அப்பா மகன் என இரண்டு இளைஞர்கள் சேர்ந்து இளைஞர் மாநாடு நடத்தினார்கள். அதில், மகனை இளம் பெரியார் என்கிறார்கள். பெரியாரின் 70 ஆண்டுகால உழைப்பை சிதைப்பதுபோல பேசியிருக்கிறார்.

பெரியாரை அவமானப்படுத்தும்போது திராவிடக் கழகங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறது. சமூக நீதி என்றால் என்னவென்றே தெரியாதவர் இளம் பெரியாராம். பெரியார் போல ஒருவர் உருவாகவுமில்லை, இனி அப்படி உருவாகப்போவதுமில்லை.

பெரும் தலைவர்களை அசிங்கப்படுத்தினால் தவெக பெரும் போராட்டத்தை முன்னெடுக்கும். உங்கள் சூதால் பெரும் இழப்புக்குப்பிறகு மக்களிடமிருந்து தலைவர் விஜயை பிரிக்கப்பார்த்தீர்கள். மக்கள் சக்தி எந்தளவு தலைவர் மீது நம்பிக்கை வைத்திருக்கிறது என்பதை 2026 தேர்தல் முடிவு உங்களுக்குச் சொல்லும்.” என்றார்.