“ஆப்ரேஷன் சிந்தூர்: முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டோம்?” – காங்கிரஸ் தலைவரின் கருத்தும் பாஜக பதிலும்!

ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதத் தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக மே 7 அன்று இந்தியா ‘ஆபரேஷன் சிந்துர்’ என்ற ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இருந்த பயங்கரவாத உள்கட்டமைப்புகளை இந்த நடவடிக்கை மூலம் நிர்மூலமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று காங்கிரஸ் தலைவரும், மகாராஷ்டிர முன்னாள் முதல்வருமான பிருத்விராஜ் சவான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கிறது.

பிருத்விராஜ் சவான்
பிருத்விராஜ் சவான்

அதற்கு பதிலளித்த அவர், “ஆபரேஷன் சிந்துரின் முதல் நாளில், நாம் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டோம். 7-ம் தேதி நடந்த அரை மணி நேர வான்வழி மோதலில், மக்கள் ஏற்றுக்கொண்டாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, நாம் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டோம்.

இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. விமானப்படை முற்றிலும் முடக்கப்பட்டிருந்தது. ஒரு விமானம் கூட பறக்கவில்லை. குவாலியர், பதிண்டா, சிர்சாவிலிருந்து ஏதேனும் விமானம் புறப்பட்டிருந்தால் அது பாகிஸ்தானால் சுட்டு வீழ்த்தப்படுவதற்கான அதிக வாய்ப்பு இருந்தது. அதனால்தான் விமானப்படை முழுமையாக முடக்கப்பட்டிருந்தது.

மேலும் ஆபரேஷன் சிந்துர் நடவடிக்கையில் வான்வழி மற்றும் ஏவுகணைப் போர் மட்டுமே இடம்பெற்றது. ஆயுதப் படைகளின் தரைவழி நகர்வுகள் ஒரு கிலோமீட்டர்கூட இல்லை என்பதை நாம் கண்டோம்… இரண்டு அல்லது மூன்று நாட்களில் நடந்தவை அனைத்தும் வான்வழிப் போர் மற்றும் ஏவுகணைப் போர் மட்டுமே.

எதிர்காலத்திலும் போர்கள் இதே வழியில்தான் நடத்தப்படும். இத்தகைய சூழ்நிலையில், 12 லட்சம் வீரர்களைக் கொண்ட ஒரு ராணுவத்தை நாம் பராமரிக்க வேண்டுமா? அல்லது அவர்களை வேறு சில வேலைகளைச் செய்ய வைக்கலாமா?” எனக் கேட்டார்.

ஷேசாத் பூனாவாலா
ஷேசாத் பூனாவாலா

காங்கிரஸ் தலைவரின் கருத்துக்கு பதிலளித்த பாஜக செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா, “ராணுவத்தை அவமதிப்பது காங்கிரஸ் கட்சியின் அடையாளமாகிவிட்டது… இது பிரித்விராஜ் சவானின் அறிக்கை மட்டுமல்ல. ராகுல் காந்தியும் இதே போன்ற அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கைகள் அனைத்தும் ராகுல் காந்தியின் மனநிலையை பிரதிபலிக்கின்றன, அதனால்தான் ராகுல் காந்தியோ அல்லது காங்கிரஸ் கட்சியோ இதுபோன்ற அறிக்கைவிடும் தலைவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை…

இந்த அறிக்கைகள் அவர்களின் ராணுவ எதிர்ப்பு மனப்பான்மையை வெளிப்படுத்துகின்றன. ராணுவத்தை அவமதித்த அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிருத்விராஜ் சவான்,“ஆபரேஷன் சிந்துர்’ குறித்த எனது கருத்துக்களுக்காக நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? கேள்விகள் கேட்கும் உரிமையை எனக்கு அரசியலமைப்புச் சட்டத்தால் வழங்கப்பட்டுள்ளது. என் கேள்வியில் தவறு இருந்தால்தானே மன்னிப்பு கேட்க வேண்டும்.” என்றார்.