பொன்முடியை பதறி ஓட வைத்தவர், மயிலம் பக்கம் ஒதுங்குவது ஏன்? – தொகுதி மாறும் சி.வி.சண்முகம்!

பொன்முடி ராஜ்ஜியம்

விழுப்புரம் மாவட்டத்தை சுமார் கால் நூற்றாண்டு காலம் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்து, அங்கு முடிசூடா மன்னனாக வலம் வந்தவர் முன்னாள் அமைச்சர் பொன்முடி. 1989 சட்டமன்றத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பொன்முடி, அதற்கடுத்து வந்த 1991 தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.

அதேசமயம் 1996, 2001, 2006 என அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றிபெற்று தொகுதியை தக்க வைத்துக் கொண்டார். இந்த வெற்றிகள் அவரை கட்சித் தலைமைக்கு நெருக்கமாக அழைத்துச் சென்றதால், ஒட்டுமொத்த விழுப்புரம் மாவட்டமும் அவரது கட்டுப்பாட்டிற்குள் வந்தது.

கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக பிரிக்கப்படுவதற்கு முன்பு வரை, விழுப்புரம் மாவட்டத்தில் பொன்முடி கை காட்டுபவருக்கே சீட்டை ஒதுக்கியது அறிவாலயம்.

பொன்முடி

ஷாக் கொடுத்த சண்முகம்

கண்ணுக்கு எட்டிய தூரம் எங்களுக்கு எதிரிகளே இல்லை என்று வலம் வந்தது பொன்முடி தரப்பு. இந்த நிலையில் 2001, 2006 சட்டமன்றத் தேர்தல்களில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அடுத்தடுத்து வெற்றிபெற்ற திண்டிவனம் தொகுதி, 2011 தேர்தலில் தனித் தொகுதியாக மாறியது.

அதனால் அவரை பொன்முடியின் தொகுதிக்குள் களமிறக்கினார் ஜெயலலிதா. அந்தத் தேர்தலில் 12,097 வாக்குகள் வித்தியாசத்தில் பொன்முடியை வீழ்த்தினார் சி.வி.சண்முகம்.

அதில் பொன்முடி அதிர்ந்துபோனது ஒருபுறமிருக்க, ஆலமரம் என்று நினைத்திருந்த பொன்முடி அட்டைப்பெட்டியாய் சரிந்ததால் வாயடைத்துப் போய் நின்றது அறிவாலயம். சரி… தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம். கட்சியின் மாவட்டச் செயலாளராகவும், அமைச்சராகவும் இருந்து அதிக அனுபவம் பெற்றவர் பொன்முடி.

பதறிப் போன பொன்முடி

அதனால் 2016 தேர்தலில் சி.வி.சண்முகத்தை கண்டிப்பாக தோற்கடிப்பார் என்று நினைத்து அமைதியானது அறிவாலயம். ஆனால் தொகுதிக்குள் சி.வி.சண்முகம் சுழன்ற வேகத்தைப் பார்த்து பதறிப் போன பொன்முடி, 2016 தேர்தலில் திருக்கோவிலூர் தொகுதிக்கு ஓட்டமெடுத்தார்.

கால் நூற்றாண்டு காலம் மாவட்டத்தையே கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர், தொகுதி மாறியதால் கட்சிக்குள் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அதேசமயம் அதற்கடுத்து வந்த 2016 தேர்தலிலும் இரண்டாவது முறையாக விழுப்புரம் தொகுதியில் வெற்றி பெற்றார் சி.வி.சண்முகம்.

இதற்கிடையில் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராகவும், ராஜ்யசபா எம்.பி-யாகவும் இருந்த டாக்டர் லட்சுமணனுக்கும், சி.வி.சண்முகத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், 2021 தேர்தலுக்கு முன்பு தி.மு.க-வில் இணைந்தார் டாக்டர் லட்சுமணன்.

எம்.எல்.ஏ லட்சுமணன்

அந்தத் தேர்தலில் 14,868 வாக்குகள் வித்தியாசத்தில் சி.வி.சண்முகத்தை தோற்கடித்தார் லட்சுமணன். அதற்கடுத்து ராஜ்யசபா எம்.பி-யாக தேர்வு செய்யப்பட்ட சி.வி.சண்முகம், தி.மு.க-வுக்கு எதிராக அவ்வப்போது காரசாரமாக பேட்டிகள் கொடுத்து வந்தார்.

மயிலம் தொகுதியில் மையம்

இந்த நிலையில்தான் யாருமே எதிர்பாராத சூழலில், வரும் தேர்தலில் மயிலம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கிறார் சி.வி.சண்முகம். அதற்குக் காரணம் அவரது சொந்த ஊரான அவ்வையார்குப்பம் அந்தத் தொகுதிக்குள் வருவதாலும், வன்னியர்கள் பெரும்பான்மையாகக் கொண்ட தொகுதி என்பதாலும் அந்தத் தொகுதியை குறி வைத்திருக்கிறார்.

முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்தின் உறவினரான லட்சுமணன், சசிகலா ஆதரவுடன் அ.தி.மு.க-வுக்கு சென்றார். அப்போது சி.வி.சண்முகத்தை ஓரம் கட்டிய சசிகலா, அவரிடம் இருந்த மாவட்டச் செயலாளர் பதவியை பறித்து லட்சுமணனுக்கு கொடுத்தார்.

அரசியல் பரமபதம்

அதே வேகத்தில் ராஜ்யசபா எம்.பி பதவியும் வழங்கப்பட்டதால், கட்சியில் அவரின் கை ஓங்க ஆரம்பித்தது. அதனால் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்களிடம் இருந்த பதவிகள் பறிக்கப்பட்டு, லட்சுமணனின் ஆதரவாளர்களுக்கு வழங்கப்பட்டது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தர்மயுத்தம் நடத்திய ஓ.பி.எஸ்சுக்கு முதல் ஆரவுக்கரம் நீட்டிய மாவட்டச் செயலாளர் லட்சுமணன்தான்.

அதன்பிறகு ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இணைப்பு நிகழ்ந்தவுடன், லட்சுமணனிடம் இருந்து அனைத்துப் பதவிகளையும் பறித்து மீண்டும் சி.வி.சண்முகத்திடம் கொடுத்தார் இ.பி.எஸ். அதன்பிறகு அரசியல் பரமபதத்தில் சடாரென கீழே இறங்கினார் லட்சுமணன். அதையடுத்து அவர் மேலே வருவதற்கான சிறு வாய்ப்பைக் கூட சி.வி.சண்முகம் தரப்பு தரவில்லை.

முதலமைச்சர் ஸ்டாலினுடன் எம்.எல்.ஏ லட்சுமணன்

இனி அ.தி.மு.க-வில் தொடர்ந்தால் நம் அரசியல் பயணம் முடிவுக்கு வந்துவிடும் என்று புரிந்து கொண்ட லட்சுமணன், 2021 தேர்தலுக்கு முன்பு தி.மு.க-வுக்குத் தாவினார். அந்தத் தேர்தலில் சி.வி.சண்முகத்தை வீழ்த்தினார் லட்சுமணன்.

பொன்முடியாலேயே வீழ்த்த முடியாத சி.வி.சண்முகத்தை வீழ்த்தியதால், அறிவாலயத்தின் குட்புக்கில் இடம்பிடித்தார் லட்சுமணன். அதன் பயனாக விழுப்புரம் மத்திய மாவட்டப் பொறுப்பாளர் பதவியை வழங்கியது அறிவாலயம். தி.மு.க-வில் லட்சுமணனின் கை ஓங்கியதையடுத்து, அ.தி.மு.க-வில் இருந்த பல முக்கிய நிர்வாகிகள் அவரிடம் ஐக்கியமாகி விட்டார்கள்.

இப்படியான சூழலில் இங்கு போட்டியிட்டால் அது கௌரவமான தோல்வியாகக் கூட இருக்காது என்பதால்தான், மயிலம் தொகுதிக்கு ரூட்டை திருப்பியிருக்கிறார் சி.வி.சண்முகம்.!