தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகர்மன்ற கூட்டம் நகர்மன்ற அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் தி.மு.க நகர்மன்ற தலைவி ராமலட்சுமி தலைமையில் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் மொத்தம் 51 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு, அவற்றின் மீது அதிமுக, தி.மு.க கவுன்சிலர்களிடையே காரசார விவாதமும் நடந்தது.
அப்போது அ.தி.மு.க, பா.ஜ.க கவுன்சிலர்கள் 44-வது தீர்மானத்தில் செங்கோட்டையில் உள்ள மின்மயான ஒப்பந்தத்தை குறிப்பிட்ட தொண்டு நிறுவனத்திற்கு வழங்கக்கூடாது என்றும், அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

அதற்கு தி.மு.க நகர்மன்ற தலைவி ராமலட்சுமி அதனை ஏற்காமல் அ.தி.மு.க, பா.ஜ.க கவுன்சிலர்களிடையே கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் அந்த தீர்மானத்தை ரத்து செய்யலாமா? என அ.தி.மு.க கவுன்சிலர்கள் கேட்டதற்கு அவர் சைகை மூலம் தலையசைத்தார்.
அப்போது செங்கோட்டை மின்மயான ஒப்பந்தம் தொடர்பாக வாக்குவாதம் நடந்த போது, 1-வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலர் சுப்பிரமணியன் இருக்கையிலிருந்து எழுந்து தனது கருத்தை கூற வந்த கவுன்சிலரை ‘இங்கு வந்து சொல்லக்கூடாது. வேண்டுமானால் வெளியே போகலாம்’ என்று நகர்மன்ற தலைவி கூறினார்.

‘அதைச் சொல்ல நீ யார்?’ என அந்த கவுன்சிலர் திரும்ப தலைவியை பார்த்து கேட்டபோது, ‘யாரைப் பார்த்து நீ என்று சொல்கிறாய், செருப்பால் அடிப்பேன்’ என்று அதிமுக கவுன்சிலரை பார்த்து தி.மு.க நகர்மன்ற தலைவி கூறினார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் கூட்டத்தை பாதியில் விட்டுவிட்டு வெளியே செல்ல முற்பட்டபோது, அதிமுக, பா.ஜ.க கவுன்சிலர்கள் அவரை சூழ்ந்து கொண்டு அறை கதவுகளை அடைத்து, ‘கூட்டத்தை நடத்தி முடித்து விட்டு வெளியே செல்லுங்கள்’ என்று கூறினர். அதன் பின்னர் சிறிது நேரம் பரபரப்புக்குப் பிறகு கூட்டம் நடந்தது.
