ஈரோட்டில் விஜய் : 72 மருத்துவர்கள், 120 செவிலியர்கள்; 60 ஏக்கரில் பார்க்கிங் – என்னென்ன ஏற்பாடுகள்?

ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் அருகே சரளை என்ற பகுதியில் தவெக தலைவர் விஜய் கலந்துகொள்ளும் பிரசாரக் கூட்டம் வியாழக்கிழமை (டிசம்பர் 18) நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தவெக-வின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், கொங்கு மண்டல அமைப்புச் செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன், தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

கரூர் துயர சம்பவத்துக்குப் பிறகு மேற்கு மண்டலத்தில் நடைபெறும் முதல் கூட்டம் என்பதால், போலீஸ் தரப்பில் இருந்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, தவெக நிர்வாகிகளிடம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து 84 கேள்விகள் கேட்கப்பட்டு, அதன் அடிப்படையில் நிபந்தனைகள் விதிக்கப்பட்டு, இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட நிர்வாகமும், போலீஸும் அனுமதி அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகளை புதன்கிழமை மதியத்துக்குள் முடிக்க தவெக நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.

செங்கோட்டையன்

72 மருத்துவர்கள், 120 செவிலியர்கள்:

இதுதொடர்பாக செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கூட்ட மைதானத்தில் பாதுகாப்புக்காக 40 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவசர தேவைக்காக 40 வாக்கி டாக்கிகள் கொடுக்கப்படும். அனைத்து முதலுதவி வசதியுடன் கூடிய 24 ஆம்புலன்ஸ், 72 மருத்துவர்கள்,120 செவிலியர்கள் பணியில் அமர்த்தப்படவுள்ளனர்.

20 தண்ணீர்த் தொட்டிகள் மூலம் குடிநீர் வழங்கப்படும். மேலும் வருபவர்கள் அனைவருக்கும் இலவசமாக குடிநீர் கேன் வழங்கப்படும். 3 தீயணைப்பு வாகனங்கள், 20 இடங்களில் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. 60 ஏக்கரில் வாகன நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டுள்ளது. அதில், 20 ஏக்கர் நிலம் இருசக்கர வாகனம் பார்க்கிங்காக கொடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை தமிழகம் கண்டிராத அளவுக்கு பாதுகாப்பில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது .1,500 காவலர்கள் பாதுகாப்புப் பணிக்காக பணியமர்த்தப்படவுள்ளதாக போலீஸ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்தாயிரம் முதல் 25 ஆயிரம் பேர் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு அனுமதி பாஸ் எதுவும் கட்சி சார்பில் வழங்கப்படவில்லை. கியூ ஆர் கோட் கிடையாது. கூட்டத்துக்கு உள்ளே வருவதும் வெளியே சொல்வதும் என 14 இடங்கள் வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.