தயார் நிலையில் பிரசார திடல்-தவெக-வில் அதிமுக நிர்வாகிகள்? – என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?

ஈரோடு அருகே விஜயமங்கலத்தை அடுத்த சாரளையில் தவெக சார்பில் பிரசாரக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் விஜய் கலந்துகொண்டு பேசவுள்ளார். கூட்டத்துக்கான ஏற்பாடுகளை தவெக-வின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், கொங்கு மண்டல அமைப்புச் செயலாளருமான கே.ஏ. செங்கோட்டையன் முன்னின்று நடத்தி வருகிறார். குடிநீர், கழிப்பறை, இருக்கைகள் என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு பிரசார திடல் தயார் நிலையில் உள்ளது.

தவெகவில் இணைந்த செங்கோட்டையன்
செங்கோட்டையன்

இதுகுறித்து செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “காவல் துறையின் அனுமதி கிடைத்த நான்கே நாள்களில் கூட்டத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில் கலந்துகொள்ள பார்கோடு, கியூஆர்கோடு தேவையில்லை. நாளை காலை 8 மணி முதலே பொதுமக்கள் தாராளமாக வரலாம். தூரத்தில் இருந்து பார்ப்பதற்கும் எல்இடி திரை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. காவல் துறை நிபந்தனைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன. அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. குடிநீர் மற்றும் கழிவறைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூட்டத்துக்கு வருவோருக்கு உணவு வழங்கும் திட்டம் ஏதும் இல்லை. திருப்பரங்குன்றம் குறித்து அண்ணாமலை கருத்துக்கு பதில் சொல்ல எங்களுக்கு நேரமில்லை.” என்றார். அதிமுக முக்கிய நிர்வாகிகள் தவெக-வில் இணைய உள்ளனரா? என்ற கேள்விக்குப் பதில் அளித்த செங்கோட்டையன், “பொறுத்திருந்து பாருங்கள். ஒருவரை கட்சியில் இணைக்க வேண்டுமென்றால், சில வழிமுறைகள் இருக்கிறது. தலைவர் விஜய் என்ன கட்டளை இடுகிறாரோ அதன்படி நடைபெறும்”என்றார்.

மக்கள்

சுற்றுலாத்தலமான திடல்…:அசம்பாவிதங்களைத் தவிர்க்க பள்ளிச் சிறுவர், சிறுமியர், கர்ப்பிணிகள், குழந்தைகள் நாளை நடைபெறும் கூட்டத்துக்கு அனுமதி இல்லை என தவெக தலைமையில் இருந்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்நிலையில், பெருந்துறை சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பெண்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்திருந்தனர். அங்கு விஜய் பேசும் இடத்துக்கு அருகில் சென்று செல்பி எடுத்துக் கொண்டனர். அதேபோல், பள்ளி மற்றும் கல்லூரி முடிந்து சீருடையுடன் வந்த மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கூட்டம் நடைபெறும் இடத்தைச் சுற்றிப் பார்த்ததுடன், செல்பி-யும் எடுத்துக் கொண்டனர். நாளை பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்ல வேண்டி இருப்பதால் கூட்டத்துக்கு வருகை தர முடியாது. அதனால், கூட்டத் திடலை பாரத்துச் செல்வதற்காக வந்துள்ளதாக தெரிவித்தனர்.